மன்னார்குடி மக்களுக்கு எனது நன்றி! என்னை புரிந்து கொள்ளாதவர்களுக்கு.. கண்கலங்கிய டிஆர்பி ராஜா!
சென்னை: மன்னார்குடி மக்களுக்கு எப்பவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என தேர்தல் தோல்விக்கு பிறகு நன்றி தெரிவித்த வீடியோவில் முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கண்கலங்கி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக எனக்கு வாக்களித்த மன்னார்குடி மக்களுக்கும் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த எனது கட்சிக்கும் பெருமைகளை மட்டுமே தேடி தந்து நன்றி விசுவாசத்துடன் செயல்பட்ட ஒரு மன்னார்குடிகாரன் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.
என்னால் முடிந்த அளவுக்கு நிச்சயமாக நமது மன்னார்குடிக்கு தொடர்ந்து பெருமை சேர்ப்பேன் என்ற வாக்குறுதியை இன்றும் கொடுப்பேன். மன்னார்குடி வளர்ச்சிக்கு நான் செய்ததெல்லாம் என் மனதில் இருந்து செய்தது. இந்த மன்னார்குடி வளர்ச்சிக்கு டிஆர்பி ராஜா என்றுமே எந்த நிலையிலும் முழுமையாக துணை நிற்பான். வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை புரிந்து கொள்ள முடியாத ஒரு சிலர் வருங்காலத்திலாவது என்னை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என அவர் கண் கலங்கியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
யார் இந்த டிஆர்பி ராஜா
திமுக எம்பி டிஆர். பாலுவின் மகனான டிஆர்பி ராஜா, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வந்தார். 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வென்றார். குறிப்பாக மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள செங்கமலம் யானையை தனது குழந்தை போல் பாவித்து அதன் வளர்ச்சிக்கும் இவர் உதவினார் என்கிறார்கள்.
மின்னும் மன்னை
இவர் மின்னும் மன்னை என்று மன்னார்குடியின் வளர்ச்சிக்கான திட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டு வந்தார். புதிய புறவழிச்சாலை, நவீன பேருந்து நிலையம், வடிகால் வசதிகள், நூலகங்கள், பாலங்கள் என அவர் மன்னார்குடிக்கு நிறைய திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.

தான் அமைச்சராவதற்கு முன்னர் திமுக அமைச்சர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் போதெல்லாம் வாழ்த்தை சொல்லிவிட்டு கூடவே தனது மன்னார்குடி தொகுதிக்கான வளர்ச்சி பணி சார்ந்த கோரிக்கையையும் நைஸாக கேட்டு பெறுவார்.
உதயநிதியின் நண்பர்
உதயநிதிக்கு நெருக்கமானவரும், நன்கு படித்தவருமான டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டார்.
ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் இந்தியாவில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் தனது முதல் உற்பத்தி பிரிவை தொடங்கியது. இதை ராஜா தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே மிகப் பெரிய சோலார் தயாரிப்பு தொழிற்சாலை திறக்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க காரணமானார்.
செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனம், மின்னணு தொழில் உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்தினார். அவர் ஆற்றிய பணிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
அமைச்சராக இவரது பதவிக்காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய சாதனை 2024 ஜனவரியில் நடத்தப்பட்ட 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' ஆகும்.
இம்மாநாட்டின் மூலம் சுமார் 14.5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.
2. பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி
தொழில்கள் அனைத்தும் சென்னை, ஓசூர் போன்ற குறிப்பிட்ட நகரங்களோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார்.
தென் தமிழக வளர்ச்சி: தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் மண்டலங்கள் அமைக்கப்பட்டன.
நியோ டைடல் பார்க் (Neo TIDEL Parks): இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களான (Tier-2 & Tier-3) தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர் போன்ற இடங்களில் ஐடி (IT) மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் 'நியோ டைடல் பூங்காக்கள்' அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
3. மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பசுமை ஆற்றல் மையம்
தமிழகத்தை இந்தியாவின் "மின்சார வாகனத் தலைநகரமாக" (EV Capital of India) மாற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஓலா (Ola), ஏத்தர் (Ather), டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வின்ஃபாஸ்ட் (VinFast) போன்ற உலகளாவிய மின்சார வாகன மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களின் பெரும் முதலீடுகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார். தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டின் பிரபல 'வின்ஃபாஸ்ட்' (VinFast) மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான திட்டத்தை முன்னின்று நடத்தினார்.
4. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான முதலீடு
தமிழகத்தில் புத்தொழில் (Startups) கலாச்சாரத்தை ஊக்குவிக்க அரசு நிறுவனமான டிட்கோ (TIDCO) மூலம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
தனியார் மற்றும் வளர்ந்து வரும் புதுமை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் அரசு நேரடியாக முதலீடு செய்து, அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு உதவிகளை வழங்கும் திட்டத்தை வலுப்படுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு (AI): தொழில்துறை, கல்வி மற்றும் நிர்வாகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) ஒரு வளர்ச்சி காரணியாக மாற்றுவதற்கும், பொறுப்பான முறையில் அதனைப் பயன்படுத்துவதற்கும் தேவையான கொள்கை முடிவுகளை எடுத்தார்.
இவர் மன்னார்குடியில் 4ஆவது முறையாக போட்டியிட்ட போது அமமுக வேட்பாளர் காமராஜிடம் தோற்றார். வெறும் 1769 வாக்குகளில் தோல்வியை சந்தித்தார். தற்போது தனக்கு 66068 வாக்குகளை அளித்த மக்களுக்கு கண்கலங்கியபடி நன்றி தெரிவித்துள்ளார். வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் இவருக்கு கடந்த ஆண்டு முனைவர் பட்டம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications