எலியை வாயில் கவ்வியபடி போராட்டம்! சர்க்கரை ஆலை முன்பு சமையல்! அசராத அய்யாகண்ணு!
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து வாயில் எலியை கவ்வியபடி அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்க்கரை ஆலையின் முன்பாகவே சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் கோரிக்கை முழக்கங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
அய்யாகண்ணு ஒரு போராட்டத்தில் பங்கேற்கிறார் என்றால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கும் தமிழக விவசாயிகள்.. அய்யாகண்ணு அதிரடி அறிவிப்பு

திருஆருரான் சர்க்கரை ஆலை
கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது . இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் வரை பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்திருந்தது . இது தவிர மேலும் பல்வேறு விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் பெற்றது.

கால்ஸ் டிஸ்லரீஸ்
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டது. மூடப்பட்ட சர்க்கரை ஆலையை கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் சீரமைப்பு பணிகளை தொடங்கிய போது அதனை கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தியதுடன் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு உங்களது பணியை தொடங்குங்கள் என தெரிவித்தனர்.

எலியை வாயில் கவ்வியப்படி
இந்நிலையில் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கால தாமதம் இன்றி உடனே வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் 2வது நாளாக இன்று காலை ஆலை முன் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் எலியை வாயில் கவ்வியப்படி, சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமையல் செய்து
இதனிடையே வருவாய்த்துறையினர், காவல்துறையினர், ஆலை நிர்வாகத்தினர் என பல தரப்பினரும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அய்யாகண்ணு அதற்கெல்லம் அசரவில்லை. சர்க்கரை ஆலையின் முன்பு உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதால் அவர்களை கலைந்து செல்ல வைக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.