For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100% அன்னிய முதலீடு! நாட்டையே விற்கத் துணிந்த பா.ஜ.க. அரசு- வைகோ கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்தால், பன்னாட்டுச் சந்தையில் இந்நிறுவனங்களின் பங்குகள் விலை உயரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பா.ஜ.க. அரசின் நாசகார பொருளாதாரக் கொள்கைகளை முறியடிக்க நாட்டு நலனில் அக்கறையுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரள வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளில் திருத்தம் கொண்டுவந்து, இந்தியாவை மொத்தமாக அடகு வைக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

Vaiko slams BJP govt in FDI issue

அந்நிய முதலீட்டு வாரியத்தில் இடம் பெற்றிருக்கும் மத்திய அமைச்சர்களின் கூட்டம், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் சில்லரை வணிகம், பாதுகாப்பு, கட்டுமானம், தோட்டத் தொழில், விமானப் போக்குவரத்து, ஊடகத்துறை உள்ளிட்ட 15 துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்ற அபாயகரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செய்யப்படும், முதலீட்டுக்கான உச்ச வரம்பு மூன்றாயிரம் கோடி ரூபாயிலிருந்து, ஐந்தாயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒற்றை முத்திரையுடன் கூடிய பொருட்களுக்கான சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான விதிகளை தளர்த்தியதின் மூலம், வரியின்றி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் நூறு விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மொத்த விற்பனையாளரே சில்லரை விற்பனைக் கடைகளைத் திறந்துகொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். இதே போன்று காஃபி, ரப்பர், ஏலக்காய், பாமாயிலுக்கான பனைமரம் வளர்ப்பு, ஆலிவ் மரங்கள் வளர்ப்பு போன்ற தோட்டத் தொழில்களிலும் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற முடிவு உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதிக்குக் காத்திராமல், நேரடியாகவே முதலீடுகள் செய்யலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசு என்பதை நிருபித்துள்ளது. இது நாட்டை மறு காலனியாக்கும் நிலைமைக்குத் தள்ளிவிடும்.

இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்தால், பன்னாட்டுச் சந்தையில் இந்நிறுவனங்களின் பங்குகள் விலை உயரும். இதனால் கொள்ளை லாபம் ஈட்டப் போவது பன்னாட்டு நிறுவனங்கள்தான். சாதாரண ஏழை எளிய மக்கள் எந்தவிதத்திலும் பயனடையப்போவது இல்லை.

அந்நிய முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்புப் பெருகும் என்று மத்திய அரசு கூறுவது உண்மை இல்லை. ஏனெனில், பன்னாட்டு நிறுவனங்களும், அவற்றின் துணை நிறுவனங்களும் நூறு விழுக்காடு இந்தியர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை. மேலும், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் அந்நியர்களைப் பணியமர்த்தலாம் என்ற விதிவிலக்கும் உள்ளதால், வெளிநாட்டினரே அதிகம் வேலைவாய்ப்புப் பெறுவர். ஆனால் இங்குள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவார்கள்.

தமிழ் நாட்டில் தொழில் தொடங்கிய நோக்கியா, பாக்ஸான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டிய பிறகு, தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு வெளியேறிவிட்டன.

நாட்டையே கூறுபோட்டு விற்கத் துணிந்துவிட்ட பா.ஜ.க. அரசு, ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும். பா.ஜ.க. அரசின் நாசகார பொருளாதாரக் கொள்கைகளை முறியடிக்க நாட்டு நலனில் அக்கறையுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko has slammed union govt for its policy on FDI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X