அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு நடத்துநர்கள் எதிர்ப்பு... 3 மணி நேரம் தொடர்ந்த போராட்டம்..!
தஞ்சை: அரசுப் பேருந்து நடத்துனர்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சையில் 3 மணி நேரமாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஆரிய மோட்டூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துரைமுருகன், அரசுப் பேருந்துகளில் பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாக நடத்தினால் அவர்கள் வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என எச்சரித்திருந்தார்.
மேலும், அரசுப் பேருந்துகளில் பெண்களை நடத்துநர்கள் இனி தரக்குறைவாக நடத்தினால் அடியுங்கள் எனக் கூறியிருந்தார். கட்டணமில்லா அரசு நகரப் பேருந்துகளில் பயணிக்கும் தங்களை நடத்துனர்கள் வேண்டாத வெறுப்பாக ஏற்றுவதாக பெண்கள் சிலர் முறையிட்டதால் அமைச்சர் துரைமுருகன் இந்தக் கருத்தை கூறியிருந்தார்.

எதிர்ப்பு
இந்நிலையில் அவரது கருத்துக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக திரண்ட ஓட்டுநர்களும், நடத்துனர்களும் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்கும் வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் என தெரிவித்தனர். இதனால் தஞ்சையில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிகமாக
இதனிடையே இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். காலை நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் பொதுமக்கள் நலன் கருதி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 3 மணி நேரமாக தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

போராட்டம்
வேலைக்கு செல்வோர் மற்றும் மாணவர்களுக்காக மட்டுமே தற்காலிகமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் போராட்டத்தை தொடருவோம் எனவும் போக்குவரத்துக்கழக பணிமனை நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை
அமைச்சர் துரைமுருகன் அண்மைக்காலமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ள நிலையில், வைகோவை துரோகி எனக் குறிப்பிட்டது சர்ச்சையானது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அரசுப் பேருந்து நடத்துநர்கள் குறித்து இவர் கூறியுள்ள கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications