For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோகாவை இந்து மதத்தோடு மட்டும் சுருக்கி விடாதீங்க.. அனைவருக்கும் பொதுவானது: அன்புமணி ராமதாஸ்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: யோகா செய்வது அனைவருக்கும் நலம் தரக் கூடியது.. அனைத்து மதங்களுக்கும் பொதுவானது; அதை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 21ம் தேதியை உலக யோகா நாளாக ஐ.நா. பொது அவை அறிவித்திருக்கிறது. உலக யோகா நாள் முதன் முதலாக நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லி, சென்னை உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Yoga common to all faiths, says PMK

உலக யோகா நாள் இந்தியாவின் முயற்சியில் அறிவிக்கப்பட்டிருப்பது நமக்கு பெருமை அளிப்பதாகும். உலகின் மிகப் பழமையான கலைகளில் யோகாசனம் குறிப்பிடத்தக்கதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான யோகா பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். மனதையும், உடலையும் ஒருங்கிணைப்பது; சிந்தனையையும், செயலையும் ஒருங்கிணைப்பது; மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவது; மனித நலம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் அருமருந்தாக திகழ்வது யோகாசனக் கலை ஆகும்.

தொடர்ந்து யோகாசனம் செய்தால் இதய நோய், நீரழிவு நோய், மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கன்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய கலை யோகாசனம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழங்காலத்தில் தமிழர்கள் எந்தவித நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததற்கு முதன்மையான காரணம் யோகாசனம் ஆகும். உலகின் சிறந்த இயற்கை மருத்துவ முறை என்று போற்றப்படும் சித்த மருத்துவத்தை நாட்டுக்கு வழங்கிய சித்தர்கள் தான், 6,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகாசன கலையையும் அறிமுகப்படுத்தினர். இன்று யோகாசன கலை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய யோகா கலை ஐரோப்பாவில் தொடங்கி, ஆப்பிரிக்கா வரை 175 நாடுகளில் கடைபிடிக்கப்படுவதில் இருந்தே இதன் சிறப்பை அறியலாம்.

நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது யோகா கலையை பரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன். பல்வேறு இடங்களில் யோகா அறிவியல் முகாம்களை நடத்தியதுடன் யோகா பயிற்சியும் வழங்கியுள்ளேன். யோகா செய்வதன் மூலம் மூட்டுவலி, நீரழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பிரச்சாரம் செய்தது.

யோகா கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்குடன் ஜூன் 21ம் தேதி உலக யோகா நாளாக கடைபிடிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். அதே நேரத்தில் யோகா கலையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை. யோகா அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மதங்களுக்கும், அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாகும். இதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி அதன் சிறப்பை அழித்து விடக் கூடாது.

மனம் முழுக்க அழுத்தத்துடன் இருக்கும் ஒருவர் சிறிது நேரம் யோகா செய்தால் குழந்தையைப் போல மாறி விடுவார் என்று அனுபவித்தவர்கள் கூறுகின்றனர். இத்தகைய அற்புதமான கலையை நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்; அதன் மூலம் மன அழுத்தம், நோய், பகைமை உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் அழிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கமும் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

அதுமட்டுமன்றி, மாணவ பருவத்திலேயே யோகா கலையை பயிற்றுவிப்பதன் மூலம் தான் அதன் முழு பயனையும் மக்களுக்கு வழங்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு பாடவேளை யோகா பயிற்றுவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

English summary
PMK today called for popularising Yoga by including it in schools, but voiced concern over attempts to confine it to a particular faith, insisting that it was common to all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X