கூட்டணி இழுபறி... பதில் சொல்ல முடியாமல் பேட்டியை பாதியில் முடித்த பிரகாஷ் ஜவடேகர்
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அப்படியேதான் இருக்கின்றன. சட்டசபை தேர்தலிலும் இந்த கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று தமிழக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டணி பற்றி தேமுதிக, பாமக கட்சிகளுடன் பேச்சு வார்த்தைக்கு வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், கூட்டணி கட்சிகள் சரியான பிடி கொடுக்காத காரணத்தால் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டு கட்சிக்காரர்களையும் தொண்டர்களையும் சந்திக்கப் போவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி பற்றி எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணி ஒரு பக்கம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றொரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தேமுதிகவின் விஜயகாந்த் இதுவரை எந்த கட்சிகளுக்கும் பிடி கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர்களோ, தேமுதிக தலைவர்களுடன் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தி விட்டோம் என்றும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார், நாங்களும் அவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு விஜயகாந்த் ஒருமுறை கூட பதில் சொல்லவேயில்லை.
இந்த நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக, பாமக, சமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சனிக்கிழமையன்று சென்னை வந்தார்.

முப்பெரும் கட்சிகள்
ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரை பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து நேற்று முன் தினம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அன்புமணி - விஜயகாந்த்
தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி கமலாலயத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது தி.நகர் இல்லத்தில் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசினார். பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் சந்தித்து கூட்டணிக்காக அழைப்பு விடுத்தார்.

விஜயகாந்துடன் பேச்சு
விஜயகாந்தின் இல்லத்துக்கு பிரகாஷ் ஜவடேகர் நேற்று மாலை 3.20 மணியளவில் சென்றார். வீட்டிலிருந்த விஜயகாந்துடன் பிரகாஷ் ஜவடேகர் அரை மணி நேரத்துக்கு மேல் தேர்தல் தொடர்பாக பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக தொடர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தை
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், கடந்த 24 மணி நேரமாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசியுள் ளேன். அந்த அடிப்படையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது.

விஜயகாந்த் மவுனம்
விஜயகாந்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விவரத்தை பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் தெரியப்படுத்தவுள்ளேன். மத்திய பட்ஜெட் முடிந்த பிறகு மீண்டும் வரும் வாரத்தில் நான் தமிழகம் வரவுள்ளேன். அப்போது, எங்கள் கூட்டணிக் கட்சியினரோடு ஊடகங்கள் முன்பாக தோன்றுவேன். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். விஜயகாந்த் தனது முடிவை கூறவில்லை.

மத்திய அரசு உதவி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 2 கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த போதிலும் மக்களின் வாழ்விலும், அரசியலிலும் மாற்றம் ஏற்படவில்லை. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அளிப்பது போன்ற நிர்வாகத்தை தமிழகத்தில் பாஜக அளிக்கும். மத்திய அரசு தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வருகிறது.

மாநில அரசு
ஆனால், மத்திய அரசு வழங்கும் திட்டங்களை இங்குள்ளவர்கள் தாங்களே அளிப்பது போல் செயல்படுகின்றனர். சென்னையில் வெள்ளம் வந்தபோது பிரதமர் நேரில் வந்து பார்வையிட்டார். மத்திய அரசு ஒதுக்கிய சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதியின் மூலமே, தமிழகத்தில் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் வெள்ள நிவாரண நிதியை தாங்களே தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.

மாற்று சக்தி
தமிழகத்தில் 50 ஆண்டுகால மாக மாற்று சக்தி ஒன்று உருவாகவில்லை. எனவே, அந்த மாற்றம் ஏற்படுவது உறுதி. அதனை பாஜகவே ஏற்படுத்தும். அதற்கான முயற்சியைத்தான் இப்போது மேற்கொள்கிறோம். மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் நற்பெயர் சம்பாதித்து கொள்ளவதாகவும் கூறினார்.

என்ன பிரச்சினை உங்களுக்கு?
முன்னதாக கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஜவடேகர், ஒரு கட்டத்தில் செய்தியாளர்களிடம் எரிச்சலடைந்தார். பேட்டியை கவர் செய்வதற்காக செய்தியாளர்கள் மைக்குகளை அவர் முன் நீட்டிக்கொண்டிருந்தனர். சிலர் கேள்விகளையும் எழுப்பினர். அப்போது அவர், என்ன பிரச்சினை உங்களுக்கு? என்னை சந்திக்க தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் இத்துடன் முடிக்கிறேன் நன்றி என்று பாதியிலேயே முடித்துக் கொண்டார். இது நேரடி ஒளிபரப்பு செய்த செய்தியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கேள்விகளுக்கு பதில் இல்லையே?
பாஜக உடன் சமக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி போன்ற சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. 'கிங்' முடிவில் இருக்கும் விஜயகாந்த் எந்த பதிலும் சொல்லவில்லை. பாமகவும் பிடி கொடுக்கவில்லை. எனவே கூட்டணி பற்றி எந்த முடிவும் எட்டப்படாத காரணத்திலேயே செய்தியாளர்களின் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டார் பிரகாஷ் ஜவடேகர்.
மீண்டும் தமிழகம் வரப்போவதாக கூறியுள்ளார் ஜவடேகர். அப்போதாவது விஜயகாந்த் மவுனம் கலைவாரா?












Click it and Unblock the Notifications