யார் ‛அன்பிஃட்’ அமைச்சர்? எல் முருகனிடம் டிஆர் பாலு மன்னிப்பு கேட்கனும்.. கோபமான அண்ணாமலை
ராணிப்பேட்டை: நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகனை பார்த்து ‛அன்பிஃட்' என திமுக எம்பி டிஆர் பாலு பேசியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் டிஆர் பாலு முருகனை மட்டுமின்றி அருந்ததியர் சமுதாய மக்களையே அவமதித்துவிட்டார். இதனால் எல் முருகனிடம் டிஆர் பாலு பொது இடத்தில் வைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று லோக்சபாவில் விவாதம் நடந்தது. திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், எம்பியுமான டிஆர் பாலு லோக்சபாவில் எழுந்து பேசினார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தர விரைந்து வழங்க வேண்டும் எனக்கூறி சில புள்ளி விபரங்களை எடுத்து கூறினார்.

இந்த வேளையில் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், தற்போதைய மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சருமான எல் முருகன் குறுக்கிட்டு சில கருத்துகளை முன்வைக்க முயன்றார். இதனால் டிஆர் பாலு கோபமடைந்தார். எல் முருகனை நோக்கி கையை அசைத்து உட்காரும்படி கூறினார்.
ஆனால் எல் முருகன் தொடர்ந்து பேச முயன்றார். இதனால் கடும் கோபமடைந்த போன டிஆர் பாலு, ‛‛நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும். நீங்க எம்பியாக இருக்க Unfit(தகுதியில்லாதவர்)'' என கூறினார். டிஆர் பாலுவின் இந்த பேச்சு லோக்சபாவில் ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கூறிய நிலையில் அதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் திமுக எம்பி டிஆர் பாலு, மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ராணிப்பேட்டையில் இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: ரொம்ப வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால் நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவருடைய துறை சார்ந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்கிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவரும், மூத்த எம்பியுமான டிஆர் பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து Unfit என்று கூறுகிறார். தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார்.
இது எந்த அளவுக்கு மனவருத்தத்தை அளித்து உள்ளது என்றால் ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும்போது அன்ஃபிட் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். உடனடியாக நாடாளுமன்ற விவகாரத்துறை துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்பட அனைவரும் எழுந்து கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இப்போது நான் டிஆர் பாலுவிடம் கேள்வி கேட்கிறேன். பிஃட் அமைச்சர் என்றால் யார்? கொள்ளை அடிப்பவரா? இல்லை அப்பா பெரிய தலைவராக இருக்கும்போது மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை பணக்காரர்களாக இருந்தால் பிஃட் அமைச்சரா? இல்லையென்றால் அமைச்சர் முருகனின் அப்பா, அம்மா நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வரும் நிலையில் அவரது மகன் அமைச்சராக இருப்பது அன்பிஃட்டா? இல்லாவிட்டால் அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா? இல்லாவிட்டால் அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்து 75 ஆண்டுகளாக யாரும் அமைச்சராக இல்லாத நிலையில் முருகனை பிரதமர் மோடி எம்பியாக்கி மீன்வளத்துறை அமைச்சராக்கியது அன்பிஃட்டா?
எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகனை பற்றி தவறாக பேசவில்லை. அவரது சமுதாயத்தை பற்றி தவறாக பேசி உள்ளீர்கள். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள பட்டியலின சகோதர, சகோதரிகளை தவறாக பேசி உள்ளீர்கள். ஒட்டுமொத்த அருந்ததிய சமுதாயத்தை தவறாக பேசியுள்ளார். எனவே, இதை எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் மூன்று பேர் மட்டுமே பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள். இதுவா சமூக நீதி? ஆனால், மத்திய பாஜக அரசில் மொத்தமுள்ள 75 பேரில் 12 பேர் பட்டியலின சகோதர-சகோதரிகளாகவும், 8 பேர் பழங்குடியின சகோதர-சகோதரிகள் என மொத்தம் 20 பேர் அங்கம் வகிக்கிறார்கள். எது சமுக நீதி?. நாடாளுமன்றத்தில் இப்படி பேசியதை ஏற்க முடியாது. இது ஆணவத்தின் உச்சம். ஆணவத்தின் உச்சம் மட்டுமின்றி இது தோல்வியின் அறிகுறி" என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications