வக்பு மசோதா: நாடாளுமன்றத்தில் துரை வைகோவுக்காக ராகுல் காந்தி இறங்கி செய்த 'அந்த' சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற லோக்சபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீது தமது கருத்துகளை பேசுவதற்கு நேரம் கிடைக்காத சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான், காங்கிரஸ் எம்பி ஒருவர் பேச வேண்டிய நேரத்தை தமக்காக மாற்றிக் கொடுத்தார் என்று திருச்சி எம்பியும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.

திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்ட நிகழ்வு பற்றி துரை வைகோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: எல்லோரும் வாழ்த்தினாலும், பாராட்டினாலும், நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து பேச கிடைத்த வாய்ப்பை, நமது இஸ்லாமிய சகோதர சமுதாயத்திற்காக நான் முழுமையாகப் பயன்படுத்தவில்லையோ எனக் கடந்த ஒரு வார காலமாக என் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

'ஆண்டவன்' தந்த வாய்ப்பு

என் உண்மையான ஆதங்கத்தையும் மனப்பூர்வமான விருப்பத்தையும் புரிந்து கொண்ட ஆண்டவன், ஒன்றுக்கு இரண்டாக, யாருக்காக நான் மக்களவையில் பேச விரும்பினேனோ, அந்த திருச்சி தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்களின் முன்பாக திருக்குர்ஆன் வசனத்தை ஓதி, அதே உரையை மீண்டும் நிகழ்த்தும் வாய்ப்பை வழங்கினார். அப்போது என் கண்கள் குளமாயின; என் நா தழுதழுத்தது.

வக்பு சட்ட எதிர்ப்புப் போராட்டம்

“நமது வக்ஃப்; நமது உரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஜமாஅத்துல் உலமா சபை நேற்று (13.04.2025) ஏற்பாடு செய்திருந்த நாடு தழுவிய மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், புதுக்கோட்டை நகரிலும், திருச்சி மாநகரிலும் மிகுந்த எழுச்சியோடு அலைக்கடலென அதே நேரம் நேர்த்தியான ஒழுங்குடன் திரண்டிருந்த பல்லாயிரக்கனக்கான இஸ்லாமிய சொந்தங்களோடு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.

இஸ்லாமியர்களுக்கு உறுதி

அப்போது, வக்ஃபு திருத்தச் சட்டத்தை மறுமலர்ச்சி திமுக மிக வன்மையாக எதிர்க்கிறது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகப் பதிவு செய்ததுடன், “உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக உங்கள் எம்பி இந்த துரை வைகோ வந்து நிற்பேன்” என்று உறுதியளித்தேன். அப்போது, அத்தனை பேரின் முகத்திலும் ஒரு நிம்மதியைக் கண்டேன். எனது நாடாளுமன்ற உரையை எடுத்துரைத்து, அதன் இறுதியில் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினேன்.

லோக்சபாவில் பேச வாய்ப்பு மறுப்பு

நாடாளுமன்ற மக்களவையில் இந்த வக்ஃபு சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், வக்ஃபு சட்டம் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பிற்கு வரும்போது, எனது இஸ்லாமிய சகோதர-சகோதரிகளின் குரலாக இந்த வக்ஃபு சட்டத்தை எதிர்த்து பேசுவதற்கு வாய்ப்பு அவசியம் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று மக்களவைத் தலைவரை அணுகி கேட்டபோது, “ஓரிரு நிமிடங்கள் தருகிறேன்” என்றார். அப்படி தராமல் போனால் என்ன செய்வது என்று சிந்தித்தேன்.

ராகுல் காந்தியிடம் பிறந்த நாள் பரிசு கேட்ட துரை வைகோ

உடனே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு. ராகுல் காந்தியிடம் சென்று, “நாளை (02.04.2025) எனக்கு பிறந்தநாள். அதற்காக உங்களிடம் ஒரு பரிசு வேண்டும்” என்று உரிமையோடு கேட்டேன். அவரும், “கேளுங்கள், பிரதர்” என்று அதே உரிமையோடு பதிலளித்தார். அப்போதுதான், எனது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேச, எனக்கு கூடுதல் நேரம் வேண்டும் என்றேன். “சரி, பிரதர், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள நேரத்தில் உங்களுக்கு கொஞ்சம் ஒதுக்கித் தரச் சொல்லுகிறேன்” என்றார். மன நிம்மதியோடு, அடுத்த நாள் அவைக்குச் சென்றேன்.

ராகுல் சொல்லியும் கைவிரித்த காங்கிரஸ் கொறடா

நேரம் சென்று கொண்டே இருந்தது. எனக்கான வாய்ப்பு வரவே இல்லை. “வருமா, வராதா?” என்ற அச்சத்தோடு, அவைத் தலைவரின் அலுவலர்களைச் சந்தித்து விசாரித்தபோது, “அப்படி எந்தத் தகவலும் எங்களுக்கு இல்லை” என்று மறுத்துவிட்டனர். உடனே, காங்கிரஸ் கட்சியின் கொறடாவான, கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் திரு. கொடிக்குன்னில் சுரேஷைத் தேடி அழைத்து, எனக்கான நேரத்தை உறுதிப்படுத்த முற்பட்டேன். ஆனால், “காங்கிரஸ் கட்சி உறுப்பினருக்கே உரிய நேரம் இல்லை; இதில் இவருக்கு எப்படி கூடுதல் நேரம் ஒதுக்க முடியும்?” என்று மறுத்தார்கள்.

காங்கிரஸ் எம்பி நேரத்தை தந்த ராகுல் காந்தி

அப்போது, பாசத்திற்குரிய சகோதரர் திரு. ராகுல் காந்தி, தனது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவரின் பெயரை நீக்கிவிட்டு, அவருக்கு ஒதுக்கப்பட்ட முழு நேரத்தையும் எனக்கு வழங்கினார். இரவு 10:45 மணியாகிவிட்டது. என் கரங்கள் வியர்த்துவிட்டது. அப்போதுதான் நான் அழைக்கப்பட்டேன். எழுந்து, திருக்குர்ஆனின் வசனத்தை ஓதத் தொடங்கியபோது, எனக்கு வார்த்தைகள் தடுமாறின. எழுதி வைத்திருந்த குறிப்பைப் பார்த்து பேசினேன். அப்போது பேசிய உரையை, என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்ற எண்ணமே, கடந்த ஒரு வார காலமாக என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஆனால், நேற்று அந்த மன அழுத்தம் விடைபெற்றது. மன நிம்மதியோடு உறங்கி எழுந்தேன். இஸ்லாமிய சமுதாய சொந்தங்களுக்காக எந்நாளும் குரல் கொடுக்கும் ஒரு சகோதரனாக நான் இருப்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன். இவ்வாறு துரை வைகோ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லோக்சபாவில் துரை வைகோ பேசியது என்ன?

வக்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் லோக்சபாவில் துரை வைகோ பேசுகையில், இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை, மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் எதிர்க்கிறேன். இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாத் வ அக்ரளுல்லாஹ கர்ளன் ஹஸ்னன் யுளா அஃபு லஹும் வலஹும் அஜ்ருன் கரீம் என்று அரபி மொழியில் திருகுர்ஆன் வசனம் 57:18 சொல்கின்றது. ஏழை எளிய ஆதரவற்றோருக்கு தானதர்மம் உள்ளிட்ட தொண்டுகளை செய்வது, இறைவனுக்கே கடன் கொடுப்பதற்கு சமமானது என்பதுதான் இதன் பொருள். திருகுர்ஆனில் உள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளை செயல்படுத்துவதற்கும், இஸ்லாமியர்கள் இறை பணிகளை மேற்கொள்வதற்கும் தான் வக்பு சொத்துகள் உருவாக்கப்பட்டன.

இந்த வக்பு சொத்துகளின் மூலம் தான் மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள், கபர்ஸ்தான்கள் உருவாக்கப்பட்டன. பல வக்பு சொத்துக்களின் பயனாளிகளாக இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள் உள்ளிட்ட எல்லா மதத்தினரும் உள்ளனர். வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என பலரும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பல வக்பு சொத்துகளில் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டு இடங்களும் உள்ளன.

இஸ்லாமிய மன்னர்கள், செல்வந்தர்கள் மட்டுமல்ல, எங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு சமூகத்தினரின் கொடையாளர்களும் நல்லெண்ண அடிப்படையில் இஸ்லாமியர்களின் ஆன்மீகப் பணிகளுக்காக தங்கள் சொத்துக்களை வக்பு செய்து தானமாக கொடுத்துள்ளனர்.இது எங்கள் தமிழ் மண்ணின் வரலாற்றுச் சிறப்பாகும். இதுபோல் நாடெங்கிலும் பல உதாரணங்களை கூற முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+