ஆம்பூரில் திமுக பிரமுகரின் கடைக்கு ஜேசிபியுடன் வந்த ரயில்வே அதிகாரிகள்.. இடித்து தரைமட்டம்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகர் சேகர் என்பவர் கட்டியிருந்த கடை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக இரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்தது தொடர்பாக முறைப்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டும், கடையை அகற்றாததால், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரம் பகுதியில், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகர் சேகர் என்பவர் 15 ஆண்டு காலமாக ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் பழச்சாறு கடை மற்றும் கடைகள் கட்டியுள்ளதாகவும், அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்கள்.

ஆனால் இதுபற்றி உரிய நடவடிக்கை ரயில்வே அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பு நடந்த இடத்தில், பதாகைகளை வைத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆம்பூர் புதுகோவிந்தபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரத்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதுபற்றி ரயில்வே தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் திமுக பிரமுகர் சேகர் கடையை இடித்து அகற்றவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுகோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை, நேற்று முன்தினம் (ஏப்.25) ஆம்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். அதன் பின்னர், ஆக்கிரமிப்புகளை ஜோலார்பேட்டை ரயில்வே கோட்ட பொறியாளர் தலைமையிலான ரயில்வே துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினார்கள்.
பொதுவாக ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் பட்டா கிடைப்பது என்பது சட்டப்படி சாத்தியமற்றது. அப்படிப்பட்ட நிலங்களை ஒருவ நாளும் வாங்கிவிடாதீர்கள், மாநில அரசுக்குச் சொந்தமான "புறம்போக்கு" நிலங்களில் வேண்டுமானால், நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு (சில நிபந்தனைகளின் அடிப்படையில்) தமிழக அரசு பட்டா வழங்க முடியும். ஆனால், ரயில்வே நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது என்பதால், மாநில அரசு அங்கு பட்டா வழங்கவோ அல்லது நிலத்தை வரன்முறைப்படுத்தவோ எந்த அதிகாரமும் இல்லை..
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, ரயில்வே நிலத்தில் இருப்பவர்கள் எவ்வளவு காலம் அங்கிருந்தாலும், அவர்களை வெளியேற்ற ரயில்வே துறைக்கு முழு அதிகாரம் உண்டு. அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டியது ரயில்வேயின் கடமை இல்லை. ரயில்வே துறை எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் 40 அல்லது 50 ஆண்டுகளாக வசிப்பதாகக் கூறி நீதிமன்றம் சென்றாலும், ரயில்வே நிலத்தைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் செல்லாது.














Click it and Unblock the Notifications