தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை... வறண்ட நீர் நிலைகளை நோக்கி பாய்கிறது மழை நீர்
Recommended Video

சென்னை: தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், வறண்ட கிடந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விட்டு, விட்டு பெய்யும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லத்தேரி, அம்முண்டி, திருவலம் சேர்க்காடு, கண்டிப்பேடு, கசம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழைபெய்தது. இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் நீர் வழிந்தோடியது.
சேலம் அம்மாபேட்டை, சின்னக்கடை வீதி ,பழைய பேருந்து நிலையம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் அப்பகுதிகளில் குளுமையான சூழல் நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மும்முனி, மாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது. மழையால் சில பகுதிகளில் மின்சாரமும் தடைபட்டது.
நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்ததையடுத்து தாழ்வான பகுதிக்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேந்தமங்கலம், கொல்லிமலை, காரவள்ளி, முத்துக்கப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழையானது நீடித்தது.












Click it and Unblock the Notifications