இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கும் ஸ்டாலின்.. தஞ்சையில் 2 நாள் சுற்றுப்பயணம்.. என்ன திட்டம்?
தஞ்சை: கல்லணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 2 நாள் பயணமாக தஞ்சை செல்லும் ஸ்டாலின், ரோடு ஷோ மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதேபோல் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக சேலம் சென்ற முதல் ஸ்டாலின், மேட்டூர் அணையை திறந்து வைத்தார். அன்றைய தினமே கல்லணையை ஜூன் 15ஆம் தேதியான இன்று திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் பயணமாக தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வரும் ஸ்டாலின், அங்கிருந்து காரில் கல்லணைக்கு செல்கிறார். அதன்பின் மாலை 6 மணியளவில் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிடுகிறார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து மாலை தஞ்சை வரும் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ரயிலடி, ஆத்துப்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு 3 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார்.
இதன்பின் இரவு தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை எம்எல்ஏ துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மாலையில் திருச்சி வந்து, விமானம் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி திருச்சி, தஞ்சையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications