அதிமுகவினர் மது கொடுத்து கூட்டத்திற்கு ஆள் சேர்க்கின்றனர்: வைகோ
மதுரை: மது குடித்தால் குடும்பம் சீரழியும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன். ஆனால், அண்ணா தி.மு.க.வினர் மது வாங்கிக்கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, குன்னத்தூர், ஆலம்பட்டியில் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசியதாவது:
நான் குஜராத் மாநிலத்துக்குச் சென்றிருந்தபோது, இன்றைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவர்கள் முதல்வராக என்னை வரவேற்றார். அங்கு நடைபெற்ற அமைதிப் பேரணியில் அவருடன் நானும் கரம்கோர்த்து நடந்துவர ஏற்பாடு செய்தார்.
நாங்கள் அனைவரும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியிருக்கக்கூடிய வதோதரா என்ற ஊருக்குச் சென்றோம். வதோரா என்றால், ஆலமரங்களின் கூட்டம் என்று அர்த்தம். பேரணியில் சென்ற நாங்கள் பகல் 12 மணிக்கு, வெயிலான வேளையில் ஆலமரங்களின் நிழலில் நாங்கள் போய்ச் சேர்ந்தோம்.
அந்த இடத்தில் தலைவர்கள் வரிசையாகப் பேசிவிட்டு, என்னை பேசச் சொன்னபோது, நான் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினேன். அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, வைகோவின் ஆங்கிலப் பேச்சை நான் இந்தியில் மொழிபெயர்க்கிறேன் என்றார்.
உடனே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்கள் இடைமறித்து, வைகோவின் பேச்சை நான் குஜராத்தி மொழியில் மொழிபெயர்க்கிறேன் என்று கூறிவிட்டு அவர் மொழிபெயர்த்தார்.
சாதாரண ஒருவர் பேசியதை ஒரு முதல்வர் மொழிபெயர்த்ததை இதுவரை நான் கண்டது இல்லை. நான் ஒரு சாதாரணமானவன். எனக்கு அவ்வளவு பெரிய பெருமையைத் தந்தார்.

இந்தியா என்ற ஆலமரம்
அப்பொழுது நான் சொன்னேன், ஆலமரங்களின் கூட்டத்துக்குக் கீழே நாம் உட்கார்ந்திருக்கிறோம். இந்த ஆலமரங்களில் எண்ணற்ற விதவிதமான வண்ணப் பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. அந்தப் பறவைகளுக்கு பசியைப் போக்க ஆலம் மரம் கனிகளைத் தருகிறது. எப்படி ஒரு ஆலமரத்தில் பல்வேறு விதமான பறவைகள் இருக்கிறதோ, அதைப்போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மதங்களையும் அரவணைக்கின்ற விதத்தில் அரசும் நாடும் இருக்க வேண்டும் என்று நான் பேசினேன். இந்த ஊருக்கு வந்தவுடன் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது.

ஜாதி, மதம் பார்க்க மாட்டேன்
நான் மனிதாபிமானம் மிக்கவன். யார் காயப்பட்டுக் கிடந்தாலும், சாதி, மதம் பார்க்காமல் போய்க் காப்பற்றுவேன். சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம் என்று பாரதி சொன்னதைப்போல, காக்கை குருவி எங்கள் சாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற உணர்வோடு வாழ்கிறவன் நான்.

மதுவிற்காக நடை பயணம்
நான் மது குடிக்க வேண்டாம் என்று வெயிலிலும், மழையிலும் நடைபயணம் சென்றேன். மது குடித்தால் குடும்பம் சீரழியும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன். ஆனால், அண்ணா தி.மு.க.வினர் மது வாங்கிக்கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச் செல்கிறார்கள். தாய்மார்கள் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பம்பரத்தில் வாக்கு
இந்த ஊரில் தம்பிமார்கள் எனக்கு வேம்பம் பூ மாலை அணிவித்தார்கள். இந்த வேப்பம் பூ மாலை பாண்டிய மன்னர்கள் அணிந்த மாலை. எனக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
ஆலமரத்தைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? ஆலும் வேலு பல்லுக்குறுதி, நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. நாலும் -என்றால் நாலடியார். ரெண்டும் -என்றால் திருக்குறள். ஆலமரத்து குச்சியையும், வேப்பமரத்துக் குச்சியையும் வைத்து பல் தேய்த்தால் பல்லுக்கு நல்ல உறுதியைத் தரும் என்று வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications