For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கல்வியின் மேம்பாட்டுக்காக பல்வேறு கோரிக்கைகளை அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழா மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தன்னை ஆளும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளது.

இந்த சூழலில் அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி சார்ந்த கோரிக்கை அறிக்கை:

உண்மையான சமச்சீர் கல்வி

உண்மையான சமச்சீர் கல்வி

தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து முற்றிலும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான பொதுப் பள்ளி முறையை, உண்மையான சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்கவேண்டும். அரசுப்பள்ளியில், தாய்மொழிவழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கே அரசு உயர்கல்வி நிறுவனங்களில், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஓராசிரியர் பள்ளிகள்

ஓராசிரியர் பள்ளிகள்

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 6 ஆண்டுகள் முடிந்த பின்னும் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மக்களுடைய குழந்தைகளின் கல்வி உரிமை நசுக்கப்படுகின்றது.. எனவே தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் எண்ணிக்கையினைக் கணக்கில் கொள்ளாமல் தனித்தனி வகுப்பறைகள், வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடிகளைப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் துவங்கி அதற்கென பிரத்யேகமான பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பள்ளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பள்ளிகள்

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பான முறையில் உள்ளடங்கிய கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.. அதற்கு அதிகமான அளவில் நிரந்தரமாக சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.. போதுமான அளவில் சிறப்பு ஆசிரியர்கள் உருவாகும் வண்ணம் சிறப்பு ஆசிரியர்களுக்கான் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்..

காலை சத்துணவு

காலை சத்துணவு

ஆதி திராவிடர் நலத்துறை, மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய ஏழை, எளிய மக்களின் குழந்தைகளே பயில்கின்றனர். பெற்றோரின் பணிச்சூழல்களால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவின்றியே பள்ளிக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. எனவே பள்ளியிலேயே குழந்தைகளுக்கு எளிய சத்தான காலை உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கிட வேண்டும். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் பைசா கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்நிதியினைப் பன்மடங்கு உயர்த்தி தரமான, சுவையான, சத்தான உணவு வழங்கப்பட வேண்டும்.

உளவியல் ஆலோசனைகள்

உளவியல் ஆலோசனைகள்

ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை குழந்தைகளின் பன்முகத்திறன்களை வெளிக்கொண்டு வரும்விதமாக உடற்கல்வி, கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்களை நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கி நிரப்பிட வேண்டும்.. குழந்தைகளின் மனரீதியான பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியான் ஆலோசனைகளை வழங்கிடும் வகையில் முறையான கல்வித்தகுதி மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்களை நியமித்திட வேண்டும்..

கோளரங்கங்கள், அறிவியல் பூங்காக்கள்

கோளரங்கங்கள், அறிவியல் பூங்காக்கள்

தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினை சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டுசெல்லும் திறன்மிக்கதாக மாற்றியமைக்கப்படவேண்டும். அதற்கு மாநில, மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான அனுபவமும் ஆர்வமும் மிக்கவர்களைக் கொண்டதாக இவ்வமைப்பு புணரமைக்கப்பட வேண்டும்.. குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திடும் விதமாக மாவட்டந்தோறும் கோளரங்கங்கள், அறிவியல் பூங்காக்கள் அமைத்திட வேண்டும்..

கட்டணக் கொள்ளை

கட்டணக் கொள்ளை

கல்வி உரிமைச்சட்டத்தின் பல்வேறு ஆரோக்கியமான கூறுகளை முனைப்பாகச் செயல்படுத்தும் வகையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் வலுப்படுத்தப்பட வேண்டும்... துவக்கக் கல்வியில் தனியார் பங்கேற்பு அபரிமிதமாக மாறியுள்ள நிலையில் அதனை சரியாக மேலாண்மை செய்யும் பொறுப்பையாவது அரசு முதற்கட்டமாக ஏற்று கட்டணக்கொள்ளையை அறவே ஒழிக்கவேண்டும்.

அரசுப் பள்ளிகளைக் காக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளைக் காக்க வேண்டும்

கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஆரம்பப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை மிகப் பெரும் சரிவைச் சந்தித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.. அதே வேளையில் சில அரசுப் பள்ளிகள் தொடர்ச்சியாக மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் கல்வித் தரத்தையும் வியக்கவைக்கும் அளவு உயர்த்தி இருக்கிறார்கள். அத்தகைய பள்ளிகளை ஆய்வு செய்து அவற்றின் சிறந்த செயல்பாடுகளை தமிழகம் முழுக்க விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளால் பள்ளிகளின் கட்டமைப்பில் ஆரோக்கியமான மாற்றம் நேர்ந்துள்ளது. ஆனாலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை போன்றவற்றை பராமரிப்பது இன்றும் மிகவும் சவாலான விஷயமாகவே உள்ளது. எனவே அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் துப்புரவுப் பணியாளர்களுக்கான நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவேண்டும்.

தரம் உயர வேண்டும்

தரம் உயர வேண்டும்

SSA போன்ற திட்டங்கள் எந்தளவுக்கு கல்வி வளர்ச்சிக்கும் கல்வித் தரம் உயரவும் பயன்பட்டுள்ளது என்பதை நிபுணர் குழு அமைத்து பரீசீலனை செய்து அதன் அடிப்படையில் இத்திட்ட செயல்பாடுகளை மாற்றி அமைக்கவேண்டும். SSA மூலம் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிகள் அவற்றின் தன்மை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படவேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களின் முக்கியத்துவத்தையும் தகுதியையும் உணர்ந்து அதற்கேற்ப அவர்களது பணிகளை வரையறுத்து கல்வித்தர மேம்பட வழிவகுக்க வேண்டும்.. அடிப்படைப் புரிதலற்று நடைமுறைப்படுத்தப்படும் செயல்வழிக்கற்றல் மற்றும் தொடர்ச்சியான, முழுமையான மற்றும் திறனடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளை கல்வியாளர்களைக் கொண்டு செழுமைப்படுத்தி, பின் நடைமுறைப்படுத்திட வேண்டும்..

மதிப்பீட்டு முறை

மதிப்பீட்டு முறை

வெறும் மதிப்பெண்களை, எழுத்துத் தேர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளை மதிப்பிடுகின்ற நிலை மாற்றப்பட வேண்டும். குழந்தைகளின் ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த திறன் வளர்ச்சிக் கூறுகளை அடையாளம் காணும் வகையிலான அவற்றை மேலும் வளர்த்தெடுக்கும் விதமான மதிப்பீட்டு முறைகளை பள்ளிக் கல்வி முழுவதும் பின்பற்ற வேண்டும்.. நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான முயற்சியில் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கற்றல்- கற்பித்தல் நேரம் விரயமாவதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசே நேரடியாக நலத்திட்ட பொருட்களை விநியோகித்திட வேண்டும்.. நலத்திட்ட உதவிகளுக்கென தனியாக அலுவலர்களை நியமித்திட வேண்டும்.. பிரசவ விடுப்பு உள்ளிட்ட நீண்ட விடுப்புகள், பயிற்சிகளுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலி ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்.

தாய் மொழி வழிக் கல்வி

தாய் மொழி வழிக் கல்வி

தாய்மொழி வழிக்கல்விக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்க வேண்டும்.. தமிழை பயிற்று மொழியாக, பாடமொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாகக் கொண்டு வர வேண்டும்.. மாறிவரும் நவீன அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப அன்னைத் தமிழை அறிவியல் தமிழாக மாற்றிட அறிவியல் தமிழ் ஆய்வகங்கள், மொழி ஆய்வுக் கூடங்கள் உருவாக்கிட வேண்டும்.. மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் வரையிலும் முறையான பயிற்சி பெற்ற கணினி ஆசிரியர்களுக்கான நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுப் படிப்புகள் வரையிலும் அனைத்துத் துறை நூல்களும் தமிழ்மொழியில் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்..

கல்விக்காக 6 % நிதி

கல்விக்காக 6 % நிதி

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக சிறந்த முறையில் கற்பிப்பதற்கான புதுமையான, எளிமையான கற்றல் கற்பித்தல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.. கல்விக்கான நிதியினை குறைந்தபட்சமாக 6% ஒதுக்கிட உத்தரவாதமளித்திட வேண்டும்..
எக்காரணம் கொண்டும் மத்திய அரசின் அரசு-தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் பகுதிகளில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.. ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 100 கி.மீ வரையிலும் பேருந்தில் பயணிக்கக் கூடிய கொடுமையை அறவே ஒழிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான சுற்றளவு எல்லையை வரையறுக்க வேண்டும்..

மாணவர் சேர்க்கையில் கட்டுப்பாடு

மாணவர் சேர்க்கையில் கட்டுப்பாடு

தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு அதிகபட்சம் எத்தனை குழந்தைகளைச் சேர்க்கலாம்.. ஒரு வகுப்பில் எத்தனை பிரிவுகள் இருக்கலாம் என்பதையெல்லாம் வரையறுத்து மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.. தமிழகத்திற்கான ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.. பாடத்திட்டம், தேர்வுகள், ஆசிரியர் நியமனம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் ஓரே தரத்தை உத்தரவாதம் செய்து உண்மையான சமச்சீர் கல்வியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.. கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என்ற உறுதியை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்

உயர்கல்வியில்

உயர்கல்வியில்

தமிழகப் பல்கலைக்கழகங்களின் காலனிய காலத்திய சட்டங்கள் யாவும் திருத்தப்பட வேண்டும். ஆட்சிக்குழு, பேரவை, கல்விக்குழு ஆகியவற்றில் ஆசிரியர், மாணவர், அலுவலர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதித்துவமும் இருக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகமாக இடம்பெறும் வகையில் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.. தமிழக உயர் கல்வி வரலாற்றில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுபாட்டு அலுவலர் போன்ற உயர் பதவிகளில் விரல் விட்டு என்னும் அளவுக்குக் கூட தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் நியமிக்கப்படவில்லை. இந்த சமூக அநீதி களையப்படவேண்டும். எனவே சுழற்சி அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப் படவேண்டும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்காக தற்போது பின்பற்றப்படும் முறை கைவிடப்பட வேண்டும்.. அரசியல் தலையீடற்று தேர்ந்தெடுக்கும் விதமாக மாற்றப்பட வேண்டும்.

உயர் கல்வித் தேர்வு வாரியம்

உயர் கல்வித் தேர்வு வாரியம்

தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுக்காற்றுச் சட்டம்(1976) திருத்தம் செய்யப்பட வேண்டும். இச்சட்டம் அனைத்து சுய நிதிக்கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்ற சட்டதிருத்தம் அவசியமானது. அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகிய இரண்டின் பேராசிரியர் நியமனங்கள் முற்றிலும் லஞ்ச ஊழல் மலிந்ததாக மாறிவிட்டது.. தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து உயர் கல்வி தேர்வு வாரியம் ஒன்றை உருவாக்கி அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி நியமனங்களை எழுத்து தேர்வு மூலம் நியமிக்கவேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சுய நிதிப் பிரிவு கூடாது

சுய நிதிப் பிரிவு கூடாது

தனியார் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் பாடபிரிவுகள் உதவிபெறும் பாடப்பிரிவுகளாக மாற்றி அமைக்ககப்படவேண்டும். இனிமேல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுய நிதிப் பிரிவுகள் இயங்கக் கூடாது. இத்தகைய பிரிவினை ஆசிரியர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில்,நிர்வாக ரீதியான பல்வேறு விரும்பத் தகாத சமூகத்திற்கு பாதகமான விளைவுகள் உருவாகின்றன. புதிய சுயநிதிக் கல்லூரிகளை அனுமதிக்கக் கூடாது. இருக்கின்ற அனைத்து சுயநிதிக் கல்லூரிகளும் அரசு உதவி பெறும் கல்லூரிகளாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்டந்தோறும் அரசுப் பல்கலைக்கழங்கள்

மாவட்டந்தோறும் அரசுப் பல்கலைக்கழங்கள்

மாவட்டந்தோறும் அரசு கலை அறிவியல், மருத்துவ, மற்றும் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட வேண்டும்.. மாவட்டந்தோறும் அரசு பல்கலைக் கழகங்கள் துவங்கப்பட வேண்டும்.. WTO GATS வழியாக உயர்கல்வி முற்றிலும் சந்தைப்பொருளாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கொள்கையை தமிழ் நாட்டில் நடைமுறைபடுத்த அனுமதியோம் என்ற உத்திரவாதத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்..

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் கல்விக் கொள்கை மாற்றி அமைக்கப்படவில்லை. எனவே ஒரு புதிய கல்விக் கொள்கை நாட்டிற்கு தேவை. தற்போது மத்திய அரசு தயாரிக்க திட்டமிட்டுள்ள கல்வி கொள்கையின் சாரம் பொது விவாதம் என்ற பெயரில் அது முன் வைத்துள்ள கருத்துக்கள் ஆகியவற்றை நோக்கும் போது மத்திய, அரசு தனது இந்துத்துவமயமாக்கல் என்னும் நிகழ்முறைக்கு வலுசேர்க்கும் விதமாகவே அமைந்துள்ளது. ஓரிரு மாதங்களில் வரைவு கல்விக்கொள்கை வெளியிடப்படலாம். புதிய கல்விக் கொள்கை மூலம், பாடதிட்டத்திலும் பாடபுத்தகத்திலும் மத்திய பா.ஜ.க. அரசு இந்துத்துவ கருததியலை புகுத்த முனைவது வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே நம் நாட்டின் பாடத் திட்டம் நமது அரசியல்சாசன விதிமுறைகளுக்கு இசைவாகவும், அதை முன்நடததிச் செல்வதாகவும், 21ம் நூற்றாண்டு சவால்களை சந்திக்கத்தக்கதாகவும் அமைய வேண்டும்.

திணிப்புகளைத் தடுப்போம்

திணிப்புகளைத் தடுப்போம்

கல்வியில் இந்து மயம், இந்தி மயம், வணிக மயம், சமஸ்கிருத திணிப்பு, சமூக நீதிக்கு எதிரான ஜாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிலை நிறுத்தும் அடிப்படையிலான கல்வி முறையை கட்டமைக்க முயற்சிததல் ஆகிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கை வழியே தலை தூக்காவண்ணம் எதிர்ப்போம் தடுப்போம் என்ற உறுதியை தமிழக கட்சிகள், தமிழக மக்களுக்கு அளித்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது.

English summary
TNSF has urged the all party candidates to help improve the Education system after their election to the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X