சிதறுண்டு கிடக்கும் எதிர்கட்சிகள்... பெரும் சிக்கலில் திமுக?
தற்பொழுது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் இதுவரையில் இல்லாததோர் அரசியல் சூழலாக இருந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்து மூன்றாண்டு காலத்தில், அதாவது 1972 ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து விலகி அதிமுக வை ஆரம்பித்த காலத்திலிருந்து பார்த்தால் இதுபோன்றதோர் அரசியல் களம் தமிழகத்தில் இருந்ததில்லை. ஆளும் கட்சிக்கெதிரான நடவடிக்கைகளில் எதிர்கட்சிகள் இதுபோல பலவீனமாக கடந்த 43 ஆண்டு காலத்தில் இருந்தில்லை.
2014 ம் ஆண்டு செப்டம்பர் 27 ம் நாள் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது இனிமேல் தங்களுக்கு நிரந்தரமான ஏறுமுகம்தான் என்றே எதிர்கட்சிகள் குதுகூலித்துக் கொண்டிருந்தன. இன்னும் பத்தாண்டுகளுக்கு ஜெயல லிதா அரசியலில் தலையெடுக்க முடியாதென்றே இறுமாந்திருந்தன எதிர்கட்சிகள்.
குறிப்பாக திமுக தனது வசந்த காலம் திரும்பிக் கொண்டிருப்பது உறுதியென்றே நம்பத் துவங்கிவிட்டது. ஆனால் நடந்ததோ வேறு ... யாருமே, ஏன் அஇஅதிமுக விலேயே சொற்பமானவர்களைத் தவிர்த்து வேறெவரும் நினைத்துப் பார்க்காத நிலையில் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவையும் மற்ற மூவரையும் இந்தாண்டு மே 11 ம் தேதி விடுதலை செய்துவிட்டார்.
2014 ன் செப்டம்பர் 27 தமிழக எதிர்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக வந்ததென்றால், 2015 மே 11 அந்த வரப் பிரசாதத்தை தட்டிப் பறித்து அவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் நிரந்தரமாக சூன்யமாகிப் போனது, இனிமேல் அவர் எழுந்திருக்க குறைந்தது பத்தாண்டுகள் ஆகும் என்றெல்லாம் நொடிக்கு நூறுதரம் முழங்கிக் கொண்டிருந்த எதிர்கட்சிகள் மே 11 க்குப் பிறகு வாய் மூடிப் போயினர்.

இதில் மிகப் பெரிய நஷ்டத்தை திமுக தான் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. காரணம் அதுதான் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி (எம்எல்ஏக்கள் எண்ணிக்கையைத் தாண்டி!). தமிழகத்தை அஇஅதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகள் மட்டுமே கிட்டத்தட்ட கடந்த ஐம்பதாண்டு காலமாக ஆண்டு கொண்டிருக்கின்றன. அஇஅதிமுக வின் நஷ்டம் எப்போதுமே திமுக வுக்கு மட்டுமே லாபமாக அமைந்து கொண்டிருக்கிறது. இதுதான் கடந்த ஐம்பதாண்டு காலத்தின் அதுவும் குறிப்பாக 1991க்குப் பிந்தய காலகட்டத்தின் யதார்த்தம். ஆனால் தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியலை பார்த்தால், அது திமுக வுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லை.
ஐந்து கட்சி கூட்டணியும், விஜயகாந்தின் நிலைப்பாடும் இன்று திமுக வின் வெற்றி வாய்ப்பை மிகப் பெரிய கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகிக்கும் ஐந்து கட்சிக் கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்டுகள், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருக்கின்றன. கடந்த வாரம் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனின் பேட்டி அநேகமாக இந்த ஐந்து கட்சி கூட்டணியை நிரந்தரமாக திமுக விடமிருந்து பல மைல் தூரம் நகர்த்தி விட்டதென்றே சொல்லலாம். 170 இடங்களில் திமுக போட்டியிடும், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை, பாமக வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஜாதிக் கட்சிகள் என்றெல்லாம் கொடுத்த பேட்டிகள் பெரியதோர் கசப்பை இந்தக் கட்சிகளிடம் ஏற்படுத்தி விட்டன. பேட்டி வெளிவந்து நான்கே மணிநேரத்திலேயே இதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்து, டிகேஎஸ் இளங்கோவனை கண்டித்தது. அவரும் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால் அதற்குள் போதிய அளவுக்கு சேதாரம் ஏற்பட்டு விட்டது.
‘நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என்று மனித நேய மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூறத் துவங்கி விட்டனர். வைகோ தாங்கள் திமுக, அஇஅதிமுக யாருடனும் இல்லை என்று அடித்துச் சொல்லுகிறார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒவ்வோர் கூட்டத்திலும் அஇஅதிமுக வுக்கு இணையாக திமுக வையும் விளாசித் தள்ளுகிறார். பாமக, தானே அடுத்த ஆளும் கட்சி என்றே தனி ஆவரத்தனத்தை கடந்த பத்து மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கிறது. மீதமிருப்பது, நான்கு சதவிகித வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி. அந்த வாக்கு வங்கியிலும் வாசன் வெளியேறிய பின்னர் பெரும் ஓட்டை!
இந்தப் பின்புலத்தில் பார்த்தால்தான் 23 முதல் 25 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் திமுக வின் நிலை புரியும். ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆகவே 2016 ல் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்ற திமுக வின் எண்ணம் இந்த முறை நிறைவேறுவது அவ்வளவு சுலபமென்று தோன்றவில்லை.
என்னிடம் மனித நேய மக்கள் கட்சியின் ஒரு முன்னணி தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு தலைவரும் சொன்னது: "நாங்கள் தற்போது டைம் பாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்தம்மா ஒரு கடைக் கண் காட்டினால் கூடாரத்தை கலைத்து விட்டு இரட்டை இலையுடன் ஐக்கியமாகி விடுவோம்!"
திமுக நிலவரம் எந்தளவுக்கு கலவரம் என்பதைக் காட்ட இது ஒன்று போதும் என நினைக்கிறேன்!
ஒரு விஷயம் புரியாத புதிராகவே இருக்கிறது. வழக்கமாக எந்தவோர் ஆளும் கட்சியும் தனது ஆட்சிக் காலத்தின் இறுதி கட்டத்தில் பெரிய வெறுப்பைச் சம்பாதித்திருக்கும். சிறிய கட்சிகள் பிரதான எதிர்கட்சியின் பக்கம் நகரத் துவங்கியிருக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள சூழ்நிலை விநோதமானதாக இருக்கிறது. 1991 - 1996 மற்றும் 2001 - 2006 ஆட்சிக் காலங்களில் பொது மக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் வெறுப்பை பெரிய அளவில் சம்பாதித்து வைத்திருந்த அஇஅதிமுக, கிட்டத்தட்ட தனிமைப் படுத்தப்பட்டிருந்தது. தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பே அதனது தோல்வியும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் ஜெயலலிதாவின் இந்த மூன்றாவது ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் காணக் கிடைக்கும் காட்சி தனித்துவமாக உள்ளது.
பெரிய அளவில் ஜெயலலிதா மீதி மக்களுக்கு வெறுப்பு இல்லை என்பதுதான் கள யதார்த்தம். சில இடங்களில் திமுக பேரைச் சொல்லவே தயங்கும் சூழல். கிராமங்களில் அதிமுக ஆதரவு அலை வெளிப்படையாகவே தெரிகிறது.
கையில் எந்தப் பிரச்சனையை எடுப்பது என்று தெரியாமல், எதிர்கட்சிகள் திக்குத் தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கின்றன. மதுவிலக்கை ஊதி, ஊதி பெரியதாக்கிய எதிர்கட்சிகள் தற்போது சத்தமில்லாமல் அடங்கிப் போய்விட்டன. சட்டமன்றத்தில் மதுவிலக்குப் பிரச்சனையை கிளப்பக் கூட எதிர்கட்சிகளால் முடியவில்லை.
ஆளும் கட்சி தனது மிருக பலத்தால் பேச வாய்ப்பை மறுக்கிறது என்று எதிர்கட்சிகள் ஓலமிடுகின்றன. சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லா விட்டால் என்ன? சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே பரந்த, விரிந்த நிலப்பரப்பு உள்ளது. தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனை என்று இன்று தாங்கள் உருவாக்கிய இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல இந்த எதிர்கட்சிகளை யார் தடுத்தது? மதுவிலக்கு விவகாரத்தில் சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு கூப்பாடு போட்டு, ஆங்காங்கே களேபரத்தை உருவாக்கி, கல்லுரி மாணவர்கள் பலரை இன்று வரையில் புழல் சிறையில் இருக்குமாறு தள்ளிய எதிர்கட்சிகள் தற்போது வேறு, வேறு விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பிரச்சனையில் ஓயாமல் ஓசை எழுப்பி, அழுத்தத்தை அரசாங்கத்தின் மீது அப்படியே தக்க வைப்பதுதான் திமுகவின் வழக்கமான அரசியல். அடுத்து புதிது, புதிதாக பிரச்சனைகளை எழுப்புவது. ஆனால் இன்று நிலைமை சற்றே மாறாக இருக்கிறது. கையில் விவகாரங்களும் இல்லை. புதிது, புதிதாக பிரச்சனைகளை எழுப்பும் வல்லமையும் திமுக வுக்கு குறைந்து கொண்டே வருவது வெள்ளிடை மலை.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போதும், ஏன் ஜெயலலிதா வின் கடைசி இரண்டு ஆட்சிக் காலங்களிலும் கூட புதிது புதிதாய் பிரச்சனைகளைக் கிளப்பி, அனுதினமும் ஆளும் கட்சிக்கு வலையை விரித்து ஆட்சியாளர்களை குதிக் கால்களில் நிற்க வைத்த திமுக இன்று எங்கே போனதென்று தெரியவில்லை. கூட்டணி கட்சிகள் என்று கருதப் படுபவை நாளும் பொழுதும் திமுக வுடன் தாங்கள் இல்லையென்று கூறி வருவது இந்த முறை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தமிழகத்தில் ஆட்சி மாறும் என்ற ஃபார்முலாவை உடைத்தெறியலாம்.
தேர்தல்களுக்கு இன்னமும் ஏழு மாதங்களுக்கு மேல் உள்ளது. ஒரு நாள் என்பதே அரசியலில் நீண்ட காலம்தான். ஆகவே காலம் மாறும், காட்சிகள் மாறும் என்று சராசரி திமுக தொண்டன் வேண்டுமானால் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. இன்னொன்று இன்னமும் அடங்காத அந்தக் கட்சியின் உட்கட்சி மோதல்கள். தென் மாவட்டங்கள் மிகப் பெரிய பலவீனம். அழகிரி இல்லாமல் அதை பலமாக்குவதும் கடினம்!
'இம்மென்றால் சிறை வாசம் ஏனென்றால் வனவாசம்' என்றே சொல்லுமளவுக்கு, தங்களை அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்கள் மீது கூட வழக்குகளை மானா வாரியாக போட்டுக் கொண்டிருக்கும், அனைத்து விதமான ஜனநாயக பண்புகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப் படுவது தமிழகத்தில் ஜனநாயகத்தை சவக்குழிக்குத்தான் தள்ளும்.
இந்த சூழலில் நிச்சயம் பிரதான எதிர்கட்சி பலவீனமடைவது தமிழ் நாட்டில் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
வெற்றிக்கு குறுக்கு வழிகள் இல்லையென்பதை திமுக வும், அதன் தலைமையும் இன்றாவது உணர்ந்து கொள்வது அந்தக் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் கூட நல்லதுதான்!
-ஆர்.மணி












Click it and Unblock the Notifications