விஜயகாந்துடன் தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு- கூட்டணியில் இணைய அழைப்பு!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் நேற்று இரவு சந்தித்து கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தனர்.
லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதற்காக தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் கடந்த 1 மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பாஜக தலைமையில் 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக அவர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருடன் பலமுறை பேச்சு நடத்தி உள்ளார்.
இந்தநிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மாநிலச் பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜுலு ஆகியோர் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் இணையுமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விஜயகாந்தை நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீரென சந்தித்து பேசியிருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்களும் சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications