For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"விகடன்" குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு வைகோ, வேல்முருகன் இரங்கல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விகடன் குழும தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் இதழியல் துறையில் இமாலய சாதனை படைத்த, ஆனந்த விகடன் பத்திரிகையை தோற்றுவித்த சாதனையாளர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் அருமைத்திருமகன் விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்தபோது அதிர்ச்சியும் துக்கமும் மேலிட்டது.

Vaiko

கலைத்துறையான வெள்ளித்திரையில் வான்முட்டும் வெற்றிக்கொடி உயர்த்திய எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஆனந்த விகடன் பத்திரிகையில்தான், கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கத்தில் தன் எழுத்துக் கருவூலங்களைப் படைத்தார்.

அந்த பத்திரிகையின் பொறுப்பினை தனது 21 ஆவது வயதில் ஏற்றுக்கொண்ட பாலசுப்பிரமணியன் விகடனில் பல புதுமைகளைத் தந்தார். தமிழ் இதழியலில் அரசியல் சமூக புலனாய்வுத் துறையில் ஆச்சர்யம் கலந்த அதிர்வலைகளை வழங்கிய ஜூனியர் விகடனை தொடங்கியவர் இப்பெருமகனார்தான்.

பத்திரிகை சுதந்திரத்திற்காக சிறைப்பட நேர்ந்தபோது, நெஞ்சுரத்தோடும் போராடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பணியாமல் சரியான பாடம் கற்பித்தார். ஆனந்த விகடனில் எனது மாணவப் பருவத்தில் என்னைக் கவர்ந்த ஜெயகாந்தன் முத்திரைக் கதைகளை வெளியிட்டவரும் இவரேதான்.

விடுதலைப்புலிகளை நான் ஆதரித்ததற்காக வேலூர் மத்திய சிறையில் 19 மாத காலம் அடைக்கப்பட்டு வெளியே வந்தவுடன், ஆனந்த விகடன் பத்திரிகை ‘வைகோ ஓர் அரசியல் அதிசயம்' என்ற தலையங்கத்தை ஆசிரியர் குழுவினரோடு கருத்துரையாடி வெளியிட்டவரும் இந்த உத்தமர்தான் என்று அறிந்தபோது, என் பொதுவாழ்வில் எனக்கு கிடைத்த மிக உயர்ந்த பட்டயமாக ஆனந்த விகடன் தலையங்கத்தை போற்றி வருகிறேன்.

உயிர் ஓய்ந்து உடல் மறைந்தாலும் பண்பாளர் பாலசுப்பிரமணியன் புகழ் என்றும் நிலைத்திருக்கும். விகடன் வானத்தில் இருந்து அந்த விண்மீன் மறைந்தாலும், அது வழங்கிய ஒளி வெளிச்சம் என்றும் மறையாமல் இருக்கும். அப்பெருமகனாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், விகடன் குழுமங்களில் பணியாற்றும் அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.

வேல்முருகன்

விகடன் குழும தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தமது 79 வயது சென்னையில் காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது.

தமது இளம் வயதில் பத்திரிகைதுறையில் நுழைந்தவர் பெரியவர் எஸ்.பாலசுப்பிரமணியன். தமிழ் இலக்கிய உலகில் புதிய முயற்சியாக ஆனந்த விகடனில் முத்திரை கதைகள் திட்டத்தை உருவாக்கியவர்.

தந்தை எஸ்.எஸ். வாசன் வழியில் திரைப்படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர். திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டவராக திகழ்ந்தார். தமிழகம் கொண்டாடுகிற ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஆளுமைகளின் படைப்புகள் இடம்பெறுவதற்கான களமாக ஆனந்த விகடனை உருவாக்கினார்.

1987-ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்பான நகைச்சுவை துணுக்கு வெளியானதற்காக சிறைபட நேர்ந்த போதும் தம் மீதான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வென்று பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டியவர். பத்திரிகை சுதந்திரத்துக்கு முன்னோடி வழக்காக இன்றளவும் அவர் தொடர்ந்த வழக்கே இருந்தும் வருகிறது.

ஜூனியர் விகடன் போன்ற அரசியல் விமர்சன- புலனாய்வு இதழ்களை உருவாக்கி தமிழ் பத்திரிகை உலகத்துக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். 1980களில் தமிழீழ விடுதலைப் போர் பற்றிய செய்திகளை வெளியிட்டு தமிழர் உள்ளங்களில் ஜூனியர் விகடனை நீங்கா இடம் பெறச் செய்தவர். இளம் தலைமுறையினர் பத்திரிகை துறையில் நுழைவதற்கான வாசலாக 'மாணவர் பத்திரிகையாளர்' திட்டத்தை உருவாக்கியவர்.

தமிழ் பத்திரிகை துறையின் ஜாம்பவானாக திகழ்ந்த "விகடன்" குழும தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko has condolence to the passing away of Ananda Vikatan group of publications chairman and film producer S.Balasubramanian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X