‛டெக் சிட்டி’.. ஏன் கைவிட்டிங்க.. பட்ஜெட்டால் பிடிஆர் சொந்த மாவட்டம் மதுரை வருத்தம்! என்னாச்சு?
மதுரை: தமிழ்நாடு சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். டிஎன் டெக் சிட்டி எனும் திட்டத்தில் சென்னை, கோவை, ஓசூர் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தென்தமிழகத்தில் முக்கிய நகராகவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த மாவட்டமான மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 20ம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அவர் பட்ஜெட் உரையாக வாசித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் படித்த முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் சதுர கட்டட பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

டிஎன் டெக் சிட்டி
குறிப்பாக சென்னை, கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் TN Tech City என‛‛தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள்'' அமைக்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த தொழில்நுட்ப நகரில் புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு வசதிகள், தகவல் தொழில்நுடப்ஙகள் உள்ளிட்டவை செயல்பட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டம் மூலம் தொழில்நுட்ப துறையை முதன்மை இடத்து கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை புறக்கணிப்பு
இந்நிலையில் தான் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் திட்டத்தின் தென்தமிழகத்தின் முக்கிய நகராகவும், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த மாவட்டமாகவும் உள்ள மதுரை இணைக்கப்படாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கோவை, ஓசூரை போல் மதுரையும் வளர்ந்து வரும் நிலையில் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் மதுரையை நோக்கி செல்லும் நிலையில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் திட்டத்தில் இடம்பெற்றிருந்தால் அது நிச்சயம் இன்னும் பலன் அளித்திருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

படையெடுக்கும் நிறுவனங்கள்
தற்போது மதுரையில் சிறியது மற்றும் பெரியது என மொத்தம் 190 ஐடி நிறுவனங்கள் உள்ளன. மொத்தம் 18 ஆயிரம் பேர் ஐடி ஊழியர்களாக உள்ளனர். ஏறக்குறைய நிறுவனங்கள் மூலம் 200 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்)வருமானம் வருகிறது. சமீபத்தில் புதிய நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கி உள்ளன. அதன்படி ஸோகோ, ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூசன்ஸ், எச்சிஎல் டெக்னாலசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிதாக மதுரைக்குள் நுழைந்துள்ளன.

டெக் சிட்டி திட்டத்தில் சேர்க்க..
மேலும் ஸோகோ நிறுவனம் கப்பலூரில் அலுவலகத்தை அமைத்து வருகிறது. இங்கு 1,300 ஊழியர்கள் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வருங்காலத்தில் அதிக முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மதுரையில் தொழில்தொடங்க சாதகமான சூழல் உள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இதனால் தான் தமிழ்நாடு டெக் சிட்டி திட்டத்தில் மதுரையை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது நடந்தால் மதுரையும் விரைவாக தகவல் தொழில்நுட்ப நகராக உருமாறும்.

ஒரே குடையின் கீழ்
இதுபற்றி மதுரையில் உள்ள 55 ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழில் நிறுவனங்களில் தொகுப்பான சாப்ட்வேர் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் (சிடா) தலைவர் டீயஸ் சிவா கூறுகையில், ‛‛பெரிய நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதால் மதுரையை சேர்ந்த நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொல்யூஷன்ஸை ரூ.111 கோடிக்கு வாங்கியது. இதனால் மதுரை நகரில் உள்ள ஐடி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

படித்த திறமைசாலிகள்
இதுபற்றி மதுரை ஐடி நிறுவனமான கிரேட் இன்னோவஸின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண சுந்தரம் கூறுகையில், "மதுரை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகரில் இருந்து சுமார் 65 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படித்த திறமைசாலிகள் பணியாற்றி வருகின்றன. ஆனாலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற நகரத்திற்கு என்ஐடி அல்லது ஐஐடி போன்றவை நிறுவப்பட வேண்டும்'' என்றார்.

இன்னும் வளர்ச்சியடையும்
நிலைமை இப்படி இருக்க தற்போதைய டெக் சிட்டி திட்டத்தில் மதுரை புறக்கணிக்கப்பட்டதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர். மேலும் தற்போது மதுரையின் புறக்கணிப்பு என்பது தொழில்தொடங் அது ஏற்ற நகரம் இல்லை என்பதை காட்டும் வகையிலும் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். மேலும் டெக் சிட்டி திட்டம் மதுரையில் கொண்டு வரப்பட்டால் அது நிச்சயம் இன்னும் நகரை வளர்ச்சியடைய செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏற்கனவே மதுரையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு வணிகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‛‛மாநில அரசு நகரின் உள்கட்டமைப்புகளை முதலில் மேம்படுத்த வேண்டும். அதன்பிறகு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications