For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்து துறை தொழிலாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு: விரைவில் ஸ்டிரைக்- தொ.மு.ச. பேரவை

Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து துறை தொழிலாளர்களை தமிழக அரசு வஞ்சிப்பதாக தொ.மு.ச. பேரவை குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 11வது ஊதிய ஒப்பந்தம் 31.08.2013 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டிய தமிழக அரசு நிர்வாகம் எந்த அசைவுமின்றி உள்ளது.

2010ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தின் பல பிரிவுகளை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. 2010ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தொழிற்தகராறு சட்டம் பிரிவு 29ன் கீழ் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் ஆக்கப்பூர்வமாக அரசு ஒத்துழைப்பின்றி தேதி மாற்றம் மட்டுமே நடைபெற்று வருகிறது.

புதிய ஊதிய ஒப்பந்தம் சம்மந்தமான பேச்சுவார்த்தையை துவங்க முன்வராத காரணத்தால் ஜனநாயக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். அதற்கும் பலன் இல்லை.

மேலும், அரசும் - நிர்வாகமும் இணக்கமான நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறியதால் அடுத்து அரசு மற்றும் நிர்வாகத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யலாமா? வேண்டாமா? என கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்து 11.11.2013 அன்று வாக்கெடுப்பு நடத்தினோம்.

இந்த வாக்கெடுப்பை சீர்குழைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவின் பொறுப்பில் உள்ளவர்கள் கடுமையான கெடுபிடிகளை தாண்டி, 95,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். அதில் 83,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என வாக்களித்தனர்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் உணர்வுகளை செயல்படுத்த 31.12.2013 அன்று வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்தோம். 2014 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியோ அல்லது அதற்குப் பின்போ வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தோம்.

அதன் விளைவாக 22.1.2014 அன்று சமரச பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர்துறை அறிவித்தது. ஆனால், திடீரென 28.1.2014ம் தேதிக்கு சமரச பேச்சுவார்த்தையை மாற்றியமைத்தது. மேலும், அதனை கடைசி நேரத்தில் ரத்து செய்து, மீண்டும் 19.2.2014ம் தேதி சமரச பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்தது. அதனையும் கடைசி நேரத்தில் ரத்து செய்து 28.2.2014ம் தேதி அன்றைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் துறையின் இந்த நடவடிக்கை உள் நோக்கம் கொண்டதாக உள்ளது.

தமிழ்நாடு அரசு, தொழிலாளர்துறை மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் 1,34,000 தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்பதோடு, உதாசீனப்படுத்துவதாக கருதுகிறோம்.

தொழிலாளர் துறை நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் சட்டப்படியான கடமையை செய்ய முன்வர வேண்டும் என தொ.மு.ச. பேரவையில் இணைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்றச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்துகிறோம்.

தொழிலாளர் துறை முறையான சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வர மறுத்தால் நேரடியாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வோம் என்பதை அரசுக்கும், தொழிலாளர் துறை, போக்குவரத்து நிர்வாகங்களுக்கும் எச்சரிக்கையாக தெரிவிக்கின்றோம் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Progressive labour front accused TN government of not caring about the welfare of the transport department workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X