அரசு அதிகாரியை மிரட்டிய அதிமுக பிரமுகரை கைது செய்யக் கோரி போராட்டம்: சிவகாமி அறிவிப்பு
சேலம்: சேலத்தில் அரசு அதிகாரியை மிரட்டிய அதிமுக பிரமுகரை கைது செய்யக் கோரி போராட்டம் நடைபெறும் என சமூக சமத்துவப் படை நிறுவன தலைவர் சிவகாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கடந்த நவம்பர் 21ம் தேதி ஆத்தூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பைத்தூர் ரோட்டில் உள்ள அதிமுக பிரமுகர் சதாசிவம் என்பவரது ஜவ்வரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சதாசிவம் அனுராதாவுக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யிடம் அனுராதா புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் ஆத்தூர் போலீசார் சதாசிவம் மீது அரசு பணியை தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு என நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவன தலைவர் சிவகாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசு துறைகளில் பணிபுரியும் பெண் அதிகாரிகள், அலுவலர்கள், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா ஆத்தூரில் உள்ள சேகோ ஆலையில் ஜவ்வரிசி தரம் குறித்து ஆய்வுக்கு சென்ற போது அந்த ஆலை உரிமையாளர் சதாசிவம் மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் கைது செய்யவில்லை. அவர் அதிமுக பிரமுகர் என்பதால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.
அதே போன்று சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆர்.ஐ., வி.ஏ.ஓ. என வருவாய்த்துறை அலுவலர்கள் 20க்கும் மேற்பட்டோர், ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
எனவே சேலம் மாவட்டத்தில் அரசு அதிகாரியை மிரட்டிய அதிமுக பிரமுகரை கைது செய்யக் கோரி விரைவில் கண்டன போராட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications