நாளை கூடுகிறது தமிழக சட்டசபை.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
சென்னை: இந்த வருடத்தின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் கே.ரோசய்யாவின் உரையுடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக, சட்டசபை கூட்ட அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுவார்.
நாளை காலை 11.15 மணிக்கு ரோசய்யா உரையாற்ற உள்ளார். அப்போது, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுவார். அவர் ஆங்கிலத்தில் பேசி முடித்த பிறகு, அந்த உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு கவர்னர், இந்திய அரசமைப்பு பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை, 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு பதிலாக, அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டி இருக்கிறார். இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு கவர்னர், அன்றே காலை 11.15 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய கூட்டத்தில் ஆளுநர் உரை மட்டுமே இடம் பெறும். அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்படும்.
18 ம் தேதி சட்டசபைக்கு விடுமுறை நாளாகும். அதன் பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். இந்த விவாதம் சுமார் 4 நாட்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நாளில், தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார். பின்னர் கூட்டத் தொடர் முடிவடையும்.
இதையடுத்து அடுத்த சில நாட்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் என்று தெரிகிறது.
முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்ற பின்னர் வரப் போகும் முதல் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications