சந்தைக்கு திடீர் தடை.. ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்: வீடியோ
ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வழக்கமாக போடப்படும் சந்தைக்கு திடீர் தடைவிதித்ததால், ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈட்டனர்.
ஈரோடு: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காய்கறிகளை விற்க தடை விதித்ததால், வியாபாரிகள் காய்கறிகளை சாலைகளில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சூளைப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள காலி இடத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் காய்கறிகள் விற்கப்படுவது வழக்கம். வாரச் சந்தையான இங்கு காய்கறி விற்பனை செய்வதற்கு மாநகராட்சியினர் திடீரென தடைவிதித்தனர்.

மேலும், வியாபாரிகள் யாரும் கடைகளை போட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் மரக்கன்றுகளை மாநகராட்சியினர் நட்டு வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த இடத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகிறது. இந்த சந்தையால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்நிலையில் திடீரென்று இங்கு சந்தை போடாதீர்கள் என்று மாநகராட்சி சொல்லிவிட்டது. இதனால் அழுகும் பொருட்களை விற்கும் காய்கறி வியாபாரிகள் விழி பிதுங்கியுள்ளனர்.
இந்தச் சந்தையை மீண்டும் செயல்பட அனுமதி தர வேண்டும் என்றும் காய்கறி வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications