• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவிமயத்தை தடுப்போம், எடப்பாடி அரசை விரட்டுவோம்.. திமுக மா. செ. கூட்டத்தில் தீர்மானம்!

|
  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள்- வீடியோ

  சென்னை: ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  தீர்மானம் : 1

  காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்!

  "கருப்புப் பணத்தை மீட்டெடுத்து, நாட்டில் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாயை வரவு வைப்போம்; ஒவ்வோராண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவோம்; விவசாயிகளின் விளைபொருள்களுக்கான விலையை இரண்டு மடங்கு உயர்த்துவோம்; நாட்டின் முன்னேற்றம் - நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவோம்" என்று மக்களை மயக்கிடும் வாக்குறுதிகளை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அள்ளி வீசி, மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, பதவியேற்ற நாள் முதலே, நாட்டின் பன்முகத்தன்மையை நசுக்கிடும் அனைத்து நடவடிக்கைகளிலும் அச்சம் - நாணமின்றி ஈடுபட்டு வருவதுடன்; மாநில உரிமைகளைப் பறிப்பதிலும், கூட்டாட்சித் தத்துவத்திற்குக் குழி பறிப்பதிலும் - குறிப்பாக, தமிழ்நாட்டு நலன்களையும், செம்மொழியாம் தமிழ் மொழியையும் முற்றிலும் புறக்கணிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டும் வருகிறது.

  This is the 8 resolutions passed by the DMK

  நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன், கதிராமங்கலத்தில் எண்ணெய்க் குழாய் பதிப்பது, கடலூர் - சீர்காழி - நாகைப் பகுதியில், "பெட்ரோ கெமிக்கல் மண்டலம்" உருவாக்குவது, தேனியில் நியூட்ரினோ, மேற்கு மாவட்டங்களில் கெயில் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பது, 13 மாவட்டங்களில் விவசாயிகளின் அனுமதி பெறாமலேயே விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை அமைப்பது உள்ளிட்ட வேளாண்மை - விவசாயிகள் விரோதத் திட்டங்களைத் திணித்து, இலட்சக்கணக்கான விளை நிலங்களை அழித்து, கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபக் கனவுகளை நிறைவேற்றிட, தமிழகத்தைப் பாலைவனமாக்கவும், சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து ஆபத்து மிக்கதாக மாற்றவுமான எதிர்மறைத் திசையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

  இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் உரிய காரணமின்றிக் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்த்து, மீன்பிடிக்கச் செல்வோருக்குக் கடும் அபராதங்களை விதிக்கும் சட்டத்தை உருவாக்கும் இலங்கை அரசைத் தட்டி கேட்கும் தார்மீகக் கடமையை மறந்து; தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் பரிதாபகரமான நிலை பற்றிக் கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து; மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் போன்ற தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து; வேதாந்தா குழுமத்தின் மீதுள்ள வாஞ்சையினால், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உரிய தீர்வு காணாதிருந்து, கூடங்குளம் அணு உலையால் மக்களின் உயிருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இருக்கும் ஆபத்தைச் சரி செய்ய மறுத்து; நிரபராதிகளான தமிழக மக்களின் மீது, ஒரு கொடூரமான தாக்குதலை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தொடுத்து வருகிறது.

  This is the 8 resolutions passed by the DMK

  மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கும் எதிர்காலத்தில் நுழைவுத் தேர்வு, மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் கூட நுழைவுத் தேர்வு என்று "எங்கும் எதற்கும் நுழைவுத் தேர்வு" மயமாக்கி, உயர்கல்வியைப் பாழாக்கி, நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக்கி, இந்தியாவிற்கே "சமூக நீதி"யின் தொட்டிலாக விளங்கும் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குத் தொடர் அச்சுறுத்தலை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராகவும், முன்னேறிய சமுதாயத்தினர்க்கு ஆதரவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மத்தியில் உள்ள முதலாளித்துவ பா.ஜ.க. அரசு.

  மாநிலத்தின் கல்வி உரிமை பறிப்பு, 15ஆவது நிதிக் குழுவின் மூலம் நிதி தன்னாட்சி உரிமை பறிப்பு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் மான்யங்கள் படிப்படியாக ஒழிப்பு, "உதய்" திட்டத்தின் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரத்தைச் செயலிழக்கச் செய்யும் முயற்சி, மின்கட்டண உயர்வுக்கு அச்சாரம், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இறக்குமதி, சென்னை பெருவெள்ளம், கடும் வறட்சி, வர்தா புயல், ஒகி புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க மறுப்பு, காவிரி, பாலாறு உள்ளிட்ட அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்தை வஞ்சித்தல் என்று, மாநிலத்தின் உரிமைகள் பா.ஜ.க. அரசின் சர்வாதிகார மனப்பான்மையினால், ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டுள்ளன.

  This is the 8 resolutions passed by the DMK

  நமது அன்னைத் தமிழ் மொழிக்கு உள்ள அந்தஸ்தை மத்தியில் அளிக்க மறுத்து, வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு வரவேற்பு கூறி, இந்தி மொழிக்கு அரியணை அமைத்துக் கொடுத்து; நீரவ் மோடிகள் கோடி கோடியாகக் கடன்களை பெற்றுக் கொண்டு பா.ஜ.க.வின் கண்ணசைவில் தப்பிச் செல்லும் வேளையில், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சம் காட்டுவது என்று

  மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது என்று மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

  தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசு, பன்முகத் தன்மையைப் பலியிட்டு, மதவெறிக்கு பச்சைக் கொடி காட்டி, பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், பா.ஜ.க.விற்கு எதிரெண்ணம் கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் தேச விரோதிகள் என்று சித்திரிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதும் - கைது செய்யப்படுவதும், ஆங்காங்கே தலித் மற்றும் சிறுபான்மையினத்தவர் குழுக்களாகக் கொலை செய்யப்படுவதும், தாராளமாக அரங்கேறி வருகின்றன. மேலும், பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் தொலைக்காட்சிகள் மிரட்டப்பட்டு, பத்திரிகை ஆசிரியர்கள் நீக்கப்பட்டு கருத்து சுதந்திரம், பேச்சுரிமை நசுக்கப்பட்டு, ஒர் "அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை"யை உருவாக்கி; மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்றுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, பாராளுமன்ற ஜனநாயகத்திற்குச் சவாலாக, தேர்தல் பின்னணி கொண்ட சர்வாதிகாரத்தை (Electoral Dictatorship) நிறுவி, கடந்த நான்காண்டுகளாக பா.ஜ.க. வெகுமக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது.

  இந்தியத் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. என, சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.க.வின் கைப் பாவைகளாக மாற்றப்பட்டு விட்டன. உச்சநீதிமன்றத்திற்கே நெருக்கடி ஏற்பட்டு, நான்கு மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகவே ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் அசாதாரணமான நிகழ்வுகள் பா.ஜ.க. ஆட்சியில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விட்டன.

  This is the 8 resolutions passed by the DMK

  பா.ஜ.க. ஆட்சியில் அவசர கதியில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, குளறுபடியான சரக்கு மற்றும் சேவை வரி, டாலருக்குச் சமமான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வளர்ந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கச் சூழல், ரபேல் விமான ஊழல் உள்ளிட்ட பா.ஜ.க. அமைச்சர்களின் பல்வேறு ஊழல்கள், பெருகி வரும் வாராக் கடன்கள், கட்டுப்பாடற்ற வங்கி மோசடிகள் - போன்றவை இந்தியப் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டு விட்டன.

  தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், இரவு பகலாக அரும்பாடுபட்டு பகுத்தறிவுக் கருத்துகளையும், தன்மான - சுயமரியாதை உணர்வுகளையும் விதைத்து வளர்த்து, மதத் தீவிரவாத சக்திகள் நுழைய முடியாதபடி, பண்படுத்தியுள்ள மண் இந்தத் தமிழ் மண். அந்த மண்ணின் பாரம்பரியப் பெருமையை மாய்த்து, மதவெறிப் பிரச்சாரங்கள் மூலமாகவும், மாநிலத்தில் உள்ள பினாமி அ.தி.மு.க அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்தியும், திராவிட இயக்க சிந்தனை மற்றும் மதவெறிக்கு மாற்றுச் சிந்தனை கொண்டோர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு நனவாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் அனுமதிக்காது என்று மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.

  This is the 8 resolutions passed by the DMK

  அதேபோல, உலகத்தில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அரசியல் சட்டத்தின் முகவுரையில் (Preamble) சொல்லப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் என்ன விலை கொடுத்தேனும் ஒருசேரப் போற்றிப் பாதுகாத்திட திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி பூண்டுள்ளது. ஆகவே, ஒருமனதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவுடன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில், "இந்தியா முழுவதும் காவி மயமாக்கும் பா.ஜ.க.விற்குப் பாடம் புகட்டுவோம்" என்ற முழக்கத்தை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மனப்பூர்வமாக வரவேற்று, பதிவு செய்து; பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திடத் தேவையான செயல் திட்டங்களையும், களப் பணிகளையும், வகுத்தும் தொகுத்தும் அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானித்துச் சபதமேற்கிறது!

  தீர்மானம் : 2

  ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதியோம்!

  தமிழகத்தில் நடைபெறும் பினாமி அ.தி.மு.க ஆட்சி, மக்களுக்கு "இன்னல்களின் இருண்ட குகையாக" இருக்கிறது. தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு - குறு தொழில் முனைவோர், ஏழை எளியோர், நடுத்தரப் பிரிவினர் என அனைத்துத் தரப்பு மக்களும், சொல்லி மாளாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு, கொலை, கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பின்மை, பட்டாக் கத்திகளுடன் ரவுடிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங

  ்கள், கூலிப்படை நடத்தும் கொடூரக் கொலைகள், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி உயிர் படுகொலை என்று மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, அ.தி.மு.க ஆட்சியில் மலினப் பொருளாகி, சந்தி சிரிக்கும் அளவுக்கு சரிந்து, சீர்கெட்டு, காவல்துறையினர் சிலர் ஆளும் கட்சிக்கு அடிவருடிகளாகி, காவல்துறை, முற்றிலும் நிர்வாகச் சீர்கேட்டிலும், குற்றச்சாட்டுக்கு உட்பட்டுள்ள தலைமையின்கீழ் தத்தளித்துக் கொண்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள்மீதே தாக்குதல் நடக்கும் அளவிற்கு தமிழக காவல் துறையின் மாண்பு இந்த ஆட்சியில் களங்கமடைந்து விட்டது. பெண் எஸ்.பி.யே பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு, காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலைமை, துறையில் பெருகிவரும் சுயநலத்தால் நடுநிலை தள்ளாட்டம் போன்ற பின்னடைவுகள் இன்றைக்கு தமிழக காவல் துறையில் அ.தி.மு.க அரசால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளது.

  நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், எல்.ஈ.டி. டெண்டர் ஊழல், உள்ளாட்சித் துறையில் தனது உறவினர்களுக்கே பல்லாயிரக்கணக்கான மதிப்பில் டெண்டர் வழங்கிய ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், பேருந்து வாங்குவதில் ஊழல், போலீஸ் துறைக்கும் மற்றும் மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், 250 கோடி ரூபாய்க்கு மேல் கல்குவாரி ஊழல், ஆர்.கே. நகரில் 89 கோடி ரூபாய் விநியோக ஊழல், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியுள்ள அமைச்சர்களின் ஊழல், சேகர் ரெட்டி டைரி ஊழல், குட்கா டைரி ஊழல், கமிஷன் ஊழல், அண்ணா பல்கலைக் கழக மதிப்பெண் ஊழல் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் என்று ஊழலுக்காக, ஊழல் பேர்வழிகளால், ஊழல் நடைமுறைகளையே பின்பற்றி, அ.தி.மு.க அரசு ஊழல் அரசாக நடைபெற்று வருகிறது.

  முதலமைச்சரும் - துணை முதலமைச்சருமே லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் விசாரணைக்கு உள்ளாகி, அமைச்சரவையில் ஊழல் கறைபடியாத அமைச்சர்களே இல்லை என்ற கேவலமான நிலை ஏற்பட்டு, ஊழல் - இலஞ்சம் - கொள்ளை ஆகியவற்றின் மொத்த உருவமாக அ.தி.மு.க ஆட்சி வெட்கமேதும் இன்றி ஊர்ந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு இணங்க மறுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பந்தாடுவது, பொய் வழக்குப் போட மறுக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றுவது - இவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் அரசுக்கு ஆலவட்டம் சுற்றுபவர்களாக இருப்பது போன்ற கீழ்மை நிலையால், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நிர்வாக சுதந்திரம் பறிக்கப்பட்டு, எந்தவொரு அரசுத் துறைக்கும் சட்டப்படி தகுதியான வழிகாட்டுதலை வழங்க முடியாமல், அரசு நிர்வாகம் அப்படியே ஸ்தம்பித்து, குழம்பிய குட்டையாகி, மாநிலத்தின் முன்னேற்றமும், மக்கள் நலனும் முற்றாக மறுக்கப்பட்டு விட்டன. "வெற்று அறிவிப்புகள்", "வெட்டிப் பேச்சுகள்", "வீண் நகைச்சுவைக் கருத்துகள்" மட்டுமே அமைச்சர்களின் "நிர்வாகத் திறமை" என்ற புதிய இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

  நீட் தேர்விற்கு விலக்குப் பெற முடியாமல், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தினால் ஏற்பட்ட இழப்பினைப் பெற இயலாமல், நிதிக் குழுவின் மூலம் நியாயமாகக் கிடைத்திட வேண்டிய நிதியைக்கூட வாதாடிப் பெற வக்கில்லாமல், வந்து சேர வேண்டிய மான்யங்கள் அனைத்தையும் இழந்து, இன்றைக்கு தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி, கடும் "நிதி நெருக்கடியில்" கலங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

  காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே அமல்படுத்த விடாமல், "பல் இல்லாத காவிரி மேலாண்மை ஆணைய"த்தை அமைக்கத் துணை போன விவகாரம், பாலாறு தடுப்பணை கட்டும் விவகாரம், மேகதாது அணை கட்டும் விவகாரம் போன்ற எந்தப் பிரச்சினையிலும், அண்டை மாநில முயற்சிகளைக் கண்டு கொள்ளாமல், மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு மாநிலத்திற்குத் துரோகம் செய்திருக்கிறது அ.தி.மு.க அரசு. தமிழகத்தின் எந்தவொரு நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கோ, ரயில்வே திட்டங்களுக்கோ, வளர்ச்சித் திட்டங்களுக்கோ, இயற்கைப் பேரிடர்களுக்கோ உரிய நிதியைப் பெற முடியாமல், ஒட்டுமொத்த மாநில உரிமைகளையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து விட்டு, பதவியில் நீடித்தால் போதும் என்ற நிலையில் அ.தி.மு.க அரசு, அடிமைச் சாசனம் எழுதிவிட்டு நெடுஞ்சாண்கிடையாக பதவியில் நெளிந்து கொண்டிருக்கிறது.

  இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, கமிஷன் பிரச்சினையால் எவ்வித புதிய தொழிற்சாலைகளும் தமிழகத்தில் நுழைய முடியவில்லை, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறவில்லை, மத்திய பா.ஜ.க. அரசின் "இந்தித் திணிப்பில்" இருந்து அன்னைத் தமிழைப் பாதுகாத்திட இயலவில்லை என்பவற்றோடு; எண்ணற்ற வழக்குகள் தேங்கிக் கிடந்தும் நீதித்துறையுடன் ஒருங்கிணைந்து அவற்றிற்குத் தீர்வு காண முடியாமல் திணறும் சூழ்நிலை, "உப்பா" உள்ளிட்ட கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி பா.ஜ.க.விற்கு எதிராகக் கருத்து சொல்வோரை அ

  டக்க நினைக்கும் அராஜக நிலைமை, கருத்துச் சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் மாணவி வளர்மதி, சோபியா போன்றவர்கள் மீது வழக்கு போன்ற எண்ணற்ற நோய்களையும் வலிந்து சென்று வரவழைத்துக் கொண்டு விட்டது அ.தி.மு.க. அரசு. அதேநேரத்தில் பா.ஜ.க. வின் ஏவல் எடுபிடியாக இருந்து வரும் அ.தி.மு.க அரசு, மதவாதத்திற்கும், மதவெறிக் கொள்கைகளுக்கும் துணை போகின்ற வகையில் செயல்படுகிறது.

  "முதுகெலும்பு இல்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்" என்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறைகூவலுக்கு, ஆக்கம் சேர்க்கும் செயல் திட்டங்களில் ஈடுபட்டு, ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், திண்ணையிலும் மக்களை நேரடியாகச் சந்தித்து, மாநில வளர்ச்சியை இருபது வருடங்களுக்கு பின்னால் இழுத்துக் கொண்டு போய்விட்ட, மக்கள் விரோத - ஜனநாயக விரோத அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை எடுத்து விளக்கி, அவர்களை வீட்டுக்கு அனுப்ப, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பட்டாளச் சிப்பாய்களாகக் களம் இறங்கி நாள்தோறும் காரியமாற்றுவதென, மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம், திடசித்தத்துடன் தீர்மானிக்கிறது.

  தீர்மானம் : 3

  வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்!

  நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு அடிப்படை அம்சமாக விளங்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் 01.09.2018 முதல் 14.10.2018 வரை, பல்வேறு கட்டங்களில், தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதை யொட்டி, வாக்காளர் பட்டியல் கிராம சபைக் கூட்டங்களிலும், சிறப்பு முகாம்களிலும் திருத்தம் செய்யப்படுகின்றன. வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஏற்கனவே தலைமைக் கழக அறிவிப்பில் வெளியிட்டவாறு பின்வரும் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது:

  1) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் பெயர் மாற்றுதல் தொடர்பான படிவம் பெறுதல்: 01.09.2018 முதல் 31.10.2018 வரை.

  2) வாக்காளர் பட்டியலை., கிராம சபைக் கூட்டம் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து திருத்தம் செய்வது: 08.09.2018, 22.09.2018, 06.10.2018 மற்றும் 13.10.2018

  3) சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 09.09.2018, 23.09.2018, 07.10.2018, 14.10.2018 ஆகவே, இந்தத் தேதிகளில் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பினை, முறையாகவும் கட்டாயமாகவும் பயன்படுத்திக் கொண்டு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்களின் மாவட்டங்களில் உள்ள கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மூலம் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் பெயர் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளில், மிகுந்த கவனத்துடன் ஈடுபட வேண்டுமென்று மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

  கிராம சபைக் கூட்டங்கள், மற்றும் சிறப்பு முகாம்களிலும் கழக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அவசியம் பங்கேற்று, ஆளுங்கட்சியினரின் போலி வாக்காளர் பதிவு முயற்சிகளைத் தடுத்து, நேர்மையான - நியாயமான வாக்காளர் பட்டியல் இறுதி வடிவம் பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமான முறையில் மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங் கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை - சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களை கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் : 4

  காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்;

  கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை !

  அ.தி.மு.க. ஆட்சியில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்பது தொடர்கதை ஆகிவிட்டாலும், கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாகத் திறந்து விடப்பட்ட மிகை நீரால், மூன்று முறைக்கு மேல் மேட்டூர் அணை நிரம்பி, 19.07.2018 அன்று காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

  அணைகள் மற்றும் பாலங்கள் பராமரிப்பிலும், நீர் மேலாண்மையிலும் அ.தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட தோல்வியால், கொள்ளிடம் பாலம் சரிந்து விழுந்து, திருச்சி முக்கொம்பு அணையின் 9 மதகுகளும் உடைந்து, விவசாயத்திற்குப் பயன்பட வேண்டிய அரிய காவிரி நீர் வீணே கடலில் கலந்துவிட்டது என்பது விவரிக்க முடியாத வேதனை. 5000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து "

  தூர் வாரி விட்டோம், அணைகளைச் சீரமைத்து விட்டோம்" என்று சவடால் அடித்து, சாதுரியமாக ஊழல் செய்த அ.தி.மு.க அரசால், அடுத்தடுத்து கொள்ளிடம், முக்கொம்பு என்று சேதமடையும் அதிர்ச்சி தரும் அபாயம் ஏற்பட்டதை, இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

  மணல் கொள்ளையால் முக்கொம்பு அணைக்கு ஆபத்து என்று பொதுநல வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும்கூட, அணையை ஆய்வு செய்யாமல், கோட்டையில் குறட்டை விட்ட அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் உடைந்த மதகுகளை, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் முதல் காரியமாக, விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்திப் பார்வையிட்டதையும்; 47 நாட்களுக்கும் மேலாக காவிரி டெல்டாவில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேரவில்லை என்பதால், விழிநீர் பெருக்கி நிற்கும் விவசாயிகளை 3.9.2018 அன்று நேரில் சந்தித்து, அவர்தம் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், பரிவோடு ஆறுதல் கூறியதையும் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மனப்பூர்வமாக வரவேற்று, பதிவு செய்கிறது.

  கடைமடைப் பகுதிகளுக்கு மேலும் தாமதமின்றி, காவிரி நீர் முறைப்படி செல்லவும், வருங்காலத்தில் காவிரிநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தவும், அ.தி.மு.க அரசு ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை விரைந்து வகுத்து, நடைமுறைப்படுத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

  தீர்மானம் : 5

  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்க!

  முன்னாள் பிரதமர் இளந்தலைவர் திரு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் வரவேற்கிறது.

  இந்த ஏழு பேரையும் அரசியல் சட்டப் பிரிவு 161-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரம்ப நிலையிலிருந்தே தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வந்ததையும், அதே கருத்தினை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருப்பதையும் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.

  அரசியல் சட்டத்தின் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் இவர்களை எல்லாம் விடுவிக்க முயன்று, மத்திய அரசுடன் தேவையில்லாத சட்டப் போராட்டத்திற்கு அ.தி.மு.க அரசு வித்திட்டதால், இந்த ஏழுபேரின் விடுதலை ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கும் மேலாக தாமதப்பட்டு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதற்கொப்ப, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

  இந்நிலையில் இப்போது அளிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், உடனடியாக அ.தி.மு.க அரசு, அரசியல் சட்டப் பிரிவு 161-ன்கீழ் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 26 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்திடும் வகையில் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பிட வேண்டும் எனவும், அமைச்சரவையின் அந்தத் தீர்மானத்தின் மீது, தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ஆணை பிறப்பித்திட வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

  தீர்மானம் : 6

  பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து,

  10ஆம் தேதி நடைபெறும் "பாரத் பந்த்" வெற்றி பெற ஒத்துழைப்போம்!

  மத்திய பா.ஜ.க. ஆட்சியில், மக்களின் நலன் பற்றி சிறிதும் கவலைப்படாமல், பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு வருவதற்கு, மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதும், அதன் பலன் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கோ, சிறு-குறு தொழில்களுக்கோ, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப் படுத்துவதற்கோ போய்ச் சேர்ந்து விடாமல், பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவதில் மட்டுமே பா.ஜ.க. அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருவழிப் பாதையிலேயே, அக்கிரமமாகச் செயல்பட்டு வருவதால், இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய் 13 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 76 ரூபாய் 17 காசுகளுமாக, எட்டாத உயரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.

  கலால் வரியைக் குறைக்கவும் மத்திய அரசோ; தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது விற்பனை வரியைக் குறைக்க எடுத்த நடவடிக்கை போல் இப்போதுள்ள அ.தி.மு.க அரசோ; அக்கறையுடன் முன்வரவில்லை என்பதற்கு மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

  பா.ஜ.க.வுக்கு சாதகமான மாநிலங்களில்கூட, தேர்தல் வந்தால் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்தும், தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலையை உயர்த்தியும், பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து விஷம் போல் உயர மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே காரணமாக இருக்கிறது. விலையேற்றத்தைக் குறைக்கவோ, ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தவோ மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல், வேதனைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் மக்களை வீதியில் நின்று போராடும் நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது. ஆகவே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில், செப்டம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய "பாரத் பந்திற்கு" ஆதரவளித்து மனப்பூர்வமாக ஒத்துழைப்பதென தி.மு.கழகத்தின் சார்பில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

  எனவே, அந்த பந்த் முழுமையான வெற்றி பெற்றிடும் வகையில், கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும் என்றும்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், தாய்மார்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் தன்னார்வத்துடன் பங்கேற்று, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு தக்க பாடம் புகட்டிட முன்வர வேண்டும் என்றும்; மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்தி, அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

  தீர்மானம் : 7

  குட்கா ஊழலில் கொழித்த அமைச்சரை "டிஸ்மிஸ்" செய்க! டி.ஜி.பியைப் பதவி நீக்கம் செய்க!

  சமுதாயத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் போதைப் பொருளான "குட்கா" தொடர்புடைய "ஊழல் டைரியில்" இடம் பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகரக் காவல் ஆணையர் திரு ஜார்ஜ், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் இல்லங்களிலும் "சி.பி.ஐ. ரெய்டு" நடத்தியிருப்பது தமிழகத்திற்கு, துடைக்கவே முடியாத களங்கத்தை மட்டுமல்லாமல், மறக்க முடியாத தலைகுனிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. குட்கா ஊழலை மறைப்பதற்கு அ.தி.மு.க ஆட்சியில் இருந்த மூன்று முதலமைச்சர்களும், இரண்டு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்தும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த வழக்கின் காரணமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், "குட்கா வழக்கு" சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு பரபரப்பான இந்த சோதனைகளும், கைதுகளும் நடைபெற்று வருகின்றன.

  குட்கா குடோன் அதிபரிடமிருந்து தேதி வாரியாக லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகளையும், அமைச்சர் திரு.விஜயபாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக, வருமான வரித் துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க முற்பட்ட டி.ஜி.பி. திரு.அசோக்குமாரை இரவோடு இரவாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்தக் கடிதத்தை காணாமல் போக்கிய தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவை வரிந்து கட்டிக் கொண்டு காப்பாற்றினார்கள். பிறகு அந்த வருமான வரிக் கடிதம் காணவில்லை என்று தமிழகத்தின் தலைமைச் செயலாளார் திருமதி கிரிஜா வைத்தியநாதன் அவர்களே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். சென்னை மாநகர ஆணையராக இருந்த திரு ஜார்ஜ் மூலம், குட்கா டைரியில் சுட்டிக்காட்டப்பட்ட அமைச்சர் மற்றும் டி.ஜி.பி.களின் பெயர்களைத் தவிர்த்து விட்டு, வேறு சில காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி கடிதம் எழுத வைத்தார்கள். மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால், அவர் யாருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி என்பதால், விசாரணை அமைச்சரையும், டி.ஜி.பி.க்களையும் நெருங்கி விடுமோ என்ற அச்சத்தில், விஜிலென்ஸ் ஆணையர் திரு.வி.கே.ஜெயக்கொடி அவர்களை மாற்றினார்கள். டி.ஜி.பி.க்கள் மற்றும் அமைச்சர் பெயரைச் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடி உருவான போது, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனராக இருந்த திரு.மஞ்சுநாதாவையும் தூக்கியடித்தார்கள்.

  சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சுகாதாரத்துறை கடைநிலை ஊழியரைத் தூண்டி விட்டு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து "குட்கா குற்றவாளிகளை"க் காப்பாற்ற முயற்சித்தார் முதலமைச்சர். ஆகவே, குட்கா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க முதலமைச்சரும், இவருக்கு முன்பு இருந்த திரு.ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் பதவி அதிகாரத்தை, உள்நோக்கத்துடன் சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார்கள்.

  இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின

  ் இறுதித் தீர்ப்பால், குட்கா வழக்கில் சி.பி.ஐ., குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்டவர்களை விசாரித்துள்ளது. அதில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் மாநகர ஆணையர் திரு.ஜார்ஜ், டி.ஜி.பி. திரு.டி.கே. ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறது; போலீஸ் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் லஞ்சப் பணம் கொடுத்த தரகர்களை இப்போது சி.பி.ஐ கைது செய்திருக்கிறது.

  குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆரம்ப கட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ள பிறகும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறைத் தலைவர் திரு. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யாமல் ஒட்டிக்கொண்டிருப்பது தமிழகத்திற்குப் பெரிய தலைகுனிவு.

  தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் பதவியிலிருக்கும் டி.ஜி.பி. வீட்டில்,பூர்வாங்க ஆதாரங்களின் அடிப்படையில், சி.பி.ஐ. சோதனை நடத்தியிருப்பது இதுவே முதல்முறை. குட்கா ஊழல் நடைபெற்றது உண்மை என்று சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த திரு.ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்குப் பிறகும் சுகாதரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் பதவியில் தொடருவது, அடிமை விலங்குடன் இருக்கும் அ.தி.மு.க அரசுக்கு வேண்டுமானால், வெட்கக்கேடாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அ.தி.மு.க அரசு இழைத்திருக்கும் மாபெரும் அவமானமாக மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

  தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ன் கீழ் உள்ள பிரிவு 3(3)(e)ன் படி "பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட டி.ஜி.பி.யை நிர்வாகக் காரணங்களுக்காகப் பதவியிலிருந்து விடுவிக்கலாம்" (DGP can be relieved of his post for administrative reasons to be recorded in writing) என்று தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. டி.ஜி.பி. மீதான சி.பி.ஐ நடவடிக்கை, "நிர்வாகக் காரணத்தின்" கீழ் வருகிறது. இந்நிலையில் அமைச்சர் திரு.விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்தும், டி.ஜி.பி திரு.டி.கே.ராஜேந்திரனை உடனடியாக டி.ஜி.பி. பதவியிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டு நியாயமான விசாரணைக்கு வழிவகுத்திட வேண்டும் என்றும்; இந்த அசாதாரண நிகழ்வை ஆளுநர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

  தீர்மானம் : 8

  ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில்

  தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில்

  வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி தி.மு.கழகத்தின் சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்"

  மத்திய வருமானவரித் துறை ஆய்வின் மூலம் முதலமைச்சரின் சம்பந்தி தொடர்பான மிகப் பெரிய அளவில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் - துணை முதலமைச்சரின் உறவினர்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு - குட்கா ஊழலில் தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் ஆகியோருடைய தொடர்பு மற்றும் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து பொதுவெளியில் வந்து கொண்டிருக்கின்றன.

  எனவே, இந்த ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் - ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 18-9-2018 செவ்வாய் அன்று காலை 10.00 மணி அளவில் தி.மு.கழகத்தின் சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துவதென மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

   
   
   
  English summary
  This is the 8 resolutions passed by the DMK. Stalin conducts DMK district secretaries meeting today in Chennai Arivalayam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more