For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இது உங்கள் சொத்து': அரசு பஸ்சை கடத்தி சென்றவர் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் கடத்தப்பட்டது. அந்த பஸ்சை கடத்தி 12 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று, ராமநாதபுரத்தில் இருந்து குமுளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் முன்பக்க கண்ணாடியில் மழைநீரை துடைத்து சுத்தம் செய்யும் வைப்பர் கருவி சரிவர இயங்கவில்லை.

இதனால் தேனி புதிய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் ஏற்றி விடப்பட்டனர். இதையடுத்து பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைக்கு பஸ்சை டிரைவர் ஜெயராமன் கொண்டு சென்றார்.

Youth drives away with government bus

அங்கு பஸ்சில் பழுது சரி பார்க்கப்பட்டது. பின்னர் பஸ்சை பணிமனையில் இருந்து வெளியே எடுத்து வந்தார். பணிமனைக்கு எதிரே பஸ்சை நிறுத்தி விட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டிரைவரும், கண்டக்டரும் சாப்பிடச் சென்று விட்டனர்.

திரும்பி வந்து பார்த்த போது சாலையோரம் நிறுத்தி இருந்த பஸ்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், ஜெயராமன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோட்டூரில் சாலை தடுப்பில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பஸ், பழனிசெட்டிபட்டியில் இருந்து கடத்தி வரப்பட்ட பஸ் என்பது தெரியவந்தது.

விசாரணையில், பஸ்சை கடத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியது கோம்பை நகரை சேர்ந்த மணிகண்டபிரபு (25) என்று தெரியவந்தது. அவரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரிஷியனான மணிகண்ட பிரபு, எலக்ட்ரிக் பொருள்கள் வாங்க கம்பம் சென்றிருந்தார். குடிபோதையில் இருந்த மணிகண்ட பிரபு, தவறுதலாக தேனி செல்லும் பேருந்தில் ஏறிவிட்டாராம். எனவே, அவரை அந்த பேருந்தின் நடத்துநர் தேனி பழனிசெட்டிபட்டியில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

மது போதையிலும், பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கோபத்திலும், புத்தி தடுமாறிய நிலையில் இருந்த மணிகண்ட பிரபு, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை கிளப்பிச் சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஸ்சை கடத்தி வந்த மணிகண்டபிரபு அந்த பஸ்சை பழனிசெட்டிபட்டியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும், கோட்டூரில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்படுத்திய போது, அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த சீலையம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (47) என்பவர் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வீரபாண்டி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A youth who drove a government bus away was arrested by the police near Theni in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X