பாஜக அணியில் நெருங்குது க்ளைமாக்ஸ்... நாளை "விலகல்" முடிவை அறிவிக்கிறது பா.ம.க.?
சென்னை: லோக்சபா தேர்தலில் பல மாதங்களாக கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வரும் பாஜக கூட்டணியில் க்ளைமாக்ஸ் நெருங்கி விட்டது. பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? அல்லது தனித்துப் போட்டியிடுமா? என்ற அறிவிப்பு நாளை வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலைமையில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் திமுக, அதிமுக சமபலத்துடன் மோதுகின்றன.
இதற்கு சமமாக பாஜகவும் ஒரு வலுவான அணியை உருவாக்க பெரும் போராட்டமே நடத்திப் பார்த்துவிட்டது. இந்தியாவிலேயே இத்தனை சோதனைகளை தாங்கிக் கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்கியது தமிழக பாஜக தலைவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதில் இருவேறு கருத்தே இருக்க வாய்ப்பு இல்லை.

முந்தைய கணக்கு
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெறும் என்று கூறப்பட்டது. அத்துடன் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14, பா.ம.க.வுக்கு 8, பா.ஜ.க.வுக்கு 8, ம.தி.மு.க.வுக்கு 7, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 என்று தொகுதிகளை பிரித்துக் கொண்டு போட்டியிடும் என கூறப்பட்டது.

தேமுதிக- பாமக யுத்தம்
அதே நேரத்தில் தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் தேமுதிக- பாமக இடையே பெரும் யுத்தமே நடைபெற்றது. இந்த நிலையில்தான் அதிரடியாக கடந்த 14-ந்தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருவள்ளூர், வடசென்னை, திருச்சி, நாமக்கல், மதுரை ஆகிய 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினார்.

கூடுதல் தொகுதி கேட்ட பாமக
ஆனால் இதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்க மறுத்தார். தாங்கள் அறிவித்த 10 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதுடன் தர்மபுரியில் அன்புமணியும், கள்ளக்குறிச்சியில் ஆத்தூர் சண்முகமும் போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்தார்.

அன்புமணி அடம்
இதன் மூலம் பா.ம.க, பாஜக அணியில் இருந்து வெளியே போக அதாவது 'நடையை' கட்ட முடிவெடுத்ததாகவே கூறப்பட்டது. அதே நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸோ என்ன நடந்தாலும் கூட்டணியிலும் நீடிப்போம் என்று அடம்பிடித்து வருகிறார்.

சேலத்தை தர முடியாது- பாஜக
பாமகவின் பிடிவாதம் தளருவது போல் இல்லை என்பதால் பாஜகவும் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது சேலம் தொகுதியை பா.ம.க.வுக்கு விட்டுக் கொடுக்க இயலாது. இதை பா.மக. ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரட்டும் என்றும் அதிரடியாக பாஜக முடிவு செய்துள்ளது. மேலும் இன்று இரவுக்குள் முடிவு எடுத்து சொல்லுங்கள் என்று பாமகவுக்கும் கெடுவும் விதித்துவிட்டதாம் பாஜக.

நாளை முடிவு அறிவிப்பு?
பாஜக இறங்கிவராத நிலையில் மொத்தம் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது அல்லது தாம் உருவாக்கிய ஜாதிய கட்சிகளுடன் 'சமூக ஜனநாயகக் கூட்டணி' என்ற பெயரில் களம் இறங்குவது என்ற முடிவுக்கும் வந்துவிட்டதாம் பா.மக.

மீண்டும் தொகுதி பங்கீடு
அப்படி கூட்டணியில் இடம்பெறாவிட்டால் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்கும் வகையில் மற்றொரு தொகுதி பங்கீடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை வருகிறார் ராஜ்நாத்சிங்
இதனடிப்படையில் ராஜ்நாத் சிங் சென்னையில் வரும் 20-ந் தேதி பா.ஜ.க. கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications