திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு.. முதல்கால யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழா ஜூலை 7 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. விழாவின் முதல் நாளான இன்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜுலை மாதம் 7 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழாவின் முதல் நாளான இன்று காலையில் கோவில் முன்புள்ள கடலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் சண்முக விலாச மண்டபத்தில் புனித கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து புனித நீர் கலசங்கள் எடுத்து வரப்பட்டு யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
மேள தாளங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்து ராஜகோபுரத்தின் அருகே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டது. மாலையில் முருகன் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தின் முன்பு இருந்து யாகசாலை பூஜைக்கான புனித நீர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதன்பின் யாகசாலை பூஜையில் இந்த புனித நீர் கலசம் வைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய பூஜையில், புண்யாகவாசனம், அங்குரார்பணம் ஆச்சாரிய ரக்ஷபந்தனம், எஜமானிய ரக்ஷபந்தனம் நடந்தது. தொடர்ந்து கும்ப அலங்காரம் நடந்தது. அதன்பின் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலசம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞான சேகரன், சிவாச்சாரியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் முற்கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், 108 ஓதுவார்களுடன் அகண்ட நாம பாராயணம் நடைபெற்றது.
முன்னதாக, தமிழில் பாராயணங்கள் பாட வந்த 64 ஓதுவார் மூர்த்திகளையும் திருச்செந்தூர் சிவன் கோவிலில் இருந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து, திரவிய பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடந்தது. இதை கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications