சிதம்பரம் கோவிலை காக்க தமிழக அரசின் அக்கறை தேவை: கருணாநிதி

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு கடைசியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் 2-2-2009 அன்று அந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனை எதிர்த்து, சிதம்பரம் தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அதிலே வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழக்கு கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து உச்ச நீதி மன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சுப்பிரமணியசாமி, உச்ச நீதி மன்றத்தில், இந்த வழக்கில் இணைத்து கொண்டு அவரே வாதாடி வருகிறார். அப்போது அவர் திராவிட இயக்கத்தைப் பற்றி தேவையில்லாமல் தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்புக் கூறி; திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி பதில் அறிக்கை ஒன்றே விடுத்துள்ளார்.
சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசாணை, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போதே, 5-8-1987 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் நீதி மன்றத்துக்குச் சென்றார்கள். "கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயிலுக்கு செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்" என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.
அந்த வழக்கு தான் பல ஆண்டுகளாக நீடித்து, திமுக ஆட்சியில், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று விசாரணை முடிந்து நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில், "கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதே போல், சிவனடியார் ஆறுமுகசாமி கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம், அதற்கு பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துக்களை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை முறையாக நிர்வகிக்கும் என்று நீதி மன்றம் நம்புகிறது. இந்த விஷயத்தில் கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும்" என்று உயர் நீதி மன்றத்தில் நீதிபதி கூறியிருந்தார்.
கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்க ஒரு வார காலம் அவகாசம் தந்தார்; ஆனால் தீர்ப்பு வெளி வந்த அன்று மாலையே நிர்வாகத்தை தி.மு. கழக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இல்லாவிட்டால், உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்று, அதன் பேரால் தொடர்ந்து சிதம்பரம் கோயிலை தங்கள் வசமே வைத்துக் கொள்ள தீட்சிதர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கும். இருந்தாலும், தீட்சிதர்கள் சார்பில் 4-2-2009 அன்று உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள்.
இதற்குப் பிறகும் தீட்சிதர்கள் சும்மாயிருக்க வில்லை. உச்ச நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, அந்த வழக்கு தான் தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.எஸ். சவுகான், மற்றும் எஸ்.ஏ. பாப்டே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாட வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி அறிக்கை கொடுத்துள்ளார்.
மேலும் 4-12-2013 அன்று சிதம்பரம் மக்கள் மன்றம் சார்பில் சிதம்பரத்தில் தமிழக அரசு இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று, அதிலே கி. வீரமணி, ஓதுவார் ஆறுமுகசாமி, முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன் போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
"உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மூத்த வழக்கறிஞரை வைத்து உரிய முறையில் வாதாடாவிட்டால் தீட்சிதர்கள் பக்கம் ஒருதலை சார்பாக தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் என்று நீதிபதிகளே எச்சரித்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. மேலும் "டிசம்பர் 3ல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் 15 நிமிடங்கள் மட்டுமே சம்பிரதாயத்துக்காக வாதாடினார்" என்றும் செய்தி வந்துள்ளது.
இந்த உத்தரவு ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், நான் முதல்வராக இருந்த போது பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பதால், அதன் காரணமாக தற்போதைய தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருந்து விடக் கூடாது. எம்.ஜி. ஆர். முதல்வராக இருந்த போதே 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான், இடையிலே தீட்சிதர்கள் இடைக் காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்து 2009ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள். அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய் விடக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம் என்று கருணாநிதி கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications