For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம் உயிரினும் மேலான.. ஒட்டுமொத்த தமிழகத்தையும் துடிக்க வைத்த கருணாநிதி!

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி அரசியல் பயணம்- வீடியோ

    சென்னை: உடன் பிறப்பே... ஒவ்வொரு திமுக தொண்டனின் நாடி நரம்புகளையும் புடைக்கச் செய்யும், புத்தெழுச்சியுடன் உந்தித் தள்ளும் இந்த ஒற்றைச் சொல்லை தன்னுடைய உடன் பிறவாச் சகோதரர் அண்ணாவிடமிருந்து வாங்கி, அதை ஒவ்வொரு திமுக தொண்டனின் வாழ்க்கை மந்திரமாக மாற்றிய பெருமைக்குரியவர் - கலைஞர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி.

    இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தின் பால் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் கருணாநிதியை வாழ்த்தி மகிழ்கிறார்கள்.. அவர் புகழ் பாடி சந்தோஷிக்கிறார்கள். கருணாநிதியின் நீண்டு நெடிதுயர்ந்த பிரமாண்டமான அரசியல், சமூக, திரையுலக வாழ்க்கையிலிருந்து சில துளிகளை உங்களுக்காக முன் வைக்கிறோம்....

    திருவாரூர் முத்துவேல் தட்சிணாமூர்த்தி... இந்தப் பெயர் நிச்சயம் யாருக்கும் தெரியாது. ஆனால் கலைஞர் என்ற ஒற்றை வார்த்தையைச் சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் உலகுக்கும் நன்றாகத் தெரியும். அதுதான் கருணாநிதியின் சாதனை.

    Unforgettable karunanidhi

    பெயர் சூட்டியவர் யார்... நிறையப் பேருக்கு கலைஞர் என்ற பெயர் எப்படி கருணாநிதிக்கு வந்தது என்பது தெரியாமல் இருக்கலாம். அது ஒரு சுவாரஸ்யமான கதை. நடிகவேள் எம்.ஆர்.ராதாதான், கருணாநிதிக்கு கலைஞர் என்ற பெயரைச் சூட்டி அழகு பார்த்தவர். கருணாநிதி என்ற பெயரை விட கலைஞர்தான் இன்று அவரது நிலையான பெயராக நிலைத்து போய் நிற்பது விசித்திரம்தான். தூக்கு மேடை நாடகத்தின்போது இந்தப் பட்டத்தை சூட்டினார் ராதா.

    தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதியின் சாதனைகளுக்கும், அவரது அரசியல் பயணத்திற்கும் தனி இடம் உண்டு. 5 முறை முதல்வர் பதவியைக் கண்ட ஒரே தலைவர் இவர் மட்டுமே. 1969 முதல் 2011வரை 1969 டூ 71, 71 டூ 76, 89 டூ 92, 96 டூ 2001, 2006 டூ 2011 என முதல்வர் பதவியை வகித்துள்ளார். முத்தமிழறிஞர் என்றும் கலைஞர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி தனது 14 வயதில் அரசியல் பிரவேசம் செய்தார். பள்ளிப் பிராயத்திலேயே திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணியான தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் நிறுவனர் கருணாநிதி. 13 வயதில் இதைத் தொடங்கினார்.

    பேரறிஞர் அண்ணா திமுகவை நிறுவியபோது அவருடன் துணை நின்று இயக்கம் கண்டவர் கருணாநிதி. 69 முதல் திமுக தலைவர் 1969 முதல் திமுகவின் தலைவராக இருந்து 2018ல் பொன் விழா கண்டவர். ஒரு கட்சியின் தலைவராக நீண்ட காலமாக தலைவர் பதவி வகித்த ஒரே இந்திய அரசியல் தலைவர் கருணாநிதிதான்.

    தமிழக சட்டசபைக்கு தொடர்ந்து தோல்வியின்றி வெற்றி பெற்ற சாதனையாளரும் கருணாநிதிதான். 1957ல் முதல் முறையாக திருச்சி மாட்டம் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. அதன் பின்னர் 1962ல் தஞ்சாவூர், 67ல் சைதாப்பேட்டை, 71ல் மீண்டும் சைதாப்பேட்டை, 77ல் சென்னை அண்ணாநகர், 80ல் மீண்டும் அண்ணாநகர் என போட்டியிட்டு வென்றார். 1989ல் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் மீ்ண்டும், 91ல் துறைமுகம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, 2001, 2006ல் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011ம் ஆண்டு தனது சொந்த தொகுதியான திருவரூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தனையிலும் வென்ற ஒரே தலைவர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்ற ஒரே அரசியல் தலைவர் கருணாநிதிதான்.

    Unforgettable karunanidhi

    சட்டசபையில் எம்எல்சியாக, எம்.எல்.ஏவாக 30 வருடங்களுக்கும் மேலாக சட்டசபைக்குச் சென்று வந்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. 1977 முதல் 83 வரை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவு்ம் இருந்துள்ளார் கருணாநிதி. போராட்டக் களம் என்பது கருணாநிதிக்குப் பொங்கல் சாப்பிடுவது போல. இந்தி எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் ஆகியவை அதில் முதன்மையானவை. ஈழத் தமிழர்களுக்காக டெசோ என்ற அமைப்பைக் கண்டு இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருணாநிதி.

    பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்ட கருணாநிதியைத் தேடி பட்டங்கள் பல ஓடி வந்தன. அவருக்கு முதன் முதலில் 1971ல் டாக்டர் பட்டம் கொடுத்துக் கெளரவித்தது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். சிறந்த எழுத்தாளரான கருணாநிதி எழுதிய நூல்கள் ஏராளம் ஏராளம்.. ரோமாபுரி பாண்டியன், தென் பாண்டி சிங்கம், இனியவை ஏற்பது, சங்கத் தமிழ், குறளோவியம், பொன்னர் சங்கர், என நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார் கருணாநிதி.

    திருக்குறளுக்கு புது உரை எழுதி தனது குறள் புலமையையும் வெளிப்படுத்தியவர் கருணாநிதி. தனது சுயசரிதையை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் எழுதினார் கருணாநிதி. அதேபோல கருணாநிதி எழுதிய நாடகங்களும் ஏராளம். சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே ரத்தம், காதிதப்பூ, தூக்கு மேடை, நான் அறிவாளி, உதயசூரியன் ஆகியவை அதில் சில.

    சினிமாவில்தான் ஆரம்பித்தது கருணாநிதியின் வாழ்க்கை. எம்.ஜி.ஆருக்காக ராஜகுமாரி, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன் என திரைக்கதை எழுதினார் கருணாநிதி. அதேபோல சிவாஜி கணேசனுக்காக பராசக்தி, மனோகரா என வசனப் புரட்சி செய்தார். எஸ்.எஸ்.ஆருக்கு பெருமை தேடிக்கொடுத்த படம் பூம்புகார். தனது படங்களில் வசனம் மூலம் புரட்சி படைத்தவர் கருணாநிதி என்றால் மிகையில்லை.

    தனது பதவிக்காலத்தின்போது எத்தனையோ சமூகப் புரட்சிகளுக்கு சத்தமில்லாமல் வித்திட்டவர் கருணாநிதி. ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியம் கண்டார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்து நாட்டையே வியப்பில் ஆழ்த்தியவர். அதேபோல ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி கொடுத்து புதுப் புரட்சி படைத்தவர்.

    கட்டடக் கலைக்குப் புகழ் பெற்ற தமிழகத்தில், வள்ளுவருக்காக சென்னையில் கோட்டம் கண்டு இன்றளவும் தமிழர்களால் நினைவு கூறப்படுகிறார் கருணாநிதி. அதேபோல பூம்புகார் கலைக்கூடம் கண்டார். கன்னியாகுமரியில் 133 அடி உயரத்திற்கு திருவள்ளுவருக்குப் பிரமாண்ட சிலை அமைத்தார். எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி, திரைக்கதாசிரியர், நடிகர், எடிட்டர், பதிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர், கவிஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட பெருமைக்குரியவர் கருணாநிதி.

    Unforgettable karunanidhi

    கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான முதல் நூல் கிழவன் கனவு. கருணாநிதி ஆற்றிய முதல் பேச்சு - நட்பு குறித்தது. பள்ளியில் அவர் பேசியது. முதல் புனை பெயர் சேரன் கருணாநிதிக்கு எத்தனையோ புணை பெயர்கள். ஆனால் அவர் சூட்டிக் கொண்ட முதல் புனை பெயர் - சேரன். முதல் எடிட்டர் -முரசொலி பல பத்திரிகைகளில் பொறுப்புகளில் இருந்திருந்தாலும் அவர் எடிட்டராக இருந்த முதல் பத்திரிக்கை முரசொலிதான். முதல் நாடகம் சாந்தா கருணாநிதி எழுதிய முதல் நாடகம் சாந்தா அல்லது பழனியப்பன். நடித்ததில் முதல் - சாந்தி கருணாநிதி நடித்த முதல் நாடகம் சாந்தி. சிவகுரு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். எழுதிய முதல் திரைக்கதை எம்.ஜி.ஆருக்காக கருணாநிதி எழுதிய முதல் திரைக்கதை - ராஜகுமாரி படத்துக்காக.

    1957ல் கருணாநிதி, சட்டசபையில் பேசிய முதல் பேச்சு 1957, மே 4ம் தேதி இடம் பெற்றது. பேரறிஞர் அண்ணாவை முதன் முதலில் கருணாநிதி சந்திக்க காரணம் அவர் திராவிடநாடு இதழில் எழுதிய கட்டுரையே. அதைப் படித்துப் பார்த்த அண்ணா , கருணாநிதியை நேரில் அழைத்துப் பாராட்டினார். ராஜகுமாரி படத்திற்கான திரைக்கதை எழுதியபோதுதான் முதல் முறையாக எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் கருணாநிதி. கருணாநிதிக்கும், அண்ணாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட காரணம் எம்.ஜி.ஆர்.தான். அவர்தான் கருணாநிதி குறித்து அண்ணாவிடம் சொன்னார். பாண்டிச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது பெரியாரை முதல் முறையாக சந்தித்தார் கருணாநிதி.

    1942ம் ஆண்டு முரசொலி பத்திரிக்கையை நிறுவினார் கருணாநிதி. கருணாநிதி முதல் முறையாக சட்டசபைக்குப் போனது 1957ம் ஆண்டு. திமுகவில் கருணாநிதி 1961ம் ஆண்டு பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1962ம் ஆண்டு சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1967ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக, முதல் முறையாக அமைச்சர் பதவியை ஏற்றார் கருணாநிதி. 1969ம் ஆண்டுமுதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் கருணாநிதி. அப்போது அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து அவர் முதல்வரானார். 1971ம்ஆண்டு மீண்டும் முதல்வராக அமர்ந்தார் கருணாநிதி. 1989ம் ஆண்டு 3வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் கருணாநிதி. 1996ம் ஆண்டு 4வது முறையாக முதல்வரானார் கருணாநிதி. 2006ம் ஆண்டு 5வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் கருணாநிதி.

    மாணவப் பருவத்தில் அவர் அறிமுகப்படுத்திய பத்திரிக்கையே பின்னாளில் திமுகவின் குரலாக மாறியது. அதுதான் முரசொலி. அதேபோல மாலை மணி ஆசிரியராக இருந்தார். குடியரசுவின் துணைஆசிரியராக இருந்தார். கருணாநிதியின் சாதனைகள் என்று நிறையவே சொல்லலாம். தமிழகத்தின் முக்கியப் பாலங்கள் கருணாநிதியின் பெயர் சொல்லும். உதாரணம்- சென்னையில் உள்ள ஜெமினி எனப்படும் அண்ணா மேம்பாலம். சென்னை நகரில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், அவரது மகன் ஸ்டாலின் மேயராக இருந்தபோது கட்டப்பட்ட பாலங்கள் இன்று வரை சென்னை மக்களின் மனதில் தனி இடம் பிடித்து கம்பீரமாக நிற்கின்றன.

    மினி பஸ் ..ஒரு மெகா சாதனை. இதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்கலாம். ஆனால் சென்னையைத் தாண்டி கருணாநிதி அறிமுகப்படுத்தி வைத்த மினி பஸ்ஸுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு நேரில் போய்ப் பார்த்தல்தான் தெரியும். ஆட்டோக்களுக்கு கொட்டி அழுத மக்களுக்கு பெரும் நிவாரணமாக வந்ததுதான் இந்த மினி பஸ். நிச்சயம் கருணாநிதியின் சாதனை இது என்பதில் சந்தேகமில்லை. உழவர் சந்தை... ஏழைகளுக்கு மின்சாரம் இவையும் கூட கருணாநிதியின் சாதனைகள்தான். உழவர் சந்தைக்கு அப்படி ஒரு ஆதரவு மக்களிடம் கிடைத்தது. அதேபோல ஏழைகளுக்கு இலவச மின்சாரத்தை அறிமுகப்படுத்தியவரும் இவரே. கைரிக்ஷாக்களை ஒழித்து பழைய காலத்து கருப்பு வெள்ளைப் படங்களில் கை ரிக்ஷாக்வை கஷ்டப்பட்டு இழுப்போரைப் பார்க்கலாம். இன்று அது இல்லை. அந்த மனித அவலத்தை நீக்கியவரும் கருணாநிதிதான்.

    தமிழுக்கு செம்மொழி எத்தனையோ முயற்சி எடுத்தும் கிடைக்காத தமிழ் செம்மொழி அந்தஸ்து, கருணாநிதி காலத்தில்தான் நனவாகியது. இரு பெரும் நடிகர்களை ஒரே படத்தில் பராசக்தி படம் கருணாநிதிக்கு மட்டும் உயர்வு தரவில்லை. மாறாக, சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர் ஆகிய இரு பெரும் நடிகர்களை சினிமாவுக்குக்கொடுத்தது. வசனங்களில் புயல் பரப்பியவர் கருணாநிதி. எத்தனையோ படங்களை உதாரணமாக சொல்லலாம். மனோகரா பட வசனங்கள் இன்றைக்கும் தீயாக காதுகளுக்குள் வலம் வருபவை. அதேபோல கருணாநிதியின் வசனத்தில் இடம் பெற்ற பூம்புகார் படத்தின் வசனங்கள் மற்றும் எஸ்.எஸ்.ஆர்., விஜயக்குமாரியின் நடிப்பு இன்றளவும் பேசப்படுபவை.

    பூம்புகார் படத்தில் ஒரு காட்சியில் வரும் வசனத்தைப் பேச மறுத்து விட்டார் அக்காலத்து சூப்பர் ஸ்டார் கே.பி.சுந்தராம்பாள். காரணம் இறைவனை நிந்திப்பது போல அது இருந்ததால். பெரும் சிரமப்பட்டு முயற்சித்தும் சுந்தராம்பாள் பிடிவாதமாக இருக்கவே, வசனத்தை மாற்றி எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கருணாநிதி.

    கருணாநிதியின் குடும்பமே அரசியல் மற்றும் சினிமாவில் ஊறிப் போயுள்ளது. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், முரசொலி மாறன் மற்றும் கருணாநிதி என 6 பேர் அரசியலில் களம் இறங்கியவர்கள். சினிமாவில் 6 அதேபோல மு.க.முத்து, உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி, அறிவுநிதி, அருள் நிதி, தமிழரசு ஆகியோர் சினிமாவில் கால் பதித்தவர்கள்.

    ஆரம்ப காலத்தில் சுத்தமான நான்வெஜிட்டேரியனாக இருந்தவர் கருணாநிதி. பின்னர் வெஜிட்டேரியனாக மாறிப் போனார். கருணாநிதியைப் போல உடல் நலனைப் பேணுவதில் யாரும் இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் யோகா, நடைப் பயிற்சியை தவறாமல் செய்தவர். அதிகாலையிலேயே எழுந்து விடும் கருணாநிதி, நேராக அறிவாலயம் வந்து விடுவார். அங்கு வாக்கிங் போவார். சில ஆண்டுகளாக இது நின்று விட்டது - வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக. அதற்கு முன்பு தினசரி அதிகாலையில் கருணாநிதியை அறிவாலயத்தில் பார்க்கலாம்.

    அதேபோல எந்தப் பொருளாக இருந்தாலும் மணிக்கணக்காக பேசும் திறமை படைத்தவர் கருணாநிதி. எழுதிவைக்காமல் மழை பொழிவது போல பேசும் அவரது பேச்சைக் கண்டும், கேட்டும்தானே பல ஆயிரம் இளைஞர்கள் அவர் பக்கம் திரண்டு வந்தனர். கருணாநிதி ஆரம்பத்தில் எப்படி கையெழுத்துப் போடுவார் தெரியுமா.. டி.எம். கருணாநிதி என்று. அதாவது டிஎம்.கே. என்று வருவது போல அது இருக்கும். பின்னர் மு.கருணாநிதி என்று போட ஆரம்பித்து கடைசியாக மு.க. என்று சுருக்கிக் கொண்டார்.

    கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவரை விதம் விதமாக கூப்பிட்டு ஆனந்தித்துள்ளனர். கருணாநிதியை விட மூத்தவரான எம்.ஜி.ஆர். கருணாநிதியை ஆண்டவரே என்று அழைப்பார். மூக்கா என்றும் அழைப்பார். சிவாஜியோ, மூனா கானா என்பார். ஆனால் குடும்பத்தினரோ தலைவர் என்று கூறுவார்கள். தொண்டர்களுக்கு எப்போதும் இவர் முத்தமிழறிஞர் கலைஞர். தொண்டர்களை கருணாநிதி கூப்பிடுவது அன்புடன் உடன் பிறப்பே. கருணாநிதியின் நிழலில் இருந்து தலைவர்களானவர்கள் எத்தனையோ பேர். எம்.ஜி.ஆர்.அதில் முக்கியமானவர்.இன்னொருவர் வைகோ.

    பேச்சும், எழுத்தும், படிப்பும்.. கருணாநிதியின் மூச்சாகும். காலையிலேயே அத்தனை நாளிதழ்களையும் படித்து முடித்து விடுவார். அதேபோல முரசொலிக்கு வேண்டிய கட்டுரைகள், கேள்வி பதில்களை எழுதி முடித்து விடுவார். கேள்வியின் நாயகன் இந்தியாவிலேயே எந்த அரசியல் தலைவரிடமும் இல்லாத ஒரு புதுமையாக புகுத்தியவர் கருணாநிதி. அதாவது தானே கேள்வி கேட்டு தானே பதிலளிக்கும் புதிய பாணி அறிக்கையை வெளியிட்டவர் கருணாநிதிதான். ஆரம்பத்தில் இது கேலி செய்யப்பட்டாலும் பின்னர் அது பிரபலமாகி விட்டது.

    3 திருமணம் செய்தவர் கருணாநிதி. முதல்வர் பத்மாவதி. இவரது பிள்ளைதான் நடிகராக இருந்த மு.க.முத்து. 2வது மனைவி தயாளு அம்மாள். இவரது பிள்ளைகள்தான் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி ஆகியோர். அடுத்தவர் துணைவியார் ராஜாத்தி அம்மாள். இவரது மகள் கனிமொழி.

    கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை புது உருவம் பெற்றது, மறுமலர்ச்சி அடைந்தது என்றால் மிகையில்லை. சென்னையில் அவரது ஆட்சியில் கட்டப்பட்ட டைடல் பார்க் இன்று இந்தியாவின் முக்கியமான ஐடி அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சென்னைக்கு பல முக்கிய ஐடி நிறுவனங்களை கூட்டி வந்தவர் கருணாநிதிதான்.

    கருணாநிதியின் நீண்ட நெடிய 60 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அவரை நள்ளிரவில் கைது செய்த விவகாரம்தான். மறக்க முடியுமா இந்தியாவே அந்தக் காட்சியைப் பார்த்துப் பதறிப் போனது. தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக அது பதிவாகி விட்டது.

    கருணாநிதி என்றவுடன் எத்தனையோ விஷயங்கள் நினைவுக்கு வரும். அதேபோல இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வரும். அதுதான் இலவச கலர் டிவி. கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட இந்த இலவச கலர் டிவியானது தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலவச கலர் டிவி இல்லாத, வாங்காத வீடே இல்லை என்ற நிலையை கருணாநிதியின் கடந்த ஆட்சி ஏற்படுத்தியது.

    கிட்டத்தட்ட ஒரு கிங் மேக்கர் போல 10 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வந்தார் கருணாநிதி. திமுகவின் தயவு மத்தியில் ஆட்சிக்கு வருவோருக்குத் தேவை என்ற நிலையை உருவாக்கியவர் கருணாநிதி. அரசியல் நகர்த்தலில் கருணாநிதியைப் போல சாமர்த்தியசாலி யாருமில்லை. காங்கிரஸை கடுமையாக எதிர்த்தவர். பின்னாளில் அத்தோடு நெருங்கி உறவாடினார். பாமகவின் பலம் அறிந்து அதை அருகே சேர்த்து தேவையற்றபோது உதறவும் தயங்காதவர். பாஜகவுடனும் பண்போடு நட்பு பாராட்டியவர். இவரது அரசியல் காய் நகர்த்தல்கள் பெரும்பாலும் பராசக்தி வசனம் போல எப்போதும் 'சக்சஸ்'தான்.

    அதேபோல திமுகவில் அடுத்த தலைமைப் பொறுப்புக்கு யார் வருவது என்ற வாரிசுச் சண்டையையும் மிகத் திறமையாக சமாளித்து வந்தவர் கருணாநிதி. அவரது இடத்தில் யார் இருந்திருந்தாலும், இன்னேரம் அந்தக் கட்சி உடைந்து சிதறிப் போயிருக்கும். ஆனால் கருணாநிதி என்ற மந்திரச் சொல் கட்டுக்கோப்புடன் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது.

    கருணாநிதி குறித்துப் பேசினால் அவரது அரசியல் சாணக்கியத்தனம், நிர்வாக திறமை, இலக்கியப் புலமை, தமிழாற்றல், சொல்வண்ணம், எழுத்து வண்ணம் என நிறைய மனதில் தோன்றினாலும் அவரை வைத்து எத்தனையோ சர்ச்சைகளும் நமக்கு தோன்றாமல் போவதில்லை.ஆனால் அதையும் தாண்டி கருணாநிதி இன்றும் இந்திய வரலாற்றின் பிரிக்க முடியாத ஒரு பொக்கிஷமாக திகழ்வதற்குக் காரணம், அவரது பன்முகத் திறமையும், பழுத்த அனுபவமுமே.. அவரது கடைசிக்காலத்தின் கடைசி 2 வருடங்கள் மட்டுமே அந்த கரகரத்த உயிரினும் மேலான குரலைக் கேட்க முடியாமல் போய் விட்டது.. ஆனால் மனதிலிருந்து பிரிக்க முடியாத மந்திரக் குரலாக என்றென்றும் அது நமக்குள் வலம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English summary
    DMK president Karunanidhi long political carrier could not be faded away for many years in the history of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X