சுண்டி இழுத்த வாசம்.. குன்னூர் ரயில் நிலைய கேண்டீனை தேடி வந்த நீலகிரியின் ராஜாக்கள்.. பரபரப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ரயில் நிலையத்தில் புகுந்து காட்டு யானைகள் அங்கிருந்த கேண்டீனை சூறையாடி அட்டகாசம் செய்தன. இதன் காரணமாக அங்கிருந்த பொருட்கள் சேதமாகியது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மழை குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். முற்றிலும் மலை பகுதியிலேயே அமைந்துள்ள மாவட்டமாக நீலகிரி இருக்கிறது.

இங்கு தேயிலை தோட்டங்களை தாண்டி மிக அடர்ந்த வனப்பகுதிகளும், மிக அபூர்வமான பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. இதேபோல் இந்த வனப்பகுதியில் காட்டு யானை, கரடி, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தவிர ஏரளாமான தோட்டப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. கேரட், மலை வாழை, பூண்டு, உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்பட பல்வேறு மலைபயிர்கள பயிரிடப்படுகின்றன. இதேபோல் நீலகிரியில் பலாப்பழம் அதிக அளவில் பயிரிடப்படும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் களை கட்டி ஒட்டி உள்ளது.
பலா பழங்களை யானைகள் விரும்பி சாப்பிடும். இதன் வாசத்தை அறியும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பலாப்பழங்கள தேடி வருகின்றன. மேலும் சாலையோர மரத்தில் காய்த்து தொங்கும் பலாக்காய்களை காட்டு யானைகள் பறித்து தின்று வருகின்றன.
குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம், கே.என்.ஆர்.நகர், பர்லியார் ஆகிய பகுதிகளில் தற்போது பலா பழம் அதிக அளவில் காணப்படுகிறது. மழையின் காரணமாக வறண்டு இருந்த நீரோடைகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பலா மரங்கள் பச்சை பசேல் என காய்த்து தொங்குகின்றன. இதனால் பலாப் பழத்தை சுவைக்கவும், பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காகவும் யானைக் கூட்டங்கள் குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்டிருக்கின்றன.
இதனிடையே நேற்று காலை 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் உள்ள ஹில்குரோவ் ரயில் நிலையத்திற்குள் புகுந்தன. அங்குள்ள கேண்டினில் புகுந்த யானைகள், உணவு மற்றும் தண்ணீரை தேடியதுடன், கேண்டீனை துவம்சம் செய்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகி உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்த தண்ணீர் குழாய்களை யானைகள் உடைத்துவிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் நிலையத்தில் முகாமிட்ட யானை கூட்டங்களை கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரைவில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரயில் நிலையத்தில் காட்டு யானைகள் புகுந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications