இதுதான் தமிழ்நாடு.. ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்.. முருகர் காவடிக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள்!
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், அவ்வழியே சென்ற பங்குனி உத்திர காவடி ஊர்வத்திற்கு பாதுகாப்பாக வழிவிட்டு மதநல்லிணக்கத்தை காட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜே.எம் ஹாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கினர்.

ஹிஜாப் தீர்ப்பு
அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் போராட்டம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். மேலும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிரம்பட்டினத்திலும் போராட்டம்
இதே போல தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திர திருநாளான இன்று தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் உற்சாகத்துடன் விழா கொண்டாடப்பட்டது.

மத நல்லிணக்கம்
விழாவின் ஒரு பகுதியாக காவடி எடுத்து ஏராளமான முருக பக்தர்கள் ஊர்வலமாக நகரின் முக்கிய பகுதிகளில் சென்றனர் . அப்போது அதிராம்பட்டினம் நகர்ப்பகுதியில் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள் போராட்டத்தை நிறுத்தி முருக பக்தர்கள் காவடி ஊர்வலத்திற்கு வழிவிட்டனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இந்த நிகழ்வை பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இதுதான் தமிழ்நாடு என பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications