பாமக உள்ள கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டோம்: வேல்முருகன்
லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு போதும் இடம்பெறாது என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது:
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஏற்காடு இடைத்தேர்தல்
ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால் அவருக்கு பதிலாக அதே கட்சியை சேர்ந்த ஒரு வரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம். அல்லது அதற்கு அடுத்த ஓட்டு வாங்கியவரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இலங்கையில் வெற்றி
இலங்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர்களின் உரிமைகளை வழங்க வேண்டும்.
பிரதமர் பங்கேற்றால்
தமிழ் ஈழ உணர்வாளர்களை மதிக்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அவரது பிரதிநிதியோ பங்கேற்க கூடாது.
மீறி பங்கேற்றால் அக்டோபர் மாதம் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
ராமதாஸ் வேஷம்
பா.ம.க. தலைவர் ராமதாஸ் எதிலுமே உண்மையாக இருந்தது இல்லை. முதலில் விஜயகாந்த்தை எதிர்த்த அவர் தற்போது அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து பேசி உள்ளார். மேலும் தனித்து போட்டியிடுவோம் என்றார். எனவே இதையாவது அவர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு போதும் இடம்பெறாது இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
