10 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை... விழுப்புரம் கொலை பற்றிய தகவலுக்கு சன்மானம் அறிவிப்பு!
திருக்கோவிலூர் அருகே 8 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, இவர்களின் தாயும் தாக்கப்பட்ட வழக்கில் 10 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை.
Recommended Video

விழுப்புரம் : திருக்கோவிலூர் அருகே 8 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, இவர்களின் தாயும் தாக்கப்பட்ட வழக்கில் 10 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை.
விழுப்புரம் அருகே வெள்ளம்புதூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி தனது 14 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 23 தேதி காலையில் வெகுநேரமாகியும் ஆராயி வீட்டின் கதவு மூடியே கிடந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது ஆராயியின் 8 வயது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
ஆராயியும் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரின் 14 வயது மகள் ஆடைகளின்றி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் உடல் முழுதும் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

தாய், மகள் மருத்துவமனையில்
ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 வயது சிறுவன் மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்து விட்டான். ஆராயியும், அவரது மகளும் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை
நிலத்தகராறு காரணமாக தலித் சமூகத்தை சேர்ந்தவரான ஆராயி மீது ஆதிக்க சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதாக முதலில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் என்ன காரணத்திற்காக சிறுவன் கொலை, தாய், மகள் மீது கடுமையான தாக்குதல் என்ற விவரம் இது வரை தெரியவில்லை.

7 தனிப்படைகள் அமைப்பு
குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 17 வட மாநிலத்தவர் உள்பட 260க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் கொலை, பாலியல் பலாத்கார சம்பவத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்தக் குற்ற சம்பவம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

சன்மானம் அறிவித்த போலீஸ்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளம்புதூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவ வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications