விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார்- பழ.நெடுமாறன் பரபர அறிவிப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; விரைவில் வெளியே வருவார் என அறிவித்துள்ளார் பழ.நெடுமாறன்.
தஞ்சாவூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார்; பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. இதற்கு சான்றாக பிரபாகரன் உடல் என ஒன்றும் காட்டப்பட்டது.

அன்று முதல் பிரபாகரன் குறித்து மாறுபட்ட பல தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பிரபாகரன் இறந்தது உண்மை என ஒருதரப்பும் இல்லை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என ஒருதரப்பும் கூறி வந்தன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்தன.
இந்நிலையில் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என கூறினார்.
பின்னர் இது தொடர்பான அறிக்கையை பழ.நெடுமாறன் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம். இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பூடகமாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருந்தார். அதில், #பதுங்கியிருக்கும் புலி பாய்ச்சலில் வரும்
பதுங்கியிருந்து தக்க சமயத்தில் எந்தக் கோணத்தில் இருந்து பாய்ந்தும், தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி பாய்ந்தும், தாவும் திறனைப் பெற்றுள்ளது. அது, 10 மீ., வரை தாவியுள்ளதாக தகவல். #வேலுப்பிள்ளை பிரபாகரன் Velupillai Prabhakaran என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications