திமுக நகரச் செயலாளரை மாற்றுக! அதிராம்பட்டினத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்! தலைமைக்கு புது தலைவலி!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திமுக தலைமைக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் திமுக நகரச் செயலாளராக உள்ள குணசேகரன் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் சமூக நீதியை காக்க வேண்டும் என்றால் குணசேகரனிடமிருந்து பதவிகளை பறிக்க வேண்டும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் திமுகவிற்கு வாக்களிக்கும் பொதுமக்கள் என்ற பெயரில் அந்த போஸ்டர்கள் அச்சிடப்பட்டிருப்பது தான். குணசேகரனை பொறுத்தவரை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளராக இருந்து வருகிறார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிராம்பட்டினம் துணை தலைவர் பதவியை திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால் விடுவேனா பாருங்க என கோதாவில் குதித்த குணசேகரன் தலைமையின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார்.
திமுக தலைமை அறிவுறுத்தியபடி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தில்னவாஸ் பேகத்துக்கு அதிராம்பட்டினம் நகராட்சி துணை தலைவர் பதவி எனக் கூறி வந்த குணசேகரன், கடைசியில் யாரும் எதிர்பாராத வகையில் ட்விஸ்ட் வைத்து தாமே அந்தப் பதவியை கைப்பற்றினார்.

தனது மனைவி கவுன்சிலராக உள்ள 2வது வார்டை புறக்கணிப்பதாக கூறி டி.ஆர்.பாலு ஆதரவாளர் அஸ்லம் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து 2வது வார்டு மக்களுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நகராட்சி நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டி புகார் மனு அளித்திருந்தார்.
இதனிடையே இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் அதிராம்பட்டினத்தில், திமுக நகரச் செயலாளர் குணசேகரனுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தலைமைக்கு புது தலைவலியை கொடுத்துள்ளது. இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள அதிமுக, திமுகவை விடுங்க அவங்க அப்படித்தான் என அதிரை இஸ்லாமியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய காய் நகர்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications