ஆ.. அலறிய பெண்.. காவு வாங்கும் தொப்பூர் கணவாய்.. மீண்டும் நிகழ்ந்த கொடூர விபத்து.. ஷாக்கிங் வீடியோ
தருமபுரி: கடந்த 12 ஆண்டுகளில் 950க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது.
கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.
தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.
ஏன் Road Rage ஆபத்து என சொல்றோம்னா அது இந்தமாதிரி விபத்துகளை ஏற்படுத்தலாம். யாராவது ரோட்டில் உங்களை எரிச்சலூட்டினால் கண்டுக்காம விடுவது நல்லது.
— Dhans (@dhans4all) September 14, 2023
இந்தியசாலைகளில் கடினம்தான் ஆனா உங்க கோவத்தை வேறு எதிலாவது திருப்பி இப்படி தவறாக எதும் நடக்காம பாத்துக்குங்க.
Video courtesy: hvk group pic.twitter.com/GcZcj835or
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதையடுத்து இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் சமீபத்தில் ஏற்பட்டு உள்ளது.தொப்பூர் - ஓமலூர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
அதில் கருப்பு நிற எக்ஸ் யு வி கார் ஒன்று முன்னாடி செல்கிறது. பின்பக்கம் இன்னொரு கார் வருகிறது. பின்பக்கம் வரும் காரின் டேஷ் போர்டில் இருக்கும் காட்சிகள்தான் தற்போது வெளியாகி உள்ளது. முன்னால் செல்லும் கருப்பு நிற எக்ஸ் யு வி கார் பின்னால் வரும் காருக்கு வழிவிடாமல் ரோட் ரேஸில் ஈடுபட்டு உள்ளது.முக்கியமாக பின்னால் வந்த காரை தள்ளி விடுவது போல கருப்பு நிற எக்ஸ் யு வி கார் மிரட்டி உள்ளது.

இதனால் கோபம் அடைந்த பின்னால் வரும் கார் டிரைவர்.. வேகமாக அவரை ஓவர் டேக் செய்துள்ளார். அப்போது ஓவர் டேக் செய்து, அவரும் அந்த நீல நிற எக்ஸ் யு வி காரை தள்ளுவது போல பதிலுக்கு மிரட்டி உள்ளார். ஆனால் தவறிப்போய் அவர் பின்னால் வந்த நீல நிற எக்ஸ் யு வி காரில் லேசாக மோதி உள்ளார். அந்த நீல நிற எக்ஸ் யு வி கார் வந்த வேகத்தில் இந்த கார் தள்ளப்பட்டு அப்படியே சுற்றி சுற்றி போய் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் மோதி உள்ளது.
இதில் மோதிய அந்த காரின் கண்ணாடி உடைந்து உள்ளது. உள்ளே இருந்த பெண் ஒருவர் ஆ என்று அலறிய சத்தமும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 5 நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு தரப்பிற்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications