சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு அகற்றம்.. துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடக்கோரி மக்கள் மறியல்
தஞ்சாவூர்: புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் சிஐஎஸ்எஃப் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
Recommended Video
அந்த வகையில் இன்றைய தினம் சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீரர் தனது பயிற்சியை மேற்கொண்டார்.

தலையில் குண்டு பாய்ந்தது
அப்போது அவரது துப்பாக்கியிலிருந்து 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் போய் விழுந்தது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. மற்றொன்று வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அவரது பேரன் புகழேந்தியின் (11) தலையில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

குண்டு அகற்றம்
இதனை தொடர்ந்து சிறுவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த குண்டை அகற்றினர். இதனையடுத்து சிறுவன் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்
இதற்கிடையே சிறுவன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும்
இதனை தொடர்ந்து தற்காலிகமாக சாலை மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் சிலர் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டு வருகின்றனர் இதனால் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அம்மா சத்திரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக தமிழக அரசு மூட வேண்டும் இங்கு இனி துப்பாக்கி சுடும் பயிற்சியை நடத்தக் கூடாது என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது












Click it and Unblock the Notifications