விஷாலை பார்த்து அதிமுக அதிகமாக பதற்றப்படுவது ஏன்?
Recommended Video

சென்னை: விஷால் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று அதிமுக தொண்டர்கள் தர்ணா நடத்தும் அளவுக்கு சென்றது ஏன்? அப்படி என்ன பயம் அவர்களுக்கு விஷால் மீது என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விரும்பிய நடிகர் விஷால், அதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா, இல்லையா என்பதில் பெரும் சிக்கல் எழுந்தது.
வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நேற்று நள்ளிரவு வரை சஸ்பென்ஸ் நீடித்தது.

அதிமுகவினர் தர்ணா
போலி கையெழுத்துகள் இருப்பதாக கூறி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், பரிசீலனைக்கு பிறகு அது ஏற்கப்பட்டதாக செய்தி வெளியானது. இப்படி ஒரு செய்தி வெளியானதும் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். விஷால் வேட்புமனுவை ஏற்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

பிற கட்சிகள் கண்டுகொள்ளவில்லை
திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் விஷாலை பொருட்படுத்தாத நிலையில், அதிமுகவினர் மத்தியில்தான் உச்சகட்ட பதற்றம் நிலவியது. விஷாலை தேர்தலுக்கு முன் மொழிந்தவர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக விஷால் ஆடியோ ஆதாரம் வெளியிடும் அளவு அங்கு ஒரே பதற்றம் மற்றும் பரபரப்பு நிலவியது.

அரசியல்வாதியாக்கிய அதிமுகவினர்
ஒரு சாதாரண நடிகராக மனுத்தாக்கல் செய்த விஷாலை, அதிமுகவினரின் இந்த பதற்றமும், பரபரப்பும் ஏதோ பெரிய அரசியல்வாதி என்பதை போல தூக்கிக் காட்டியது. இது விஷால் ஆதரவாளர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியான நகர்வாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஒருவழியாக விஷால் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்த பிறகே, அதிமுக வட்டாரத்தில் அமைதி நிலை ஏற்பட்டது. ஏன் விஷால் மீது இவ்வளவு பயம் அதிமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டது? என்ற கேள்வி இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

திமுக பக்கம் செல்லும் என நினைத்தனர்
இத்தனைக்கும் விஷால் திமுகவின் வாக்குகளையே பிரிப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். வழக்கமாக திமுக பக்கம் செல்லும் கணிசமான தெலுங்கு வாக்குகளை விஷால் ஈர்க்க வாய்ப்புள்ளது என்றே அரசியல் பண்டிதர்கள் கணித்தனர். ஆனால் அதிமுக கூடாரத்தில்தான் அதிகமான பதற்றம் தென்பட்டது. இதற்கு காரணங்கள், இரண்டு உள்ளதாக கூறுகிறார்கள்.

நடிகர் என்ற பிம்பம்
அதிமுக அடிப்படையில் ஒரு நடிகரான எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு நடிகையாக இருந்த ஜெயலலிதாவால் மேலும் வளர்க்கப்பட்ட கட்சி. இப்போதும் ஜெயலலிதா படத்தை வைத்துதான் தேர்தல் பிரசாரம் செய்யும் நிலையில் கட்சி உள்ளது. இப்போதுள்ள அதிமுக தலைமையில் திரையுலக ஈர்ப்புள்ளவர்கள் யாரும் இல்லை. இந்த நிலையில், அந்த ஈர்ப்புக்கான இடத்தை விஷால் கவர்ந்து செல்ல கூடும் என்ற அச்சம் அதிமுகவில் உள்ளது. முகத்தை பார்த்து வாக்களிக்கும் வாக்காளர்களை கொண்ட அதிமுக வாக்கு வங்கி, விஷால் முகத்தை பார்த்து நகர்ந்துவிட கூடாது அல்லவா.

வாக்குகள் சிதறக்கூடாது
இன்னொரு காரணம், இந்த தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதிமுக vs திமுக என்ற அளவில் போட்டியிருப்பதைதான் அதிமுக விரும்புகிறது. ஏற்கனவே தினகரன் போட்டியிடுவதால் அதிமுகவின் வாக்கு வங்கிக்குதான் ஆபத்து ஏற்படும். இதில் விஷாலும் போட்டியிட்டால் வாக்குகள் சிதறி, சிதறி தங்கள் தரப்புக்கு எஞ்சுவது குறைவாகவே இருக்கும் என்று அதிமுக நினைக்கிறது. இவ்விரு காரணங்களும் விஷால் மீதான அதிமுகவின் பயத்திற்கு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் யாரைப் பார்த்தும் அஞ்சாமல் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜகதான்.. சரிதானே?












Click it and Unblock the Notifications