For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பரவும் துப்பாக்கி கலாச்சாரம்... தடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவதும், கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதும் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சமூக விரோதிகளை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

vaiko

'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு மக்கள் பீதியுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த நாலரை ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரக்கணக்கான படுகொலைகளும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் 195 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவண அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாமல்லபுரம் அருகில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவதும், கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதும் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் என்பதை ஜெயலலிதா அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சென்ற வழக்கறிஞர் உள்ளிட்ட மூன்றுபேர் வெட்டிக் கொல்லப்பட்டதும், வேலூரில் பட்டப் பகலில் ஒருவர் பாராங்கல்லைக் கொண்டு தாக்கிக் கொல்லப்பட்டதைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டதும், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையில், மதுக்கடையில் நடந்த தகராறில் ஜமால் முகமது என்ற வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டதும் சர்வ சாதாரண நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன.

தமிழ்நாட்டில் படுகொலைகள் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை எனலாம். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 2014 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த 72 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்கொடுமை குற்ற வழக்குகள் மட்டும் 14,545 நிலுவையில் உள்ளன. இதில் 1,751 வழக்குகள் பாலியல் வன்கொடுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும், மதுக்கடைகளை மூடக் கோரி தன்னெழுச்சியாக நடக்கும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கும் ஏவிவிடப்படுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. காவல்துறையின் சமீபகால செயல்பாடுகள் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்து வருகின்றன.

தஞ்சை மாவட்ட சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது ஆகஸ்ட் 21 ஆம் தேதி வடசேரி அருகே தாக்குதல் நடத்த முயன்றதும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

எனவே, ஜெயலலதா அரசு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சமூக விரோதிகளை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
Viko urges tamilnadu government to protect law and order in the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X