ஊட்டி சார் பதிவாளர் திருப்பூருக்கு டிரான்ஸ்பர்..கடைசி நாளில் காரில் போனவருக்கு மறக்க முடியாத ட்விஸ்ட்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஷாஜகான் (வயது 55) என்பவர் சார் பதிவாளராக (பொறுப்பு) கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தார். ஷாஜகான் அண்மையில் ஊட்டியில் இருந்து திருப்பூருக்கு பணி மாறுதலாகி சென்றுள்ளார். இதற்காக வாடகை கார் மூலம் திருப்பூர் நோக்கி புறப்பட்டார். அவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்த போது, சார் பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இணை சார் பதிவாளர் அலுவலகம்-2 செயல்பட்டு வருகிறது. இங்கு தான் ஊட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் பறந்தன. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஷாஜகான் (வயது 55) என்பவர் சார் பதிவாளராக (பொறுப்பு) கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் சார் பதிவாளர் (பொறுப்பு) ஷாஜகான் திருப்பூருக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை ஊட்டியில் பணி முடிந்து, திருப்பூருக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர், தான் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து வாடகை கார் ஒன்றை புக்கிங் செய்திருந்தார். அந்த கார் மூலம் மூலம் சார் பதிவாளர் (பொறுப்பு) ஷாஜகான் திருப்பூர் நோக்கி புறப்பட்டார்.
ஊட்டியில் இருந்து வெளியேறி மேட்டுப்பாளையம் சாலையில் காரில் சார் பதிவாளர் (பொறுப்பு) ஷாஜகான் சென்று கொண்டிருந்த போது, ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்தி, ரங்கநாதன், சாதன பிரியா, தேர்தல் பிரிவு தாசில்தார் சீனிவாசன் ஆகியோர், ஊட்டி அரசு கலைக்கல்லூரி சாலையில் திடீரென அவரது காரை மடக்கி பிடித்து சோதனை செய்தார்கள். இதில் காரின் பின்பகுதியில் இருந்த ஒரு பையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சார் பதிவாளர் ஷாஜகானை லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள். இது யாரிடம் இருந்து பெறப்பட்ட பணம்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சார் பதிவாளர் பணத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications