முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரி மீது தாக்குதல்- கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதற்கும் அத்துமீறி நடந்து கொண்டதற்கும் கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், கேரளா தலைமைச் செயலர் (பொறுப்பு) நிவேதா பி.சரணுக்கு எழுதியுள்ள கடிதம்:
கடந்த 2011-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையின் பாதுகாப்பினை கேரள போலீஸாரும், வனத்துறையினரும் மேற்கொள்வார்கள் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த உறுதியை மீறும் வகையில் கேரளா நடந்து கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கோ, வடிவமைப்புக்கோ எந்தச் சேதம் ஏற்ப்பட்டாலும் அதற்கு கேரள அரசு பொறுப்பேற்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக தலைமைப் பொறியாளரைத் தாக்கிவிட்டு கேரளத்தினர் சென்றபோது பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த அந்த மாநில போலீஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் கேரளா உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பைக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அக்கடிதத்தில் மோகன் வர்கீஸ் சுங்கத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications