அய்யோ பாவமே... விஜயகாந்துக்கு அறிக்கை எழுத கூட இனி ஆளே இல்லையாமே!
சென்னை: தேமுதிகவில் இருந்து பேராசிரியர் ரவீந்தரன் விலகி திமுகவில் ஐக்கியமாகியிருப்பது அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம். இனி விஜயகாந்துக்கு அறிக்கைகள் எழுதிக் கொடுப்பதற்கு தேமுதிகவில் யாருமே இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் விஜயகாந்த் ரசிகர்கள்தான் கட்சி நிர்வாகிகளாக உருமாறினர். அப்படியானவர்கள்தான் பொதுவாக விஜயகாந்தை சுற்றியே இருந்தனர்... இருந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி இருந்தவர்களில் விதிவிலக்காக இருந்தவர் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர்தான் விஜயகாந்துக்கு ஆலோசகராக இருந்தார்.. அவரது ஆலோசனையின் பெயரில்தான் அறிக்கைகளும் வெளிவந்து கொண்டிருந்தன.

கட்சி பின்புலம் இல்லாதவர்
அதே காலகட்டத்தில் விஜயகாந்துக்கு பேராசிரியர் ரவீந்தரனை அறிமுகப்படுத்தி வைக்கிறார் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட வேல்முருகன். அப்படி கட்சி பின்புலம் ஏதுமில்லாமல் உள்ளே நுழைந்தவர் ரவீந்தரன்.

பண்ருட்டியார் இடத்தில்...
ஒருகட்டத்தில் விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவராக ஆலோசகராகவும் வளர்கிறார் ரவீந்தரன். பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியேறிய நிலையில் அந்த இடத்துக்கும் முன்னேறியவர் ரவீந்தரன். விஜயகாந்த் பெயரிலான பல்வேறு புள்ளி விவரங்களைக் கொண்ட அறிக்கைகளுக்கு காரணமாக இருந்தவர் பேராசிரியர் ரவீந்தரன்.

அதிர்ந்த விஜயகாந்த்...
தற்போது அவரும் விஜயகாந்த் மீதான மனவருத்தத்தால் அங்கிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனை விஜயகாந்த் முதலில் நம்பவே இல்லை என கூறப்படுகிறது... பின்னர் உண்மைதான் இது என அறிந்தபோது ரொம்பவே அப்செட் ஆகி அதிர்ந்து போனாராம்.

ஆதங்கத்தில்...
இது குறித்து விஜயகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, விஜயகாந்த் தம்மிடம் இருந்த முக்கியமான பலமான அறிவுஜீவியை இழந்துவிட்டார்... இன்னும் சொல்லப்போனால் இப்போது அவருக்கு அறிக்கைகளை எழுதித் தரக்கூடிய ஒருவர் யார் என தேமுதிகவில் யாரும் இல்லை என்பதே நிதர்சனம் என உண்மையை போட்டுடைக்கிறார்.
மேலும் ஏற்கனவே மக்கள் தேமுதிகவினர், கட்சி நிதி குறித்து கேள்வி எழுப்பி வெள்ளை அறிக்கை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்... அவர்களுக்கு சரியான பதிலடி தரக்கூடிய நபர்கள் தம்மிடம் இல்லையே என்ற ஆதங்கத்தையும் விஜயகாந்த் வெளிப்படுத்தி வருகிறார் என்கின்றன தேமுதிக வட்டாரங்கள்.
அய்யோ பாவம்!












Click it and Unblock the Notifications