காதலியுடன் சேர்த்து வையுங்க.. அவளை பார்க்கவே முடியாதா? திருப்பத்தூர் கலெக்டரிடம் கண்ணீருடன் ஓடிய நபர்
திருப்பத்தூர்: "இனிமேல் என்னுடைய காதலியை பார்க்கவே முடியாது என்று சொல்கிறார்கள்.. எனவே, நான் காதலிக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இளைஞர் ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
திருப்பத்தூர் விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த இளைஞர்.. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

வெவ்வேறு சமூகம்: ஆனால், 2 பேருமே வெவ்வேறு சமூகம் என்பதால், பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் தனது காதலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இளைஞர் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "நான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தற்போது எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். திருப்பத்தூர் அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் நானும் காதலித்து வருகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் எங்களது திருமணத்துக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பெற்றோர் எதிர்ப்பு: இருப்பினும், நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொள்ள இதுநாள் வரை காத்திருந்தோம்.
ஆனால், எங்கள் விருப்பத்தை ஏற்காத பெண் வீட்டார், எங்கள் திருமணத்துக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நான் விரும்பிய பெண்ணை அவர்களது குடும்பத்தார் மறைத்து வைத்து என்னுடன் பேச விடாமல் தடுத்து வருகின்றனர்.
அடித்து தாக்கினார்கள்: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனது காதலியை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். ஆனால், அவரை பார்க்க அனுமதிக்காமல் பெண்ணின் வீட்டார் என்னைச் சரமாரியாக தாக்கி அடித்து விரட்டினர். மேலும் அவரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டுவிட்டனர். இனி அவரை என்னால் பார்க்க முடியாது என்கின்றனர்.
அதனால் பெண் வீட்டார் மீது எனக்குச் சந்தேகம் எழுகிறது. நான் காதலிக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் அவரை மீட்டுக் கொடுங்கள் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் அந்த இளைஞர்.
இந்த மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மனுவை போலீசாருக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications