மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக: வைகோ!
கடலூர்: கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பலத்த மழைக்கு பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய கிராமங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளை வைகோ வெள்ளிக்கிழமை இரவு பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பெரியகாட்டுப்பாளையம்,விசூர் கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பு சொல்ல முடியாத அளவில் உள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சமும், மாடுகளுக்கு ரூ.50 ஆயிரமும், ஆட்டிற்கு ரூ.10000, கோழிக்கு ரூ.500 தரப்பட வேண்டும் என்றார்.

அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம் அமைத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். வானிலை அறிவிப்பு தெரிந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. பணிகள் விரைவாக நடைபெற வேண்டும்.
இங்கு ஏற்கெனவே கலெக்டராக இருந்த ககன்தீப்சிங்பேடி தற்பொழுது நிவாரண குழு தலைவராக அரசு நியமனம் செய்துள்ளது. அவர் ஏற்கெனவே சுனாமி பாதித்தபோது இங்கு மிக சிறப்பாக செயல்பட்டவர். எனவே அவருக்கு அரசு அனைத்து ஒத்துழைப்பும் நல்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிதி பெற்று உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

மழையால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications