For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'நாட்டு நலனுக்காக' சிறையிலிருந்தபடி வைகோ திடீர் கடிதம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய "யூக்கலிப்டஸ் (Eucalyptus)" எனும் தைல மரம் தமிழகத்தின் மழைப்பகுதிகளிலும் மற்றும் நிலப்பகுதிகளிலும் பரவியுள்ள மரங்களை முற்றிலுமாக அகற்றி, அகற்றப்பட்ட இடத்தில் நாட்டு மரங்களை நடுதல் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், தலைமை வனப்பாதுகாவலர், திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், திண்டுக்கல் மாவட்ட வன பாதுகாவலர் ஆகியோருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

தேச விரோத வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், வைகோ. அங்கிருந்தபடி அவர் எழுதியுள்ள கடிதம்:

Vaiko wrote letter from the jail

"யூக்கலிப்டஸ் (Eucalyptus)" எனும் தைல மரம் 1843-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. மலைப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய பொழுது பல்வேறு பகுதிகளில் நீர்க் கசிவால் சொதசொதப்பாக இருந்த சுற்றுச்சூழலை மாற்றுவதற்காகவும், நிலத்தின் சுற்றுச்சூழலை மாற்றுவதற்காகவும், நிலத்தின் சொதசொதப்புத் தன்மையைக் குறைப்பதற்காகவும் இந்தத் தைல மரங்கள் பயிரிடப்பட்டன. பின்வரும் காலங்களில் மரவகைப் பொருட்கள் தயார் செய்யவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரக்கூழ் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்பட்டது. அதன் தாக்கத்தினால் சமவெளிப் பகுதிகளிலும் மற்ற இடங்களிலும் இந்தத் தைல மரங்கள் பயிரிடப்பட்டன.

"யூக்கலிப்டஸ்" மரம், மிர்டேசியா (Myrtaceae) என்ற குடும்ப வகையைச் சார்ந்தது. இம்மரங்கள் ஆஸ்திரேலியா, டாஸ்மானிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டவை. இம்மரங்களில் 700க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மில்லி மீட்டரிலிருந்து 1500 மில்லி மீட்டர் வரை மழையளவு உள்ள பகுதிகளில் வளரும். இவை விரைவாகவும், உயரமாகவும் வளரக் கூடியவை. இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது ஆகும்.

சீமைக் கருவேல மரத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது யூக்கலிப்டஸ் தைல மரம். இதனை இயற்கை ஆழ்துளை கிணறு என்றுகூட அழைப்பார்கள். இது நிலத்தில் உள்ள நீரை மட்டுமல்லாது காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சக் கூடியது. ஆகையினால் மழைப் பொழிவு மிகவும் குறையும். காற்றின் ஈரப்பத குறைவால் வெப்ப சூழல் அதிகரிக்கும்.

1960-ஆம் ஆண்டில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அரசுகளின் துணையோடு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்று யூக்கலிப்டஸ் விவசாயிகளிடம் பரிந்துரைக்கப்பட்டது. இம்மரம் வறட்சியைத் தாங்கிக் கொள்ளக்கூடியது; மிகக் குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் என பறைசாற்றப்பட்டது. 1843-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கர்நாடகா மாநிலம் நந்திமலைக் குண்டு பகுதிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டமானது, 1960 களில் இந்தியாவில் பரவலாக சமவெளிப் பகுதிகளில் பயிரிடப்பட்டது. தமிழ்நாட்டில் கொடைக்கானல் பகுதியில் மொத்தம் உள்ள 80,000 ஹெக்டேரில் 60,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டது. வறட்சி மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டது. மேலும் இந்த மரங்கள் அதிக அளவில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வளர்வதால் அங்கு மழை அளவும் குறைந்து வருகிறது; குடிதண்ணீர் பிரச்சினையும் அதிக அளவில் உள்ளது.

மேற்படி யூக்கலிப்டஸ் மரம், வறண்ட சமவெளிப் பகுதிகளில் விவசாய பயிர்கள் ஓராண்டுக்குப் பயன்படுத்தும் நீரைவிட இரண்டு மடங்கு நீரை உறிஞ்சுவதால் வெப்பமயமாதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப் பதத்தைச் சீர்குலைக்கக்கூடிய இம்மரம் வளரக்கூடிய பகுதிகளில் மற்ற அரிய வகை தாவரங்கள் உட்பட வேறு எந்த ஒரு தாவரமும் வளராது. மண்ணின் நுண்ணுயிர் சத்துகளை அழிக்கக் கூடியது. மூன்று வருடங்களில் பெறக்கூடிய 2100 மில்லி மீட்டர் அளவுடைய மழை நீரையும் சேர்த்து 3400 மில்லி மீட்டர் நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் நிலத்தடி நீர் குறையும் நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும் இம்மரத்தின் இலைகளுக்கு மக்கும் தன்மை குறைவு. ஆகையால் மழை நீர் நிலத்தில் இறங்குவதும், புதிய தாவரங்கள் தோன்றுவதும் பாதிக்கப்படும். தைல மரங்களிலிருந்து உருவாகும் பூஞ்சைகள் மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சக்தி கொண்டவை. இப்பாதிப்புக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால்தான் சரியாகும்; இல்லையென்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

1980-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தை மிகப் பெரிய வறட்சி தாக்கியது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது தைல மரங்களே காரணம் என்று அறிந்தார்கள். இதற்காக வேணுகோபால் அவர்கள் தலைமையில் உருவான 'நீலகிரியைக் காப்போம்' என்ற அமைப்பு பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விவசாயிகளின் சிறு சிறு எதிர்ப்பால் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் அரசு, கொள்கை அளவில் இத் தைல மரங்களைப் பயிரிடுவதில்லை என்று அறிவித்தது. ஆயினும் தொடர்ந்து பயிரிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.

யூக்கலிப்டசின் பாதிப்புகளை முதலில் அறிந்துகொண்டது கேரள மாநிலம்தான். 40,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட தைல மரம் பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தினால் 5,000 ஹெக்டேராகக் குறைக்கப்பட்டது. தைல மரங்கள் படிப்படியாக முற்றிலும் தடை செய்யப்பட்டது.

மேற்படி யூக்கலிப்டஸ் மரங்களின் ஆபத்துகளை உணர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 27.02.2015 அன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யூக்கலிப்டஸ் மரம் பயிரிடப்படுவதைத் தடை செய்து வனத்துறைக்கு உத்தரவிட்டது.

அதே போல், முந்திரிக்காட்டை அகற்றி, யூக்கலிப்டஸ் மரம் பயிரிடுவதைத் தடை செய்ய தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்படி யூக்கலிப்டஸ் மரங்கள் பயிரிடுவதை தடை செய்து உத்தரவிட்டது.

மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 2005-ஆம் ஆண்டு வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் யூக்கலிப்டஸ் மரங்களினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து மேற்படி மரங்களை வளர்ப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

யூக்கலிப்டஸ் மரங்களினால் மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதம் சீர்குலைக்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டின் இயற்கைக்கு முற்றிலும் எதிரான யூக்கலிப்டஸ் மரங்களை வளர்க்கக் கூடாது என்றும், ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, மேற்படி யூக்கலிப்டஸ் மரங்கள் அப்புறப்படுத்தப்படும் இடங்களில் தேவையான அளவு நாட்டு மரங்களை நடுவதற்கும் தகுந்த நடவடிக்கை எடுத்து நீர் வளங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Vaiko wrote letter from the jail for removing Eucalyptus trees from Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X