For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி கதை சொல்லி அமைச்சரான விஜயபாஸ்கர் வீழ்ந்த கதை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் சாதாரண எம்.எல்.ஏவாக அமர்ந்திருந்த விஜயபாஸ்கர், பேச வாய்ப்பு கிடைத்த போது, அவையில் ஓரு கதை சொன்னார். ‘தீபாவளி பட்டாசு வாங்க இரண்டு பேர் கடைக்குப் போறாங்க. அங்கேயிருந்த பட்டாசுக் கடை பேரு திருக்குவளை.

அங்கே ஒரு ராக்கெட் வெடி இருந்தது. அதோட பேரு 2ஜி ராக்கெட். விலை, 176. ‘இது எப்படி வெடிக்கும்?'னு கேட்டாங்க. ‘இது கூட்டு ராக்கெட். இத இங்கே பத்த வெச்சா.. ஜோடியா பறந்து போயி திகார் ஜெயில்லதான் வெடிக்கும்!' என சொன்னார் கடைக்காரர்.

why Minister Vijayabaskar losses his key post

வேற கடைக்குப் போறாங்க. அந்தக் கடைக்குப் பேரு கோயம்பேடு பயர் ஒர்க்ஸ். இந்தக் கடையை மச்சான் இன்சார்ஜ்ல விட்டுட்டு ஓனர் ரவுண்டுக்குப் போயிட்டார்''.

இப்படி கருணாநிதியைத் ‘தள்ளு வண்டி' என்றும், விஜயகாந்தை ‘தண்ணியிலே இருப்பவர்' என்றெல்லாம் விஜயபாஸ்கர் பேசிய பேச்சுக்கு சிரித்த ஜெயலலிதா மறுநாளே அவரை சுகாதாரத்துறை அமைச்சராக்கி அழகுபார்த்தார்.

புதுக்கோட்டையில் மாவட்ட செயலாளராகவும் கட்சியில் அசைக்க முடியாக சக்தியாக வலம் வந்த விஜயபாஸ்கர் இப்போது மாஜி மாவட்ட செயலாளர். காரணம், கட்சியில் சீனியர்களை மதிக்காமல் இருந்ததும், பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமூகத்தினரை பகைத்துக்கொண்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு இவர் ஐவர் அணியில் உள்ள ஒ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆதரவாளராகவும் செயல்பட்டதுதான் என்கின்றனர்.

விஜயபாஸ்கர் பின்னணி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். கடந்த 2001ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியிலும், 2011ல் விராலிமலை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், கடந்த 2011க்குப் பிறகு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பின்னர், 2013ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

ஜாதி பிரச்சினை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான கங்கையம்மாள் மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகியோரை சாதி பெயரை சொல்லி திட்டியதோடு அவதூறாகப் பேசினார் என்பது புகார். "ஏற்கெனவே என்னை திருச்சியில் எதிர்த்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். உன்னை எல்லாம் ஒரு நிமிடத்தில் காணாமல் செய்துவிடுவேன்" என்று மிரட்டியதோடு அவர்களை கட்சியை விட்டே கட்டம் கட்ட வைத்தார்.

மறியல் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த முத்தரையர் சமுதாய மக்கள் அமைச்சரைக் கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விஜயபாஸ்கர், இது சிலரின் திட்டமிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அப்போதே அமைச்சர் பதவியோ, கட்சிப்பதவியோ பறிபோகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தப்பிவிட்டார்.

விஜயபாஸ்கருக்கு எதிராக புகார்

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேர்தலில் புதுக் கோட்டை மாவட்டத்தில் அதிமுக வுக்கான வாக்கு சரியக்கூடுமென உளவுப் பிரிவு மூலம் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

கல்குவாரிகள்

இது ஒருபுறம் இருக்க அரசு கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதில் மற்ற குவாரிகளுக்கு பகிர்ந்தளிக்காமல் அமைச்சர் மற்றும் அவரது உறவினர்களின் குவாரிகளில் இருந்துதான் வாங்க வேண்டுமென நிர்ப்பந்தித்தார் என்று கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை இவரே ஆள் நியமித்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

திமுகவினருடன் நெருக்கம்

தனது உறவினரின் கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி கிடைத்ததால் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை அமைச்சர் பகைத்துக் கொள்வதில்லையென்றும், சில நேரங்களில் தொகை பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் கூறப் படுகிறது.

உட் கட்சி மோதல்

அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்ததற்காக பாராட்டுக்களை பெற்றாலும் உட்கட்சி மோதலால் பலரின் அதிருப்தியை சம்பாதித்து வைத்துள்ளாராம்.

சீனியர்கள் புறக்கணிப்பு

விழாக்களில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரான ந.சுப்பிரமணியன் இருந்தாலும் தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்வார், ஏனைய எம்எல்ஏக்களை அனுசரித்துச் செல்வதில்லை என்று கூறப் படுகிறது.

ஒபிஎஸ் ஆதரவாளர்

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெருக்கமாக இருந்து பலமுறை பதவியை காப்பாற்றிக் கொண்டார் விஜயபாஸ்கர். பன்னீர்செல்வத்துக்கு வலது கரம்போல செயல்பட்டு வந்ததாராம் . தற்போது அவருக்கு வேண்டிய ஆட்கள் காலி செய்யப்பட்டு வரும் நிலையில், விஜயபாஸ்கரின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

மா.செ. பதவி பறிப்பு

மேலும், அதிமுகவில் மன்னார்குடியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களையும் புறக்கணித்து வந்தாராம். இதுகுறித்து ஆலங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்ததாம். இதன் விளைவாகவே அமைச்சர் பதவியில் கைவைக்காமல், கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டையில் கொண்டாட்டம்

விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே, அவரது எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அந்த அளவிற்கு பலரின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளார். இந்தமுறை விஜயபாஸ்கருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர் புதுக்கோட்டை அதிமுகவினர்.

English summary
Chief Minister J Jayalalithaa on Wednesday dropped Health Minister C Vijaya Baskar has been relieved as party's Pudukottai district. here is the background story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X