கொரட்டூர் காவல் நிலையத்திலேயே போலீஸை பாட்டிலால் குத்திய இளைஞர்.. அதிரடி கைது
தலைமை காவலர் இளைஞர் ஒருவரால் மதுபோதையில் தாக்கப்பட்டார்.
சென்னை: காவல் நிலையத்திலேயே போலீஸை பாட்டிலால் சரமாரியாக குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பீட்சா விநியோகிக்கும் பணி செய்துவருகிறார் நேற்றிரவு வேலை முடித்துக்கொண்டு மணிகண்டன் கொரட்டூர் பகுதி வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மணிகண்டன் இருந்துள்ளார்.

அவ்வழியாக வந்த போலீசார், மணிகண்டனை தடுத்து நிறுத்தி, விசாரித்தபோது, மணிகண்டன் குடித்துவிட்டு பைக் ஓட்டியது தெரியவந்தது. இதனால் மணிகண்டனை கொரட்டூர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அங்கு போனதும் போலீசாருடன் தகராறு செய்ய ஆரம்பித்தார்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து தலைமை காவலர் சித்துராஜ் என்பவர், பைக்கை ஸ்டேஷன் வாசலில் விட்டு செல்லுமாறு மணிகண்டனிடம் சொன்னார். இதனால் மணிகண்டனுக்கு ஆத்திரம் மண்டைக்கேறி, அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்து உடைத்து, தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சித்துராஜை சரமாரியாக குத்த ஆரம்பித்துவிட்டார்.
இதில் சித்துராஜுக்கு முகம், உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்ட அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து, படுகாயமடைந்த சித்துராஜை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, குடிபோதையில் தலைமை காவலரை தாக்கிய மணிகண்டன் கைது செய்யப்பட்டதுடன், அவரது பைக்கும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications