பொதுமக்களின் ஆதார் கார்டுகளை வாங்கி .. கற்பனையே செய்ய முடியாத மோசடி.. தஞ்சையில் சிக்கிய கும்பல்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காரில் வந்தனர். அதே காரில் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பண ஆசை காட்டி ஆதார்கார்டுகளை வாங்கி ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஆதார் கார்டை வைத்து மோசடி செய்வது அடிக்கடி நடக்கிறது. தஞ்சாவூரில் வாகன சோதனையில் ஆதார் கார்டை வைத்து மோசடி செய்த கும்பல் சிக்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஐந்துதலைப்பு வாய்க்கால் பகுதியில் கடந்த 27 ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக 2 கார்களில் வந்த 7 பேரை மடக்கினர். அப்போது காரில் ராஜஸ்தான் மாநிலம் மற்றும் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

இதையடுத்து காரில் இருந்த திருவிடைமருதூர் அருகே திருலோகியைச் சேர்ந்த 35 வயதாகும் சிவா என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். மேலும், மற்றவர்களை தனித்தனியாக விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்கள். இதையடுத்து சிவா உள்ளிட்ட இரண்டு கார்களில் வந்த 7 பேரையும் திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சிவா கோவையில் உள்ள ஒரு டீக்கடை நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடைய கடைக்கு எதிரே, ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் எதிரே பானிபூரி கடை வைத்திருந்தார்கள். அவர்களுடன் சிவாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், தங்களிடம் பானிபூரி மற்றும் டீ சாப்பிட வருவோரிடம், "வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்க, ஆதார் கார்டு கொடுத்தால் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் தருவோம்" என்று கூறி, அவர்களின் ஆதார் எண்ணை வாங்கிக்கொண்டு அவற்றை பயன்படுத்தி வங்கி கணக்கு, சிம் கார்டு பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அந்த வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகள் மூலம் ஆன்லைன் மோசடி போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்யும் இடைத்தரகர்களாகவும், சில நேரங்களில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுவரை சுமார் 150 பேரின் ஆதார் கார்டுகளை ஏமாற்றி பெற்று மோசடியில் ஈடுபட்டிருந்தார்கள்.
இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவா, அவருடைய நண்பரான சாரதி (21), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன்லால் (23), கஜேந்திரகுமார் (27), ராம்ஸ்வருப்பாகர் (23), மகேந்திரநாயக் (30) மற்றும் பெங்களூருவை சேர்ந்த தினேஷ் (43), ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 7 செல்போன்கள், 15 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் 15 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தசம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications