லண்டனில் இருந்து தோழி ஆசையாக அனுப்பிய பரிசு பொருள்.. ரூ.47 லட்சத்தை "மொய்" எழுதிய தஞ்சாவூர் பெண்
தஞ்சாவூர்: சமீபகாலமாகவே அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளுக்கு யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஊட்டி வருகிறார்கள். ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரை நூதனமாக ஏமாற்றிய சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 64 வயதாகிறது..ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இந்த பெண்ணின் செல்போனுக்கு. கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய ஒரு பெண், "நான் உன்னுடன் காலேஜில் ஒன்றாக படித்தவள், உன் தோழிதான், என்னை மறந்துட்டியா? இப்போது நான் லண்டனில் வசித்து வருகிறேன்" என்று சகஜமாக பேசினார்
லண்டன் தோழி
ஆனால் அவரை யார் என்றே தெரியாமல் பெண்மணி குழம்பியிருக்கிறார்.. அப்போதும் விடாத லண்டன் தோழி, கல்லூரியில் ஒன்றாக படித்த காலகட்டத்தையும், அப்பெண்மணியுடன் படித்த தோழி ஒருவரின் பெயரையும் சொல்லவும், அதை உண்மை என்றே பெண்மணி நம்பினார். தோழியின் பெயர், முகம் சரியாக தெரியாவிட்டாலும், அவரது பேச்சும், நெருக்கமும், பெண்மணியை எளிதில் நம்ப செய்தது.
நாளடைவில் இருவரும் வாட்ஸ்அப்பில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.. அப்போது தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும், இப்போது லண்டனில் தனியாகவே வசித்து வருவதாகவும் சொல்லி கண்ணீர் விட்டுள்ளார் லண்டன் தோழி.
இதைக்கேட்டதுமே, பெண்மணிக்கு தோழி மீது பரிதாபமும், கருணையும் அதிகமாகிவிட்டது.. நம்பகத்தன்மையும் தோழி மீது கூடிவிட்டது.
ஒருநாள் பெண்மணிக்கு போன் செய்த தோழி, உனக்காக லண்டனிலிருந்து சில கிப்ட்களை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றார்..
டுபாக்கூர் பார்சல் கம்பெனி
பிறகு லண்டன் ஏர்போர்ட்டிலிருந்த "ஏர்லைன் கார்கோ ஏஜென்சி" என்ற பார்சல் அலுவலகத்தில் இருந்து பெண்மணிக்கு போன் வந்துள்ளது.. அதில், உங்களுக்கு லண்டனில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைத்துள்ளோம்.. ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் அந்த பார்சலில் உள்ளது.. இதற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி கட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.
உடனே பெண்மணி, லண்டன் தோழிக்கு போன் செய்து, ஒன்றரை லட்சம் வரி கட்ட சொல்கிறார்களே? என்று கூறியிருக்கிறார்.. அதற்கு அந்த தோழி, பணத்தை தந்து வரியை கட்டிவிடு.. நான் இந்தியா வந்ததுமே உனக்கு பணத்தை தருகிறேன் என்று சொல்லி உள்ளார்.
ரூ.47 லட்சம் பணம்
உடனே பெண்மணியும், ஒன்றரை லட்சம் பணத்தை, சம்பந்தப்பட்ட பார்சல் ஆபீசுக்கு பேங்க் அக்கவுண்ட் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் அப்போதும் பார்சல் கிடைக்கவில்லை.. லண்டன் பணம் (பவுண்ட்) இருப்பதால், இந்திய ரூபாய் மதிப்பில் மாற்ற ரூ.2 லட்சம் கட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். பிறகு அபராத தொகை, பார்சல் இன்சூரன்ஸ் தொகை, பார்சல் உரிமையாளர் தொகை என தினுசு தினுசாக பணம் கேட்டுள்ளனர்.
பார்சல் கம்பெனியில் கேட்ட அத்தனை பணத்தையும் நம்பி, ரூ.46 லட்சத்து 91 ஆயிரத்தை அந்த தஞ்சை பெண் அனுப்பி வைத்துள்ளார்.. ஆனால் அப்போதும் பார்சல் கிடைக்கவில்லை.
பார்சல் கம்பெனி
எனவே இதுகுறித்து தோழியிடமே கேட்கலாம் என்று போன் செய்துள்ளார் தஞ்சை பெண்.. ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. சம்பந்தப்பட்ட லண்டன் பார்சல் ஆபீசுக்கும் போன் செய்துள்ளார்.. அங்கேயும் நீண்ட நாட்களாக இணைப்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டிருந்தது.
அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து அதிர்ச்சியடைந்தார் பெண்மணி.. லண்டனில் உள்ள அந்த பார்சல் கம்பெனியும் போலியானது என்பது தெரியவந்தது.
உடனடியாக தஞ்சை மாவட்ட மாவட்ட சைபர் கிரைம் போலீசுக்கு ஓடினார்.. நடந்த சம்பவத்தை சொல்லி புகாரும் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications