சுறுசுறுப்படையும் அதிமுக அணிகள்... சட்டுபுட்டுன்னு இப்போவாவது ஒன்னு கூடுவாங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆறுமாதமாக அடித்துக் கொண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் சேற்றை வாரிப் பூசிக் கொண்டு வார்த்தைப் போர் நடத்திய நிலையில் இரு அணிகளும் இணையும் என்ற பேச்சு தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது இறப்பிற்கு பின்னர் கட்சி எப்படி இருக்கும் என்று ஜெயலலிதா திட்டமிடாததன் விளைவை அதிமுக அவர் மரணமடைந்த 8 மாதத்தில் சந்தித்து வருகிறது. சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்து விட்டு ஜெயலலிதா சமாதியில் ஞானம் பெற்ற மௌனம் உடைத்தார் ஓ.பன்னீர்செல்வம். நான் நிர்பந்தப்படுத்தப்பட்டேன் என்று அவர் சொன்ன வார்த்தை எதிர்ப்பு அரசியலுக்கு வித்திட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்படத் தொடங்கியதையடுத்து ஓ.பி.எஸ். அணி மூத்த நிர்வாகிகளுடன் 11 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து செயல்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர். சட்டசபையில் தொடக்க காலத்தில் அதிமுக அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

 பிளவுபட்ட அதிமுக

பிளவுபட்ட அதிமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பிஎஸ் தரப்பில் மதுசூதனனை களத்தில் இறக்க, சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிட்டார். இரு அணிகள் போட்டியால் கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டு, இரண்டு அணிக்கும் தனித் தனி பெயர் ஒதுக்கப்பட்டது. அப்போது முதல் சசிகலா அணி அதிமுக அம்மா அணி என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகின்றன.

 எடப்பாடி கைக்கு மாறிய லகான்

எடப்பாடி கைக்கு மாறிய லகான்

சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை நோக்கி தர்மயுத்த பயணத்தை தொடங்கினார். இந்த இடைப்பட்ட காலத்தில் இரட்டை இலை லஞ்சப் புகாரில் அதிமுக அம்மா அணியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த தினகரன் சிறைக்குச் செல்ல அதிகாரம் தானாகவே எடிப்பாடியார் கைக்கு போனது.

 ஒத்து போகாத டீல், விலகிப் போன பேச்சுவார்த்தை

ஒத்து போகாத டீல், விலகிப் போன பேச்சுவார்த்தை

சசிகலா, தினகரன் இருவருமே கட்சியில் இல்லாத நிலையில் அதிமுகவின் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்காக இரு அணிகள் சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இரண்டு அணிகளின் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதே தவிர ஒரு முறை கூட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எல்லாம் கட்சி யாருக்கு, ஆட்சி யாருக்கு என்ற டீலிங் ஒத்து போகாததால் தான் என்று இரு அணிகளின் தொண்டர்கள் கிசுகிசுத்தனர். கடைசியில் பேச்சுவார்த்தை நடத்தாமலே குழு கலைக்கப்படுவதாக காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

 கெடு விதித்த தினகரன்

கெடு விதித்த தினகரன்

இந்த பிரச்னைகளுக்கு இடையில் பாஜகவும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை வைத்து அரசியல் செய்ய சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் நான் கட்சியில் தொடர்ந்து செயல்படுகிறேன் என்று அறிவித்தார். இதனையடுத்து சிறையில் சென்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் 2 மாதம் கால அவகாசம் கொடுக்கிறேன் அதற்குள் இணைகிறார்களா பார்ப்பேன் இல்லையென்றால் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நான் கையில் எடுப்பேன் என்று கூறியிருந்தார் தினகரன்.

 மீண்டும் முதலில் இருந்தேவா?

மீண்டும் முதலில் இருந்தேவா?

இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மக்களை நோக்கி பிரச்சாரம் செய்யப் போவதாக தினகரன் அறிவித்துள்ள நிலையில். ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி அணியும் இணைப்புக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்படி அணியும் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.

 ஒன்று சேர்வார்களா?

ஒன்று சேர்வார்களா?

தினகரனின் கெடு முடிவதால் கிடுகிடுத்துப் போயுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் டீம் ஆறு மாதமாக இரண்டு எதிர் அணியினரை கிழித்து தொங்கவிட்டதையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றுகூடத் தயாராகி வருகின்றனர். ஆனால் இந்த முறையாவது இவர்கள் ஒன்னுகூடுவார்களா, அவர்களை சுற்றியிருப்பவர்கள் ஒன்னுகூட விடுவார்களா என்பது தான் சந்தேகமாக உள்ளது.

 பலன் இருக்குமா?

பலன் இருக்குமா?

அப்படியே இந்த இரண்டு அணியும் இணைந்தாலும் இதனால் கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏதாவது நல்லது நடக்குமா. நீட் தேர்வு குளறுபடிகளால் மாணவர்களின் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் போராட்டங்கள் மற்றொரு புறம் ஓலமிட்டு வருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஏதேனும் மாற்றத்தைத் தருமா அதிமுகவின் இரு அணிகள் இணப்பு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Will OPS and EPS camp merge together what will happen if they merge, is it useful for the party and People of Tamilnadu.
Please Wait while comments are loading...