மாட்டுக்கறி தின்பதை யாரும் தடுக்க முடியாது.. மாணவரை அடிச்சது தப்பு மக்களே.. விஜயகாந்த் ஆவேசம்
மாட்டுக்கறி விழா நடத்திய ஐஐடி மாணவர் சூரஜ் மதவெறி கும்பலால் தாக்கப்பட்டதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டித்துள்ளார்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான மதவெறிக் கூட்டம் ஒன்று, விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது.

கண்டனம்
இதனைக் கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாட்டிறைச்சி விருந்து அளித்ததால் சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

உணவு அவரவர் விருப்பம்
மாட்டிறைச்சி உண்பது அவரவர் விருப்பம். அதனை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஐஐடி மாணவர் சூரஜ், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இது இரு மாநில பிரச்சனையாக மாறாமல் தடுக்க வேண்டும்.

வேறுபாடு கூடாது
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடக்காதவாறு இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். மேலும், இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் எவ்வித வேறுபாடுகளையும் ஏற்படுத்திவிடக்கூடாது.

சூரஜ் நலம் பெற..
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடிருக்கும் மாணவன் சூரஜ் விரைவில் குணமடைய வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்லூரி வளாகம் பாதுகாப்பை தந்து, இந்தப் பிரச்சனை தொடர்பிரச்சனையாக மாறாமல் ஐஐடி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications