அடிக்கும் வெயிலுக்கு ஊட்டிக்கு டூரா? அதுவும் "இந்த" ரூட்டில் செல்ல திட்டமா? அது ஒன்வே சாலையாச்சே!
ஊட்டி: கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா சீசன் தொடங்கியதால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மலைகளின் ராணி என அழைக்கப்படுவது ஊட்டி. இந்த குளிர்பிரதேசத்திற்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இதமான சீதோஷ்ணம் நிலவும்.

மற்ற மாதங்களில் பனிகட்டியால் இயற்கை காட்சிகள் சூழப்பட்டிருக்கும். இதனால் கோடை வெயிலால் தகித்து வருவோர் ஊட்டியில் குளு குளு வானிலையை ரசிக்க கோடை விடுமுறையில் அங்கு செல்வது வழக்கம்.
அங்கு இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் அங்கிருந்துவிட்டு பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். ஊட்டியில் பைகாரா அருவி, செயற்கை ஏரி, பொட்டானிக்கல் கார்டன் , ஊட்டி ரோஜா தோட்டம், தொட்டபெட்டா சிகரம், டால்பின் மூக்கு, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, எமரால்டு ஏரி , கோத்தகிரி உள்ளிட்டவைகளை பார்த்து ரசிக்கலாம்.

கடந்த சில தினங்களாக மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஊட்டியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடை சீசனின் போது 10 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வரும் மே 19ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் ஊட்டிக்கு 15 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன. இதனால் ஊட்டி- குன்னூர்- மேட்டுப்பாளையம், ஊட்டி நகர் உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோடை சீசனையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குன்னூர்- பரலியார் சாலை, கோத்தகிரி சாலைகள் ஒரு வழிபாதையாக மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அது போல் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் உதகை நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, உதகை- கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications